Saturday, August 05, 2017

சாதிக்கொரு மயானம் ஈழத்தமிழரின் சாபம்!

படத்திற்கு நன்றி: புத்தூா் கலைமதி மக்கள் ஒன்றியம் 

புத்தூரில் போராடும் மக்களுக்கு தோழமையுள்ள வணக்கம்,

யாழ்ப்பாணம், புத்தூர் மக்களின் மயானம் அகற்றக் கோரும் போராட்டம் இன்றுடன் 25 வது நாட்களாக (05.08.2017) தொடர்கின்றது. தீர்வு வரும் வரையில் போராட்டத்தை கைவிடாத புத்தூர் மக்களின் தளராத மனவுறுதிக்கு தலை வணங்குகிறேன்.

பத்தாயிரம் மைல்களுக்கு அப்பால் எந்த நாட்டில் வாழ்ந்தாலும், எமது போராட்டம் ஒன்று தான். பாட்டாளிமக்களுக்கு தேசம் கிடையாது. சர்வதேச ஒருமைப்பாட்டுடன், ஒருமுனைப்பான போராட்டங்களின் மூலமே எமது உரிமைகளை வென்றெடுக்க முடியும்.

யாழ்ப்பாணத்தில், இதுவரையில் பல விதமான கோரிக்கைகளுக்கான ஆர்ப்பாட்டங்கள் நடந்துள்ளன. அவை பெரும்பாலும் மத்தியதர வர்க்க உத்தியோகஸ்தர்களின் நன்மை கருதி சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் நடைபெறும். ஆனால், புத்தூர் மக்களின் போராட்டம் 25 வது நாட்களாக தொடர்வது குறிப்பிடத் தக்கது.

உழைக்கும் வர்க்க மக்களுக்கு வாழ்க்கையே ஒரு போராட்டம் தான். அதனால் தான் அவர்கள் நாட்கணக்காக அல்லாது மாதக் கணக்காக போராட முன்வருகிறார்கள். அவர்களும் வேலைப் பளு காரணமாக ஒரு நாள் ஆர்ப்பாட்டம் செய்து விட்டு சென்றிருக்கலாம். அத்தகைய ஒரு நாள் போராட்டம் எந்தத் தீர்வையும் தராது என்பதை அனுபவத்தில் உணர்ந்திருக்கிறார்கள்.

கேப்பாபிலவு மக்களின் போராட்டம் போன்று, புத்தூர் மக்களின் போராட்டமும் உழைக்கும் மக்களின் போராட்டம் தான். அதனால் தான் வீரியத்துடன் முன்னெடுக்கப் படுகின்றது. அதனை முன்னின்று ஏற்பாடு செய்த சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பின் அர்ப்பணிப்புடன் கூடிய தலைமைத்துவமும் முக்கியமானது.

உலக வரலாறு முழுவதும், போராடுவதன் மூலமே மக்கள் தமது உரிமைகளை வென்றெடுத்து இருக்கிறார்கள். இங்கிலாந்து போன்ற பணக்கார நாடாக இருந்தாலும், இலங்கை போன்ற ஏழை நாடாக இருந்தாலும், உழைக்கும் மக்கள் ஒருமுனைப்பான வர்க்க உணர்வுடன் போராடி வருகின்றனர். அந்த வகையில் புத்தூர் மக்களின் போராட்டமும் முக்கியத்துவம் பெறுகின்றது.

இது வெறும் மயானப் பிரச்சினை தானே என்று நாம் கடந்து சென்று விட முடியாது. மக்கள் விரோதிகள் பலவிதமான அவதூறுகளை பரப்பிக் கொண்டிருப்பார்கள். இது போன்ற போராட்ட அனுபவங்களில் இருந்து தான், மக்கள் தமது நண்பர்களையும், எதிரிகளையும் இனங்கண்டு கொள்கின்றனர்.

ஒரு தெற்காசிய நாடான இலங்கையில் உழைக்கும் மக்களின் வர்க்கப் போராட்டம் மட்டுமே சாதிப் பாகுபாடுகளையும் ஒழித்துக் கட்டும். மயானத்தை அண்டிய குடியிருப்புகள் தாழ்த்தப் பட்ட சாதியினருடையவை என்பதால், உயர்த்தப் பட்ட சாதியினர் ஒதுங்கிக் கொள்கிறார்கள். படித்தவர்கள் கூட விதண்டாவாதம் செய்கிறார்கள்.

"இது ஒரு அரசியல் பிரமுகரின் தனிப்பட்ட பிரச்சினை" என்று அவதூறு பரப்பியவர்களையும் எமக்குத் தெரியும். யாழ்ப்பாணத்தில் பல இடங்களில் மக்கள் குடியிருப்புகளுக்கு மத்தியில் மயானம் இருப்பதை வேண்டுமென்றே மறைக்கிறார்கள். எதற்காக புத்தூர் மக்கள் மட்டுமே போராட வேண்டும்?

சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பின் செயற்பாடுகள் புத்தூரை மையப் படுத்தியதாக இருப்பதும் ஒரு காரணமாக இருக்கலாம். ஆனால், அந்த அமைப்பு மலையகத்திலும் நடத்திய போராட்டங்களுடன் ஒப்பிட்டால், இது இலங்கை முழுவதும் உள்ள உழைக்கும் மக்களின் உன்னதமான போராட்டத்தின் ஓர் அங்கம் என்ற உண்மை துலக்கமாகும்.

"முட்டையில் இருந்து கோழி வந்ததா? கோழியில் இருந்து முட்டை வந்ததா?" என்று கேட்பதைப் போன்று தான், மயானப் பிரச்சினையை மறுப்பவர்களின் வாதங்கள் அமைந்துள்ளன. "மக்கள் குடியிருப்புகளுக்குள் மயானம் வந்ததா? மயானத்திற்குள் மக்கள் குடியிருப்புகள் வந்தனவா?" என்று கேட்கிறார்கள்.

மக்கட்தொகைப் பெருக்கம் காரணமாக இடப்பற்றாக்குறை ஏற்படுவதொன்றும் புதினம் அல்ல. அபிவிருத்தி காரணமாக பல கிராமங்கள் நகரங்களாக மாறிக் கொண்டிருக்கின்றன. காணிகளின் விலைகள் உயர்ந்து கொண்டிருக்கின்றன. அத்தகைய காலத்தில், மக்கள் குடியிருப்புகளுக்கு அருகில் உள்ள மயானத்தை வேறு இடத்திற்கு மாற்றுமாறு கோருவதும் நியாயமானது தான்.

பிணங்கள் எரிக்கப் படும் இந்து மயானங்களில் இருந்து வரும் புகை சுற்றுச் சூழலை மாசுபடுத்துவதுடன், உடல் உபாதைகளையும் உண்டாக்க வல்லது. இது பற்றியும் கவனம் செலுத்த வேண்டும். தனது பிரஜைகளின், ஆரோக்கியமான வாழ்வை உறுதிப் படுத்துவது அரசின் கடமை. அது மத்திய அரசாக இருந்தாலும், மாகாண அரசாக இருந்தாலும் கடமையை தட்டிக் கழிக்க முடியாது.

கொழும்புக்கு அருகில் மீதொட்டமுல்லையில் குவிக்கப் பட்ட குப்பை மேடு சரிந்து விழுந்து, அருகில் குடியிருந்தவர்களை வீட்டுக்குள் சமாதியாக்கியது. இந்த துயர சம்பவம் சர்வதேச கவனத்தைப் பெற்றிருந்தது. அதற்கு முன்னரே குப்பைகளை அங்கிருந்து அகற்றுமாறு குடியிருப்புகளில் இருந்த மக்கள் போராடி வந்திருக்கின்றனர். அதையெல்லாம் அரசும், ஊடகங்களும் புறக்கணித்து வந்தன. அதன் விளைவு தான் அந்த துயர சம்பவம்.

இலங்கை அரசியல்வாதிகள் யாரும் தவறுகளில் இருந்து எதையும் கற்றுக் கொள்வதில்லை. புத்தூர் மக்களும், மீதொட்டமுல்லை மக்களைப் போன்று சுற்றுச்சூழல் மாசடையும் காரணத்தை சுட்டிக் காட்டித் தான் போராடிக் கொண்டிருக்கிறார்கள். தமது மயானம் அகற்றும் கோரிக்கைக்கு நியாயமான காரணங்களை குறிப்பிட்டு, எழுத்து வடிவில் மகஜர்களை அனுப்பியுள்ளனர். வட மாகாண சபை உட்பட, பாராளுமன்ற உறுப்பினர்களிடம் கையளித்துள்ளனர். ஆனால், இன்று வரையில் யாரிடம் இருந்தும் பதில் இல்லை.

புத்தூர் மக்களின் போராட்டம் வெற்றி அடைவதற்கு உறுதுணையாக இருப்போம். அரசியல்வாதிகள் மக்களின் சேவகர்கள் என்ற உண்மையை உணர வைப்போம். மக்களின் நியாயமான கோரிக்கைகளை ஏற்றுக் கொள்ளாத பாராளுமன்ற, மாகாண சபை உறுப்பினர்களை, வாக்களித்த மக்கள் திருப்பி அழைக்கும் அதிகாரம் கைவர வேண்டும். புத்தூர் மக்களின் போராட்டமும், மக்கள் ஜனநாயக கட்டமைப்பிற்கான போராட்டமும் வேறு வேறல்ல.

தோழமையுடன், 
 கலையரசன் 
 நெதர்லாந்து 
 5-8-2017


புத்தூர் மயானப் பிரச்சினை தொடர்பாக முன்னர் எழுதிய பதிவு:

சாதிக்கொரு மயானம் ஈழத்தமிழரின் சாபம்! 

விடுதலைப் புலிகளை பின்பற்றுவதாக சொல்லிக் கொள்ளும் தூய தமிழ்தேசியவாதிகளே!! 
மக்கள் குடியிருப்புகளுக்கு மத்தியில் உள்ள மயானங்களை அகற்ற வாருங்கள்!!!

விடுதலைப் புலிகளில் பெரும்பான்மையான போராளிகள் இந்துக்களாக இருந்த போதிலும், இறந்த பின் அவர்களது உடல்களை எரிக்காமல் புதைக்கும் வழக்கம் இருந்தது. ஆனால், புலிகளை ஆதரிப்பதாக சொல்லிக் கொள்ளும் பலர், சாதியம் காப்பாற்றும் இந்து மயானங்கள் இருப்பதை அங்கீகரிக்கும் முரண்நகையை காணக்கூடியதாக உள்ளது.

யாழ்ப்பாணம் புத்தூர் கிராமத்தில், மக்கள் குடியிருப்புகள் மத்தியில் உள்ள இந்து மயானத்தை அகற்றுமாறு போராட்டம் நடக்கிறது. பிணங்கள் எரிக்கப்படுவதால் சுற்றுச் சூழல் மாசடைவைதையும் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். அந்தக் காரணத்தைக் காட்டியே, மேற்கு ஐரோப்பாவில் மின் தகன முறை கொண்டு வந்தார்கள். அதை இந்துக்கள் மட்டுமல்லாது, கிறிஸ்தவ மத நம்பிக்கையற்ற பூர்வீக மக்களும் பயன்படுத்துகிறார்கள்.

அதே நேரம், யாழ்ப்பாணத்தில் இன்னமும் சாதிக்கொரு மயானம் இருப்பதும் குறிப்பிடத் தக்கது.

இது ஒரு சாபக்கேடு. "தமிழ்த்தேசியத்தில் சாதி இல்லை" என்று சொல்லித் திரிவோர், சாதிக்கொரு மயானம் இருப்பதை கண்டுகொள்ளாமல் விட்டது எப்படி? புலிகளின் நடைமுறை தமிழீழ அரசு இருந்த காலத்திலேயே அகற்றி இருக்க வேண்டாமா?

அது மட்டுமல்லாது, மயானத்தை அகற்றுமாறு பொது மக்கள் நடத்தும் போராட்டங்களை கொச்சைப் படுத்தியும் வருகின்றனர். ஆதிக்க சாதிப் பத்திரிகையான யாழ் உதயன், "ஒரு கட்சி பின்னால் இருந்து வன்முறையை தூண்டி விடுகின்றது" என்று விஷமத்தனமாக எழுதியது. அத்துடன் மக்கள் போராட்டத்தை நசுக்குவதற்கு சிங்களப் பொலிஸ் எடுத்த வன்முறை நடவடிக்கையை பாராட்டி எழுதியது. வெளிப்படையாகவே சிங்கள அரசின் அடக்குமுறையை ஆதரித்தது. இது தானா உதயனின் தமிழ்த் தேசியம்?

"மக்கள் குடியிருப்புக்குள் மயானம் இருக்கவில்லை. மயானத்தின் அருகில் மக்கள் குடியிருக்கிறார்கள்." என்று வாதாடுவோர் பலருண்டு. உலகில் எந்த நாடாக இருந்தாலும் மக்கட்தொகைப் பெருக்கம் இயற்கையானது. அதற்கு ஈடுகொடுக்க முடியாதவாறு இடநெருக்கடி ஏற்படுவதும் வழமை. ஆனால், அதற்காக மயானத்தை அகற்றக் கூடாது என்று வாதாடுவதில் என்ன நியாயம் இருக்கிறது?

மயானம் சம்பந்தமான விடயத்தில் சாதியம் இல்லையென்றால், அதை அகற்றுவதில் ஏனிந்த தயக்கம்? அது மட்டுமல்ல, இன்றைக்கும் ஈழத் தமிழர்கள் எல்லோரும், கவனிக்கவும் "எல்லோரும்", விடுதலைப் புலிகளை ஆதரிப்பவர்களாகவும், பின்பற்றுவோராகவும் உள்ளனர் என்று சொல்லிக் கொள்கிறார்கள்.

அப்படியானால், புலிகளை பின்பற்றி இறந்தவர்களை புதைக்கும் வழக்கத்தை கொண்டு வந்தால் சுற்றுச் சூழல் மாசடைவதை தடுக்கலாமே? புலிகளின் "மாவீரர் துயிலும் இல்லம்" மாதிரி, "மாண்டவர் துயிலும் இல்லம்" என்று சில இடங்களை ஒதுக்கி, அங்கு இறந்தவர்களை கொண்டு சென்று புதைக்கலாம். இதனால் சுற்றுச் சூழலை பாதுகாப்பதுடன், மயானத்தை சாதிப் பாகுபாடற்ற சமரசம் நிலாவும் இடமாகவும் காட்டிக் கொள்ளலாம். செய்வீர்களா தமிழ்த் தேசியவாதிகளே?
 (12-7-2017)

(பிற்குறிப்பு: இவ்விரண்டு கட்டுரைகளும் புத்தூரில் போராட்டம் நடத்தும் மக்களுக்கு முன்னிலையில் வாசிக்கப் பட்டன.)

Tuesday, August 01, 2017

ALO : ஆப்கானிஸ்தான் மாவோயிஸ்ட் விடுதலை இயக்கம் - சில குறிப்புகள்


ஆப்கானிஸ்தானில் இருந்த சோஷலிச அரசையும், சோவியத் படைகளையும், இஸ்லாமிய முஜாகிதீன்கள் எதிர்த்துப் போராடிய வரலாற்றை எல்லோரும் அறிந்து வைத்திருக்கிறார்கள். ஆனால், முஜாகிதீன் குழுக்களுடன் சேராத ஒரு மதச் சார்பற்ற இயக்கமும் அரசை எதிர்த்துப் போராடியது. அதுவும் "கம்யூனிசத்தின் பெயரால், கம்யூனிச அரசை எதிர்த்து போராடியது." என்ற தகவல் பலருக்கு அதிர்ச்சியாக இருக்கலாம்.

அதன் பெயர் "ஆப்கானிஸ்தான் விடுதலை இயக்கம்" (ALO). அவர்கள் தம்மை மாவோயிச கம்யூனிஸ்டுகள் என்று சொல்லிக் கொண்டனர். ஆனால் உண்மையில் அது ஒரு மதச் சார்பற்ற தேசியவாத அமைப்பாகவே இயங்கியது. வெளிப் பார்வைக்கு கம்யூனிச புரட்சிகர கோஷங்களை முழங்கிக் கொண்டிருந்தது.

ALO இன்னொரு முஜாகிதீன் குழு அல்ல. ஆனால் அது கம்யூனிசப் புரட்சி இயக்கமும் அல்ல. உள்நாட்டு தேசிய பூர்ஷுவா வர்க்கத்தினரைக் கொண்டிருந்தது. அவர்களுக்கென்று ஒரு இராணுவப் பிரிவு இருந்தது. அதில் பெண்களையும் போராளிகளாக சேர்த்துக் கொண்டனர். (இஸ்லாமிய கடும்போக்கு முஜாகிதீன் இயக்கங்களில், பெண் போராளி என்ற கதைக்கே இடமில்லை.) சோவியத் ஆதரவு ஆப்கான் படைகளுக்கு எதிராக சில தாக்குதல்களை நடத்தி உள்ளனர். இருப்பினும் அந்த இயக்கம் பற்றி மேற்கத்திய நாடுகள் அக்கறை காட்டவில்லை. அமெரிக்கா இஸ்லாமிய மத அடிப்படைவாதிகளை ஆதரித்து வந்தது.

ALO அயல்நாடான சீனாவுடன் தொடர்பினை ஏற்படுத்தி இருந்தது. சீனாவும் அந்த இயக்கத்திற்கு ஆயுத தளபாடங்கள் வழங்கியது. ALO வின் புரட்சிகர கொள்கை விளக்கங்கள் எல்லாம், அன்று சீனாவிடம் கற்ற பாடங்கள் தான். மாவோ இறந்து ஓரிரு வருடங்களே ஆகி இருந்ததால், அன்றைய சீனாவில் மாவோவின் கொள்கைகள் இன்னமும் மதிக்கப் பட்டு வந்தன. மாவோ வகுத்த "சமூக-ஏகாதிபத்திய கோட்பாட்டை" ALO பின்பற்றியது. (மாவோவின் கோட்பாடு அன்றைய ஆப்கானிஸ்தான் நிலைமைக்கு கன கச்சிதமாகப் பொருந்தியது.)

ஸ்டாலினின் மரணத்திற்கு பின்னர், குருஷேவ், பிரஷ்னேவ் போன்ற ஆட்சியாளர்களின் காலத்தில், சோவியத் யூனியன் ஒரு சமூக - ஏகாதிபத்தியமாக செயற்படுவதாக, மாவோ குற்றஞ் சாட்டினார். அதாவது சோவியத் யூனியன் சோஷலிசம் பேசிக் கொண்டே ஒரு ஏகாதிபத்தியமாக நடந்து கொண்டது. ஆப்கானிஸ்தானில் நடந்த சோவியத் படையெடுப்பு அதனை உறுதிப் படுத்தியது. ஆகவே, "சோவியத் சமூக - ஏகாதிபத்தியத்தை எதிர்த்து போராடுவதாக" ALO அறிவித்துக் கொண்டது.

சீனா ALO வுக்கு உதவி செய்வதற்கு, பூகோள அரசியல் காரணம் ஒன்றிருந்தது. சீனாவின் மேற்குப் பிராந்திய மாநிலத்தில் வாழும் உய்கூர் மக்களின் பிரிவினைப் போராட்டம் சீனாவுக்கு தலையிடியாக அமைந்திருந்தது. இஸ்லாமிய மதத்தை பின்பற்றும், துருக்கி மொழி பேசும் உய்கூர் மக்கள், ஆப்கான் இனங்களுடன் சகோதர உறவு முறை கொண்டாடினர். 

அந்தக் காலத்தில், ஆயிரக் கணக்கான உய்கூர் போராளிகள் ஆப்கானிஸ்தானில் சண்டையிட்டுக் கொண்டிருந்தனர். ஆப்கான் போர்க்களத்தில் அனுபவத்தை பெற்றுக் கொண்டு, சீனாவுக்கு திரும்பிச் சென்று போராட விரும்பினார்கள். ஆகவே, ALO ஆப்கானிஸ்தானின் ஆட்சியை கைப்பற்றினால், அங்கிருக்கும் உய்கூர் போராளிகளை வெளியேற்றுவதாக உறுதிமொழி அளித்தனர். அந்த நோக்கத்தை நிறைவேற்றுவதற்காகத் தான் சீனாவும் உதவியது.

துரதிர்ஷ்டவசமாக, சோவியத் படைகள் வெளியேறிய இறுதிக் காலத்தில், ALO மிகப் பெரிய பின்னடைவை சந்தித்தது. ஒரு முஜாகிதீன் குழுவுக்கு தலைமை தாங்கிய மசூத்தின் பாதுகாப்பை கோர வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. ஆனால், மசூத் அல்லது வேறு யாராவது, அந்த இயக்கத்தை அழிப்பதற்கு திட்டம் தீட்டி இருக்கிறார்கள். வட கிழக்கே மசூத்தின் கட்டுப்பாட்டில் இருந்த நகரில் இருந்து, வட மேற்கே தொஸ்தம் என்ற தளபதியின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்திற்கு பிரயாணம் செய்த நேரம் தான் அந்த அசம்பாவிதம் நிகழ்ந்தது.

ALO இயக்கத் தலைவர்கள் அனைவரும் ஒரு விமானத்தில் (அந்த இயக்கத்தினர் தமது சொந்த ஹெலிகாப்டர் என்று கூறுகின்றனர்) ஏறிச் சென்றுள்ளனர். விமானம் தரையிறங்கும் நேரம், பாரிய குண்டு ஒன்று வெடித்ததால், ALO தலைவர்கள் அனைவரும் ஸ்தலத்திலேயே கொல்லப் பட்டனர். 

தற்போது, ஆப்கானிஸ்தானில் ALO வின் செயற்பாடுகள் ஏறக்குறைய ஸ்தம்பிதமடைந்து விட்டன. பெரும்பாலான ALO உறுப்பினர்கள், அகதிகளாக புலம்பெயர்ந்து வாழ்கின்றனர். (அவர்கள் மூலம் தான், எனக்கு இந்தத் தகவல்கள் கிடைத்தன.) 

ஆப்கானிஸ்தான் கம்யூனிஸ்டுகளின் செயற்பாடுகள், சர்வதேச ஊடகங்களால் தொடர்ச்சியாக இருட்டடிப்பு செய்யப் பட்டு வருகின்றன. இதற்கு இன்னொரு உதாரணத்தையும் காட்டலாம். 2000- 2001ம் ஆண்டு, ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் பெண்களை கொடுமைப் படுத்துவது பற்றிய வீடியோ ஒன்றை, CNN உட்பட பல மேற்குலக தொலைக்காட்சிகள் அடிக்கடி ஒளிபரப்பின. 

தாலிபான் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் அந்த வீடியோவை எடுத்து உலகிற்கு அறிவித்தவர்கள், Revolutionary Association of the Women of Afghanistan (RAWA) என்ற, மார்க்சிய பெண்கள் அமைப்பை சேர்ந்தவர்கள் என்ற உண்மையை மட்டும் வேண்டுமென்றே இருட்டடிப்பு செய்து விட்டனர். 

உலகம் முழுவதும், "இஸ்லாமிய நாடுகள்" என்று அழைக்கப்படும் நாடுகளில் கூட, இன/மதவாத சக்திகளுக்கு எதிராக மார்க்சிஸ்டுகள் போராடிக் கொண்டிருக்கிறார்கள். ஏகாதிபத்திய ஊடகங்களின் தணிக்கையையும் மீறி அந்த செய்தி உலக மக்களை போய்ச் சேர்ந்து கொண்டிருக்கும். 

Monday, July 31, 2017

மலையகத் தமிழரை பிரிக்கும் யாழ் சைவ வேளாள மேலாதிக்கவாதிகள்


வட இலங்கையில், ஈழத்தமிழர்களையும், முஸ்லிம்களையும் பிரித்த அதே தீய சக்திகள், தற்போது மலையகத் தமிழ் மக்களையும் பிரிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளன. இது காலங்காலமாக தொடரும் வழமையான "யாழ் சைவ-வேளாள மையவாத சிந்தனை" தான். அது குறித்து ஆச்சரியப் பட எதுவும் இல்லை.

ஆயினும், பொது மக்கள் விழிப்பாக இருந்து, இந்த தீய சக்திகள் விரிக்கும் வலைகளில் விழ விடாமல் தடுக்க வேண்டியது அவசியம். தேர்தல் அரசியலில் இனவாதம் பேசி வாக்குகளை அறுவடை செய்யும் மூன்றாந்தர அரசியல்வாதிகளின் சூழ்ச்சிகளில் அகப்படாமல் தப்ப வேண்டும்.

கிளிநொச்சி நகரிலும், அதை அண்டிய பகுதிகளிலும் மலையகத் தமிழர்கள் கணிசமான அளவில் வாழ்கின்றனர். சரியான கணக்கெடுப்பு இல்லாவிட்டாலும், 30% - 40% அளவில் இருக்கலாம் எனத் தெரிய வருகின்றது. மலையகப் பகுதிகளில் எழுபதுகளில் நடந்த கலவரங்களை அடுத்து அகதிகளாக இடம்பெயர்ந்து குடியேறியவர்கள். அவர்களது இரண்டாவது, மூன்றாவது தலைமுறையினர் சுத்தமான யாழ்ப்பாணத் தமிழ் பேசுவது மட்டுமல்லாது, வன்னியை தாயகமாக்கிக் கொண்டவர்கள்.

ஈழப்போர் நடந்த காலத்தில், விடுதலைப் புலிகள் இயக்கத்தில் கணிசமான அளவில் மலையகத் தமிழ்ப் போராளிகள் இணைந்திருந்தனர். தலைவர் பிரபாகரனின் மெய்ப்பாதுகாவலர்களாக கூட இருந்துள்ளனர். போராளிகளில் மலையகத் தமிழர் எவ்வளவு என்ற சரியான எண்ணிக்கை தெரியாது. அது பற்றிய தரவுகளும் இல்லை. இருப்பினும் புலிப் போராளிகளில் பெரும்பான்மையானோர், ஒன்றில் கிழக்கு மாகாணத்தை சேர்ந்தவர்கள் அல்லது வன்னியை சேர்ந்த மலையகத் தமிழர்கள். போர் நடந்த காலத்தில் களப்பலியான மாவீரர்களின் குடும்பங்களை கணக்கெடுத்தால் தெரியும்.

விரைவான நகரமயமாக்கல் நடக்கும் பகுதிகளில் கிளிநொச்சி பிரதானமானது. வடக்கே பரந்தன் சந்தி முதல் தெற்கே இரணைமடு குளம் வரையில் விரிந்த பெரியதொரு நகரம் உருவாகிக் கொண்டிருக்கிறது. புதிதாக கட்டப்பட்ட ஜெர்மன் தொழில்நுட்பக் கல்லூரி, பலகலைக் கழக விவசாய பீடம் என்பன பல பிரதேசங்களில் இருந்தும் மாணவர்களை தருவிக்கவுள்ளது. அதைவிட, வட இலங்கை உழைக்கும் வர்க்க மக்களை சுரண்ட வரும் சுதந்திர வர்த்தக வலையத் தொழிற்சாலைகள், தொழில் வாய்ப்புகளை உருவாக்கப் போகின்றது.

கிளிநொச்சியில் மூன்று வர்க்க அடிப்படை கொண்ட சமூக அமைப்பு வெளிப்படையாக தெரியும் வண்ணம் உள்ளது. பெரும் முதலீட்டு நிறுவனங்களை பிரதிநிதித்துவப் படுத்தும் சிங்கள முதலாளிகளும், வெளிநாட்டவரும் (இதற்குள் மேற்கத்திய NGO நிர்வாகிகளும் அடக்கம்) மேல்தட்டு வர்க்கமாக உள்ளனர். அதற்கு அடுத்த நிலையில், நிலவுடமையாளர்கள், பண்ணையார்கள், விவசாய முதலாளிகள், மத்தியதர வர்க்க ஊழியர்களாக யாழ்ப்பாணத் (ஈழத்) தமிழர்கள் உள்ளனர். அடித்தட்டு உழைக்கும் வர்க்கமாக உள்ளவர்கள் பெரும்பாலும் மலையகத் தமிழர்கள் தான்.

பாரதிபுரம் போன்ற பல கிராமங்கள் மலையகத் தமிழருக்காக ஒதுக்கப் பட்டதைப் போன்றுள்ளன. அந்தக் கிராமங்கள் தற்போதும் பின்தங்கி இருக்கின்றன. 2016 ம் ஆண்டு, அக்டோபர் மாதமளவில், பாரதிபுரம் கிராமத்தில், மலையகத் தமிழ்ப் பிள்ளைகள் படிக்கும் பாடசாலையில் அசம்பாவிதம் ஒன்று நடைபெற்றது. வறுமை காரணமாக சப்பாத்து (காலணி) அணிந்து வராத மாணவர்களை அவமானப் படுத்திய பாடசாலை அதிபர், அவர்களது செருப்புக்களை வீதியில் வீசியிருந்தார்.

ஊடகங்களின் கவனத்தை ஈர்த்த இந்தச் சம்பவம், பாரதிபுரம் மக்களின் தன்னெழுச்சியான போராட்டத்தை தூண்டி விட்டது. அந்த அதிபரும் யாழ் மையவாத சிந்தனை கொண்ட மேலாதிக்கவாதி தான். சாதாரண மக்களுக்கு வர்க்க முரண்பாடுகள் புரியாது. அவர்களுக்கு தெரிந்த வகையில் தான் எதிர்வினையாற்றுவார்கள். அந்த வகையில், யாழ் மையவாதிகளின் மேலாதிக்கத்தை எதிர்க்கும் மலையகத் தமிழரின் போராட்டமாக அது அமைந்து விட்டது. ஆணவத்துடன் நடந்து கொண்ட குறிப்பிட்ட அதிபர், பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரனுக்கு (தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு) நெருக்கமானவர் என்று கேள்விப் பட்டேன்.

நான் முன்னர் குறிப்பிட்ட படி, அதிபர்கள், ஆசிரியர்கள் போன்ற மத்தியதர வர்க்க வேலைகளில் இருப்பவர்கள் யாழ்ப்பாணத் தமிழர்கள் தான். அதற்காக அவர்கள் எல்லோரும் பூர்ஷுவா மனப்பான்மை, அல்லது யாழ் மையவாத சிந்தனை கொண்டவர்கள் என்று அர்த்தம் அல்ல. ஏழை மலையகத் தமிழ் மாணவர்களை ஊக்குவித்து படிக்க வைத்த ஆசிரியர்கள், அதிபர்களும் இருக்கிறார்கள். குறிப்பாக, எனது சித்தப்பா ஒருவரும் கிளிநொச்சியில் பாடசாலை அதிபராக இருந்தவர் தான். அவரது பதவிக் காலத்தில் இது போன்ற வர்க்கப் பிரச்சினைகள் எழவில்லை.

ஆகவே, இந்தப் பின்னணியில் தான், மலையகத் தமிழருக்கு எதிரான அண்மைய பிரச்சனைகளை பார்க்க வேண்டும். ஊடகவியலாளர் ஒருவருடான பதிவு செய்யப்பட்ட தொலைபேசி உரையாடலில், பா.உ. சிறிதரன் மலையகத் தமிழரை ஏளனமாகக் குறிப்பிடும் "வடக்கத்தியான்" என்ற வசைச் சொல்லை பயன்படுத்தி இருந்தார். வடக்கே இந்தியாவில் இருந்து வந்தவர்கள் என்ற பொருளில் சொல்லப் படும் "வடக்கத்தியான்" என்ற வசைச் சொல், யாழ் மையவாதிகள் மத்தியில் சர்வ சாதாரணமாகப் புழங்குகின்றது. "வயிற்றுக்குத்தை நம்பினாலும் வடக்கத்தியானை நம்பாதே!" என்று பழமொழி மாதிரி சொல்லிக் கொள்வார்கள்.

அது ஒரு புறமிருக்க, பேஸ்புக்கில் மலையகத் தமிழர் மீது இனத்துவேசம் பாராட்டும் வீடியோ ஒன்று தீய வழியில் பிரபலமானது. ஜெர்மனியில் புலம்பெயர்ந்து வாழும் கச்சாய் சிவம் என்ற நபர், "சைவ வேளாளன்... ஒரிஜினல் ஈழத்தமிழன்..." என்று தன்னை அறிமுகப் படுத்திக் கொள்கிறார். "மலையகத் தமிழர்கள் இந்தியர்கள், அவர்களும் முஸ்லிம்கள் மாதிரி சிங்களவனுக்கு அடிவருடுபவர்கள்... தோட்டக் காட்டார்கள்..." என்று வசைபாடினார். அதை விட மலையகத் தமிழ்ப் பெண்கள் "விபச்சாரிகள்" என்றும் அபாண்டமாக பழி போட்டார். ஆகவே இது மலையகத் தமிழர்கள் மத்தியில் ஆத்திரத்தை தூண்டியதில் வியப்பில்லை. அந்தக் கச்சாய் சிவம் என்ற மனநோயாளி, கிளிநொச்சி பா.உ. சிறிதரனின் உறவினர் என்று சொல்லப் படுகின்றது.

இதிலே கவனிக்கப்பட வேண்டியது என்னவென்றால், "தமிழர்கள் எல்லோரும் ஓரினம்" என்று தமிழ்த்தேசியம் பேசும் அரசியல் ஆர்வலர்கள் யாருமே இதைக் கண்டிக்கவில்லை. வன்னியில் வாழும் மலையக மக்கள் தமது உரிமைகளைப் பற்றிப் பேசினால், "இனத்தைப் பிரிக்கும் சிங்களவனின் சூழ்ச்சி" என்று கம்பு சுற்றுவதற்கு நிறையப் பேர் வருவார்கள், வந்தார்கள். மலையகத் தமிழ் மக்களின் அவலநிலை பற்றி எழுத்தாளர் தமிழ்க்கவி எழுதிய கட்டுரையை, கிளிநொச்சி நகர சபை இதழில் பிரசுரிக்க மறுத்தார்கள். சமூக வலைத் தளங்களில் தமிழ்க்கவியை மிரட்டும் வண்ணம் திட்டித் திட்டிப் பதிவிட்டனர்.

போலித் தமிழ்த் தேசியவாதிகள், தமிழினவாதிகள் யாருமே, மலையகத் தமிழருக்கு எதிரான கச்சாய் சிவத்தின் இனத்துவேச பேச்சைக் கண்டிக்கவில்லை. "தமிழர்களின் ஐக்கியத்தைக் குலைக்கும் சிங்கள கைக்கூலி கச்சாய் சிவம்" என்று பொங்கி எழவில்லை. இதிலிருந்தே அவர்கள் மனதிலும் அழுக்கு இருக்கிறது என்பது புலனாகின்றது. 

யாழ்ப்பாணத்து கனவான்கள் அறைக்குள் பேசுவதை, அந்த மனநோயாளி அம்பலத்தில் சொல்லி விட்டான். அது மட்டுமே வித்தியாசம். யாழ் மையவாத மேலாதிக்க வாதிகளுக்கென அடிப்படையான சில குணங்கள் உள்ளன. அவை என்றைக்குமே மாறாதவை. மலையகத் தமிழர்கள், முஸ்லிம்களுக்கு எதிரான இனவெறி ஒரு பக்கம். தாழ்த்தப் பட்ட சாதியினருக்கு எதிரான சாதிவெறி மறுபக்கம். அது இரண்டும் சேர்ந்த கலவை தான், வலதுசாரி தமிழ்த் தேசியவாதிகளின் பம்மாத்து அரசியல்.

Wednesday, July 19, 2017

இஸ்ரேலியர்கள் புத்திசாலிகள் என்ற இனவாதப் பிரச்சாரம்


[தமிழர்களை யூதர்களுடன் ஒப்பிட முடியுமா?](பகுதி : பன்னிரண்டு)
"உலகில் உள்ள மற்ற எல்லா இனங்களையும் விட, யூதர்கள் புத்திசாலிகள், திறமைசாலிகள்." இந்த தவறான கருத்தை இன்றைக்கும் நம்பிக் கொண்டிருக்கும் அப்பாவிகள் இருக்கிறார்கள். படித்தவர் முதல் பாமரர் வரை, யூதர்கள் குறித்த மூடநம்பிக்கையை கொண்டுள்ளனர். உலகிலேயே அறிவுக்கூர்மை அதிகம் கொண்ட இனமான யூதர்கள் எதையாவது கண்டுபிடித்து மனித குலத்திற்கு வழங்கி இருக்கிறார்களா? காகிதம், வெடிமருந்து, பட்டுத் துணி, போன்றவற்றை கண்டுபிடித்தவர்கள் சீனர்கள். யூதர்கள் கண்டுபிடித்ததாக கூறக்கூடிய ஒரே விடயம் மதம் சார்ந்தது. "பல தெய்வ வழிபாட்டை நிராகரித்து, ஒரே கடவுளை வழிபடும் மதத்தை தோற்றுவித்தார்கள்," என்று கூறலாம். ஆனால் யூதர்களுக்கு முன்னரே பாபிலோனியாவில் ஓரிறைக் கொள்கை இருந்துள்ளது. பாரோ மன்னர்கள் ஆண்ட எகிப்தில், ஆமன் என்ற ஒரே கடவுளை வழிபடும் மதம் சிறிது காலம் அரச மதமாக இருந்தது.

இதனை வாசித்துக் கொண்டிருக்கும் சில நண்பர்கள், "இதோ பாருங்கள், யூத விஞ்ஞானிகள், கணித மேதைகள், தத்துவ ஞானிகள்..." என்று ஒரு பெரிய பட்டியலையே கொண்டு வருவார்கள். அந்தப் பட்டியலில் உள்ள எல்லோரும் மேற்கு ஐரோப்பிய, அமெரிக்க பிரஜைகள் என்பது ஒரு தற்செயல் அல்ல. சீனா, அரேபியா, இந்தியா என்று உலகம் முழுவதும் திருடிய அறிவுச் செல்வங்களை ஐரோப்பியர்கள் தமதாக்கிக் கொண்டார்கள். இந்த மாபெரும் அறிவுத்திருட்டு இடம்பெற்ற வரலாறு ஒரு பெரிய கதை. "பூமி உருண்டையானது" என்று கூறியவர்களை தூக்கில் போட்ட தேசத்தில் இருந்து, எப்படி ஒரு விஞ்ஞானி தோன்ற முடியும்? சாதாரண தலைவலிக்கு மண்டையில் ஆணி அடித்த வைத்தியர்கள் வாழ்ந்த நாட்டில், நவீன மருத்துவம் தோன்ற முடியுமா? சிலுவைப்போரினால் விளைந்த நன்மையாக, ஐரோப்பியர்களுக்கு வெளி உலகத் தொடர்புகள் ஏற்பட்டன. அப்போது தான் விஞ்ஞானம், அறிவியல், கணக்கியல், வான சாஸ்திரம் எல்லாம் கற்றுக் கொண்டார்கள். நிச்சயமாக, ஐரோப்பியர்கள் பின்னர் அவற்றை மேலும் சிறப்பாக வளர்த்தார்கள். அறிவியல் சார்ந்த நவீன கல்வியும் அப்போது தான் உருவானது.

எமக்குத் தெரிந்த யூத விஞ்ஞானிகள், கணித மேதைகள் எல்லோரும், பிற ஐரோப்பியர்களைப் போல நவீன கல்வி கற்றதனால் உருவானவர்கள். இவர்கள் யாருமே யூத மதக் கல்வியுடன் தமது அறிவை சுருக்கிக் கொள்ளவில்லை. இன்னும் தெளிவாகக் கூறினால், படித்த யூத அறிஞர்கள் பலர் தம்மை மதச் சார்பற்றவர்களாக காட்டிக் கொள்ள விரும்பினார்கள். அன்றிருந்த யூத பழமைவாதிகள், "அவர்கள் யூதர்கள் இல்லை," என்று கூறி வந்தனர். எடுத்துக்காட்டாக, கார்ல் மார்க்ஸ் ஒரு யூதர் என்று மற்றவர்கள் தான் கூறுகிறார்கள். அவர் எந்தவொரு இன அடையாளத்தையும் ஏற்றுக் கொள்ளாதவராக, ஒரு நாஸ்திகராக வாழ்ந்தார். ஐன்ஸ்டீன், யூத தேசியவாதிகளான சியோனிஸ்டுகளை கடுமையாக விமர்சித்தார். நான் இந்தக் கட்டுரையை எழுதுவதற்காக, என்னை "தமிழன் இல்லை" என்று சில நண்பர்கள் கூறுகின்றனர். முரண்நகையாக இதே நண்பர்கள் தான், "யூத மதச் சார்பற்ற, யூதர்களாக ஏற்றுக் கொள்ளப்படாத" விஞ்ஞானிகளின் பட்டியலை கொண்டு வந்து காட்டுகிறார்கள்.

யூதர்கள் மட்டும் எப்படி அறிவுக்கூர்மை மிக்கவர்களாக, திறமைசாலிகளாக இருக்க முடியும்? மத நம்பிக்கை கொண்டவர்கள், ஆண்டவர் யூதர்களை அப்படிப் படைத்தார், என்று கூறுகின்றனர். பைபிளின் பார்வையில், உலகில் "யூதர்கள், யூதர் அல்லாதவர்கள்," என்று இரண்டு வகைப் பிரிவுகள் உண்டு. இந்தியாவில் மனு எழுதிய சாஸ்திரமும், "பிராமணர்கள் புத்திசாலிகள், அதனால் வேதம் பயில உரித்துடையவர்கள்." என்கிறது. ஒரு குறிப்பிட்ட இனத்தை சேர்ந்தவர்களால் எழுதப்படும் புனித நூல்கள், அந்த இனத்தை மட்டுமே உலகில் சிறந்ததாக மகிமைப் படுத்தும். (மனிதன் எழுதவில்லை என்றால், ஆண்டவர் இனப் பாகுபாடு காட்டுகிறார் என்று புரிந்து கொள்ளலாமா?")

நிறவெறியர்களான சில விஞ்ஞானிகளும், ஹிட்லரும், "வெள்ளையர்களே உலகில் சிறந்த அறிவுக்கூர்மை கொண்டவர்கள்." என்றனர். இப்போதெல்லாம் விஞ்ஞானத்தை காட்டி தான் மக்களை நம்ப வைக்க பார்க்கிறார்கள். "மரபணுச் சோதனையின் படி, யூதர்கள் தனியான மரபணு கொண்டவர்கள்," என்றும், "புத்தியும், திறமையும் மரபணு மூலம் கடத்தப்படுகின்றது." என்றும் கூறுவார்கள். ஹிட்லர் போன்ற இனவெறியர்களும் அதைத் தான் பரப்புரை செய்தனர். "வெள்ளையினத்தவர்கள் மூளைசாலிகள், கறுப்பினத்தவர்கள் முட்டாள்கள். இது மரபணுவில் எழுதப்பட்டுள்ளது." என்றார்கள். "மனித இனத்தின் பரிணாம வளர்ச்சியில் வெள்ளை இனம் உயர்ந்த இடத்தில் இருக்கின்றது." என்று டார்வினும் தன் பங்குக்கு உளறி விட்டுச் சென்றுள்ளார்.

1975 ல், அமெரிக்க விஞ்ஞானி வில்சன், "சமூக உயிரியல்" என்றொன்றை கண்டுபிடித்தார். இதனை விஞ்ஞானம் என்பதை விட, வலது தீவிரவாத அரசியல் கருத்துருவாக்கம் என்பதே சாலப்பொருத்தம். சமூக- உயிரியல்வாதிகள் புத்திசாலித்தனத்திற்கும், செல்வத்திற்கும் முடிச்சுப் போடுகின்றனர். "ஆப்பிரிக்கர்கள் மிகக்குறைந்த IQ கொண்டிருப்பதாலேயே அவர்கள் வறுமையில் வாடுகிறார்கள், ஐரோப்பியர்கள் அதிகூடிய IQ கொண்டிருப்பதாலேயே செல்வந்தர்களாக வாழ்கின்றனர்." இவ்வாறு வறுமைக்கும், செல்வத்திற்கும் மரபணுவே காரணம் என்கின்றனர். காலனிய சுரண்டல் பற்றி எல்லாம் அவர்கள் பேச மாட்டார்கள். பிறருடன் இனக்கலப்பு செய்யாத தூய இனமாக கருதப்படும் யூதர்கள், சமூக- உயிரியல்வாதிகளால் அடிக்கடி உதாரணம் காட்டப்படுகிறார்கள்.

யூதர்கள் கொண்டுள்ள விசேட மரபணுக்கள் காரணமாக, அவர்கள் புத்திசாலிகளாகவும், பணக்காரர்களாகவும் இருக்கின்றனர். உலகையே ஆட்டிப் படைக்கின்றனர்.(Eugenics:
A social movement in which the population of a society, country, or the world is to be improved by controlling the passing on of hereditary information through mating
.) உலகம் முழுவதையும் ஆள்வதற்கு யூதர்கள் எவ்வாறு சூழ்ச்சி செய்கிறார்கள் என்பதை விளக்கும் நூல் ( The Protocols of the Elders of Zion) ஒன்று 1903 ல் வெளியானது. ஹிட்லரும், நாஜிகளும் அவற்றை பிரச்சாரம் செய்து தான் ஆட்சியைப் பிடித்தார்கள். "வங்கிகள், தொழில் நிறுவனங்கள் எல்லாம் யூதர்களின் கைகளில் இருக்கின்றன." (ஏனென்றால் யூதர்கள் தான் புத்திசாலிகள் ஆயிற்றே) என்ற பொய்ப் பரப்புரை, யூதர்கள் மீதான வன்முறைக்கு ஜெர்மனியரின் ஆதரவை திரட்டியது. யூதர்களின் உதாரணத்தை பின்பற்றி, இனக்கலப்பற்ற தூய ஆரிய இனத்தை உருவாக்க வேண்டுமென்பது ஹிட்லரின் கனவு. யூதர்கள் பற்றிய பிரமை கொண்ட தமிழர்கள், "சாதி, மத, இனக் கலப்பு திருமணங்களுக்கு எதிராக வாதாடினால்," ஆச்சரியப்பட எதுவுமில்லை. நிறவெறி, இனவெறி, சாதிவெறி எல்லாம் அடிப்படையில் ஒன்று தான்.

(தொடரும்)
இந்த தொடரின் முன்னைய பதிவுகளை வாசிக்க:
11.தமிழீழம் இன்னொரு இஸ்ரேல் ஆகுமா?
10.பாலஸ்தீனப் பாதையில் ஈழ விடுதலைப் போராட்டம்
9.தமிழீழ - பாலஸ்தீன சகோதரத்துவம் : ஒரு மீள் பார்வை
8. "தமிழர்கள்" ஒப்பிட விரும்பாத கம்யூனிச யூதர்கள்
7.பிரிட்டிஷ் பாலஸ்தீனம், யூத இஸ்ரேலான வரலாறு
6.இஸ்ரேலின் வாகரையும், இலங்கையின் காஸாவும்
5.
சியோனிஸம்: ஏகாதிபத்தியத்தின் நவ காலனிய முகம்
4.யூதர்களுடன் முரண்படும் புலம்பெயர் தமிழர்கள்
3.அயோத்தி, ஜெருசலேம்: அயோக்கியர்களின் அரசியல்
2.
இஸ்ரேலியரிடம் தாலிபான்களும் பாடம் கற்கலாம்
1.
தமிழர்களை, யூதர்களுடன் ஒப்பிட முடியுமா?

பிரிட்டிஷ் பாலஸ்தீனம், யூத இஸ்ரேலான வரலாறு


[தமிழர்களை, யூதர்களுடன் ஒப்பிட முடியுமா?](பகுதி : ஏழு)
"இஸ்ரேலின் (முதலாவது) பிரதமர் மெனகம் பெகின் ஒரு பாசிஸ்ட்!" - பிரபல யூத விஞ்ஞானி அல்பேர்ட் ஐன்ஸ்டைன் (Letter to the New York Times, December 4, 1948)
"யூத தேசக் கோட்பாடு, யூத மதத்திற்கே பாதகமாக அமையும்... யூதர்களுக்கென தனி நாட்டை உருவாக்குவதை விட, அரேபியருடன் சமாதான சகவாழ்வு வாழ்வதே மேல்..." - Albert Einstein (April 17, 1938, in a speech at the Commodore Hotel in New York City)
[Einstein on Israel and Zionism: His Provocative Ideas About the Middle East, by Fred Jerome, (New York: St. Martin’s Press, 2009)]

"நாடற்ற மக்களுக்கு, ஒரு மக்களற்ற நாடு காத்திருக்கின்றது." சியோனிசவாதிகளின் இத்தகைய பிரச்சாரங்களை செவிமடுத்த ஐரோப்பிய யூதர்கள், அன்றைய பாலஸ்தீனம் யாருமே வாழாத பாலைவனப் பிரதேசம் என நினைத்துக் கொண்டிருந்தார்கள். பாலஸ்தீனத்தின் (இன்றைய இஸ்ரேல்) தென் பகுதியில் மட்டுமே (நகேவ்) பாலைவனம் உள்ளது என்பதும், பிற பகுதிகள் பயிர்ச்செய்கைக்கு உகந்த மண்வளத்தைக் கொண்டிருந்தது என்ற உண்மை அவர்களுக்கு தெரிந்திருக்கவில்லை. ஐரோப்பிய யூதர்கள் குடியேறுவதற்கு முன்னரே, பாலஸ்தீன ஒரேஞ் பழங்கள் ஐரோப்பிய சந்தையில் அமோகமாக விற்பனையாகிக் கொண்டிருந்தன. தாம் வந்த பின்னரே, பாலைவனத்தை வளம் கொழிக்கும் பூமியாக மாற்றியதாக, இஸ்ரேலில் குடியேறி வாழும் யூத பாமரர்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். யூத பாமரர்களின் அறியாமையை, சில படித்த தமிழர்களும் பிரதிபலிக்குமளவுக்கு, அது ஒரு பிரச்சார உத்தியாக முன்னெடுக்கப் பட்டது.
1891 ல், முதன் முதலாக ஒரு ஐரோப்பிய நாட்டில் இருந்து பாலஸ்தீனம் சென்று வந்த யூதரின் வாக்குமூலம் இது:
"இஸ்ரேல் யாருமே வாழாத பாலைவனம் என்று, இஸ்ரேலுக்கு வெளியே வாழும் நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். அங்கு சில அரேபிய நாடோடிக் குழுக்கள், கழுதைகளுடன் சுற்றிக் கொண்டிருப்பதாக நினைக்கிறோம். அங்கே நிலம் யாருமே வாங்காமல் தரிசாக கிடப்பதாக கருதுகிறோம். ஆனால் உண்மை அதற்கு எதிர்மறையானது. செம் (நோவாவின் புதல்வன்) மின் வழித்தோன்றல்களான அரேபியர்களும் புத்திசாலிகள் தான்...." (ரஷ்ய யூதரான
Asher Ginzberg எழுதிய நூலில் இருந்து.)

அன்றைய பாலஸ்தீனாவின் சனத்தொகை விகிதாசாரம் பின்வருமாறு அமைந்திருந்தது:
முஸ்லிம்கள் 600000
கிறிஸ்தவர்கள் 70000
யூதர்கள் 80000
(பாலஸ்தீன யூதர்கள் 80000 பேர் மட்டில் அங்கே வாழ்ந்து வந்த போதிலும், விரல்விட்டு எண்ணக்கூடிய யூதர்கள் மட்டுமே வாழ்ந்ததாக, ஐரோப்பாவில் சியோனிசவாதிகள் பரப்புரை செய்தனர்.)

மொத்த பாலஸ்தீன சனத்தொகையில் 60 % பேர் விவசாயத்தில் ஈடுபட்டிருந்தனர். அவர்களில் யூத விவசாயிகளும் அடக்கம். ஜெருசலேம் ஆண்டு தோறும், உலகம் முழுவதும் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் புனித நகராகும். ஆகவே ஜெருசலேமில் வாழ்ந்த மக்கள் சுற்றுலாத் துறையால் நல்ல வருமானம் ஈட்டிக் கொண்டிருந்தனர். யூதர்கள் விவசாயிகளாக மட்டுமல்லாது, அரச உத்தியோகத்தர்கள், கணக்காளர்கள் போன்ற பதவிகளையும் வகித்து வந்தனர். பாலஸ்தீனத்தில் அரைவாசி காணிகள், முஸ்லிம் நிலவுடமையாளர்களின் சொத்தாக இருந்தது. அவர்கள் தமது நிலத்தை சிறு விவசாயிகளுக்கு குத்தகைக்கு கொடுத்து விட்டு, பெய்ரூட், டமாஸ்கஸ், இஸ்தான்புல் போன்ற நகரங்களில் சுக போகமாக வாழ்ந்து வந்தனர். பாலஸ்தீனத்தின் தலைஎழுத்தை மாற்றியதில் இந்த நிலவுடமையாளர்களுக்கும் பங்குண்டு.

முதலாம் உலகப்போரில், பாலஸ்தீனத்தை ஆட்சி செய்து வந்த துருக்கி (ஓட்டோமான் சாம்ராஜ்யம்) தோல்வியுற்றது. பலவீனமடைந்த துருக்கி ஆட்சியாளர்களுக்கு எதிராக அரேபியர்கள் விடுதலைப் போரை நடத்தினார்கள். அரபு விடுதலைப் போராளிகளுக்கு பிரித்தானியா ஆயுத விநியோகம் செய்தது. (பார்க்க : Lawrence of Arabia திரைப்படம்) ஆனால் துருக்கியர்கள் வெளியேறிய உடனேயே, பிரிட்டன் பாலஸ்தீனாவை காலனிப்படுத்தியது. பிரிட்டிஷ் காலனியாதிக்கத்திற்கு எதிராக பாலஸ்தீன தேசிய விடுதலைப் போராட்டம் நடந்தது. அன்று அரேபியரும், யூதர்களும் தோளோடு தோள் சேர்ந்து பிரிட்டிஷ் ஆக்கிரமிப்பாளர்களுக்கு எதிராக போராடினார்கள். பாலஸ்தீன தேசிய காங்கிரஸ், லிபரல் கட்சி, சுதந்திரக் கட்சி போன்ற ஜனநாயகக் கட்சிகள், சுதந்திர பாலஸ்தீனத்தை பொறுப்பேற்க தயாராக இருந்தன. ஆனால் பிரிட்டிஷ் படைகள் பாலஸ்தீன விடுதலைப் போரை நசுக்கின. பாலஸ்தீன எழுச்சியை நிரந்தரமாக ஒடுக்குவதற்காக, பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் மனதில் ஒரு சூழ்ச்சித் திட்டம் உருவாகிக் கொண்டிருந்தது.

Mawat Land Ordinance (1920), என்ற நிலவுரிமைச் சட்டம் யூத குடியேற்றங்களை இலகுவாக்கியது. அந்த சட்டத்தின் படி, தொடர்ந்து மூன்று வருடங்கள் பயிர் செய்யப்படாத நிலம் அரசுடமையாகும். மேற்கு ஐரோப்பாவிலும், அமெரிக்காவிலும் யூத முதலாளிகளின் நிதியில் இயங்கிய "யூத தேசிய நிதியம்", சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி பாலஸ்தீன நிலங்களை வாங்கியது. அரபு நிலவுடமையாளர்களும் நல்ல விலைக்கு நிலங்களை விற்று விட்டு, குடும்பத்துடன் வெளிநாட்டில் தங்கி விட்டனர். யூத தேசிய நிதியம் வாங்கிய நிலங்களில், கிழக்கு ஐரோப்பிய யூதர்களின் குடியேற்றம் இடம்பெற்றது. உண்மையில் பிரிட்டனும் அதை விரும்பியது. அன்றைய வெளியுறவு அமைச்சர் பல்போர் எழுதிய பிரகடனம், யூதர்களை தனி இனமாகவும், இஸ்ரேலை அவர்களுக்கான தேசமாகவும் ஏற்றுக் கொண்டது. இதில் வேடிக்கை என்னவென்றால், அந்த ஒப்பந்தம் எழுதப்பட்ட காலப்பகுதியில், மொத்த பாலஸ்தீன சனத்தொகையில் 2 % மட்டுமே யூதர்கள்! ஆனால் பல்போரின் நோக்கம் வேறு. அமெரிக்க யூத முதலாளிகளின் முதலீட்டில், ரஷ்ய யூதர்களை குடியேற்ற விரும்பினார். இதனால் பிரிட்டனுக்கு என்ன இலாபம்? அமெரிக்க யூதர்களிடம் இருந்து கடன் பெறலாம். அப்போது தான் உருவாகியிருந்த கம்யூனிச ரஷ்யாவில் இருந்து யூதர்களைப் பிரிக்கலாம். ஒரே கல்லில் இரண்டு மாங்காய். இல்லை, மூன்று மாங்காய்கள் விழுந்தன. பாலஸ்தீன மண்ணின் மைந்தர்களின் சுதந்திரத்திற்கான போராட்டம் முளையிலேயே கிள்ளியெறியப்பட்டது.

யூத குடியேற்றங்கள் அன்று கிப்பூத்ஸ் (Kibbutz) என்று அழைக்கப்பட்டன. அதாவது கூட்டுறவுப் பண்ணைகள். கிப்பூத்ஸ் உறுப்பினர்கள், சாதாரண விவசாயிகள் மட்டுமல்ல. பலதரப்பட்ட தொழில்நுட்ப அறிவு படைத்தோராகவும் இருந்தனர். கைத்தொழில் பட்டறைகள், சிறு தொழிற்சாலைகள் என்பன கூட்டுறவுப் பண்ணையில் தோன்றின. எந்த தேவைக்காகவும் அவர்கள் பண்ணையை விட்டு வெளியேறத் தேவையில்லை. அனைத்து வசதிகளும் அங்கே கிடைத்தன. ஆரம்ப கால கிப்பூத்ஸ் உறுப்பினர்கள் அனைவரும் சோவியத் யூனியன், மற்றும் கிழக்கு ஐரோப்பாவில் இருந்து வந்து குடியேறியவர்கள். மேற்கு ஐரோப்பிய யூதர்கள் பாலஸ்தீனம் சென்று குடியேறுவதை விட, அமெரிக்கா செல்வதையே விரும்பினார்கள். கிழக்கைரோப்பிய யூதர்களும் அவர்களை பின்பற்றி அமெரிக்கா சென்று கொண்டிருந்தார்கள். சாதாரண மனிதர்கள் எப்போதும் தொழில் வாய்ப்பை, பணத்தை தேடித் தான் ஓடுவார்கள். யூதர்களும் அதற்கு விதிவிலக்கல்ல.

ஈழத்தமிழர்கள் எதற்காக இந்தியா செல்வதை விட, செல்வந்த நாடுகளுக்கு சென்று குடியேறுவதை விரும்புகிறார்கள்? ஒரு சாதாரண இந்திய இளைஞன், அமெரிக்கா சென்று வாழ விரும்புவானா, அல்லது ஆப்பிரிக்கா சென்று வாழ விரும்புவானா? அன்று யூதர்களிடம், "இஸ்ரேலில் குடியேற வருகிறீர்களா?" என்று யாராவது கேட்டால், பைத்தியம் என்று நினைப்பார்கள். "அங்கே சென்று என்ன செய்வது? வேலை கிடைக்குமா?" என்று பதில் கேள்வி போடுவார்கள். அதனால் அவர்களுக்கு வருமானத்திற்கு வழி ஏற்படுத்திக் கொடுப்பதற்காகவே, கூட்டுறவுப் பண்ணைகள் உருவாக்கப் பட்டன. "யூதர்கள் தமது மத நம்பிக்கை காரணமாக, அல்லது கொள்கைப் பிடிப்பு காரணமாக இஸ்ரேலுக்கு செல்ல விரும்பினார்கள்." என்பதெல்லாம் சியோனிஸ்ட்கள் அவிழ்த்து விட்ட புளுகு மூட்டைகள். ஆனால், ஹிட்லரின் யூத இனவழிப்புக்கு பிறகு, பெருமளவு யூதர்கள் உணர்வுபூர்வமாக இஸ்ரேல் செல்ல விரும்பியது உண்மை தான். அப்போதும் இஸ்ரேலுக்கு சென்றவர்களை விட, அமெரிக்கா சென்றவர்களே அதிகம். இன்றைக்கும் இஸ்ரேலில் வாழ்பவர்களை விட இரண்டு மடங்கு யூதர்கள் அமெரிக்காவில் வாழ்கின்றார்கள்.

சியோனிஸ்ட் கொள்கை வகுப்பாளர்கள் பல ரகசியத் திட்டங்கள் வைத்திருந்தார்கள். கூட்டுறவுப் பண்ணைகளில் வசித்த குழந்தைகளுக்கு ஹீபுரு மொழி வகுப்புகளை நடத்தினார்கள். அவர்களது பாடத்திட்டம், பாலஸ்தீனத்தில் பிரிட்டிஷ் கல்விக்கு போட்டியாக அமைந்தது. யூதர்கள் மூடப்பட்ட கல்விக் கூடங்களில் ஹீபுரு மொழி பயின்றது மட்டுமல்ல, மொழியோடு கூடவே தேசியவாதத்தையும் வளர்த்தனர். பாலஸ்தீனர்கள் ஆங்கிலக் கல்வி கற்று பிரிட்டிஷ் நிர்வாகத்தில் பணியாற்றினார்கள். ஆனால் தமது சமூகத்திற்கென தனியான அரபு வழிக் கல்வியைக் கொண்டிருக்கவில்லை. அன்று பிரிட்டிஷார் அதற்கு அனுமதிக்கவுமில்லை. அதனால் பாலஸ்தீன தேசியவாதம் தோன்ற நீண்ட காலம் எடுத்தது. அது பிற்காலத்தில், யூத பேரினவாதத்தின் எதிர்வினையாகவே உருவெடுத்தது. "பாலஸ்தீனர்கள் நாடற்றவர்களாக உலகம் முழுவதும் அகதிகளாக அலைகிறார்கள்." போன்ற கதையாடல்கள் பாலஸ்தீன தேசியவாதத்தை வளர்த்தது.

இலங்கையின் இனப்பிரச்சினையும் இதே மாதிரியான மூலத்தைக் கொண்டுள்ளது. பிரிட்டிஷ் காலத்திலேயே, பௌத்த சங்கங்கள் சிங்கள மொழிக் கல்வியளித்து வந்தன. சிங்களத் தேசியவாதமும் கூடவே வளர்ந்தது. பாலஸ்தீனரைப் போலவே, தமிழர்களும் ஆங்கிலம் கற்ற மத்திய தர வர்க்கமாக பிரிட்டிஷ் நிர்வாகத்தில் பணியாற்றினார்கள். அதனால் அன்று தமிழ்த் தேசியவாதம் தோன்றுவதற்கான சூழல் நிலவவில்லை. அது பிற்காலத்தில் சிங்கள பேரினவாதத்தின் எதிர்வினையாகவே உருவெடுத்தது. இனப்பிரச்சினை தீவிரமடைந்த பின்னரே, "தமிழர்கள் நாடற்றவர்களாக உலகம் முழுவதும் அகதிகளாக அலைகிறார்கள்." போன்ற கதையாடல்கள் உருவாகின. தமது புலம்பெயர் வாழ்வுக்கு, "யூதர்களை உதாரணமாக காட்டுவது" தமிழர்கள் மட்டுமல்ல, பாலஸ்தீனர்களும் அவ்வாறே சொல்லிக் கொள்கின்றனர். (பாலஸ்தீனர்கள், தாமும் யூதர்களைப் போல இரண்டாயிரம் வருடம் காத்திருந்தேனும் பாலஸ்தீனம் அமைக்கப் போவதாக சபதமெடுக்கின்றனர்.)

கிப்பூத்ஸ் பண்ணைகள், தேசத்திற்குள் இன்னொரு தேசமாக இயங்கிக் கொண்டிருந்தன. மேற்குலக யூத நிறுவனங்கள் இரகசியமாக ஆயுதங்களைக் கடத்தி வந்தார்கள். கிப்பூத்ஸ் இளைஞர்களுக்கு இராணுவப் பயிற்சி வழங்கப்பட்டது. முன்னர் ஒரு காலத்தில் "கிப்பூத்ஸ் ஆயுதக் குழுவாக" இருந்த "ஹகானா", பிற்காலத்தில் இஸ்ரேலிய இராணுவமாகியது. 1929 ம் ஆண்டு, ஜெருசலேம் நகரில், சீருடை தரித்த யூத இளைஞர்கள் இஸ்ரேலிய கொடியுடன் அணிவகுப்பு செய்த பொழுது, அரேபியருடன் கைகலப்பு ஏற்பட்டது. உண்மையில் கூட்டுறவுப் பண்ணைகளில் என்ன நடக்கின்றது என்பது அரேபியர்களுக்கு தெரிந்திருக்கவில்லை. தமது அயலில் ஐரோப்பியர்கள் வந்து குடியேறுவதை, அரேபியர்கள் அச்சத்துடன் அவதானித்தார்கள். ஜெருசலேம் அணிவகுப்பு அந்த அச்சத்தை அதிகரித்தது. இதனால் அரேபியரும், யூதரும் ஆங்காங்கே மோதிக் கொண்டார்கள். பாலஸ்தீன யூதர்களும், இனவுணர்வு கொண்டவர்களாக ஐரோப்பிய யூதர்களுடன் சேர்ந்து கொண்டார்கள். அரேபியர்களையும், யூதர்களையும் நிரந்தரமாக பிரித்து வைத்த மகிழ்ச்சியில் பிரிட்டிஷ் கனவான்கள், ஓரமாக ஒதுங்கி ஓய்வெடுத்தார்கள்.

ஐரோப்பாவில் இருந்து புலம் பெயர்ந்த யூதர்கள், பிரிட்டனின் அனுமதி இன்றி பாலஸ்தீனாவில் குடியேறி இருக்க முடியாது. யூதர்கள் இரண்டாயிரம் வருடங்களுக்கு தமது மூதாதையர் வாழ்ந்த இடம் என்ற உரிமை பாராட்டினார்கள். ஆனால், பாலஸ்தீன அரேபியர்கள் அதனை ஐரோப்பியரின் காலனியாதிக்கமாக பார்த்தார்கள். ஏனெனில் பாலஸ்தீனாவில் வந்து குடியேறிய அனைவரும் வெள்ளை நிற ஐரோப்பியர்கள். யாழ்ப்பாணத்தில் முப்பது வருடங்களுக்கு முன்னர் வாழ்ந்ததாக உரிமை பாராட்டிக் கொண்டு, சிங்களக் குடும்பங்கள் குடியேறி வருகின்றன. அங்குள்ள தமிழர்கள் எத்தனை ஆக்ரோஷமாக எதிர்த்துக் கொண்டிருக்கிறார்கள்? தமிழ் தேசியவாதிகள் யாழ்ப்பாணத்தில் சிங்களக் குடியேற்றம் நடப்பதாக அலறிக் கொண்டிருக்கிறார்கள். இதே போன்ற நிலையில் தானே அன்று பாலஸ்தீன அரேபியர்கள் இருந்திருப்பார்கள்?

அரேபியரின் எதிர்ப்புக் காரணமாக, மேலதிக யூதர்களின் வருகையை பிரிட்டன் தடை செய்தது. இரண்டாம் உலகப்போர் முடிவில், சைப்ரசில் இருந்து யூத அகதிகளை ஏற்றி வந்த கப்பல் கரையை அண்ட விடாமல் தடுத்தது. ஹைபா துறைமுகத்தில் நிறுத்தி வைத்த கப்பலை கிளம்ப விடாமல் தடுப்பதற்காக ஹகானா வைத்த குண்டு, நூற்றுக் கணக்கான அகதிகளை கொன்றதுடன் கப்பலை மூழ்கடித்தது. இந்தப் பிரச்சினை காரணமாக ஹகானாவுக்கும், பிரிட்டிஷ் படைகளுக்கும் இடையில் போர் மூண்டது. ஆனால், சர்வதேச அரங்கில், ஐ.நா. மன்றில் இஸ்ரேலை அங்கீகரிக்கும் தீர்மானம் நிறைவேறியதால், பிரிட்டன் பாலஸ்தீனாவை விட்டு வெளியேறியது. அமெரிக்கா, சோவியத் யூனியன் ஆகிய புதிய வல்லரசுகளின் அழுத்தமும் அதற்கு முக்கிய காரணம். அவை பிரிட்டிஷ் ஏகாதிபத்திய காலகட்டத்தை முடிவுக்கு கொண்டு வர விரும்பின. அதனால் பாலஸ்தீன பிரச்சினையில் எந்தத் தீர்வையும் காணாமலே, பிரிட்டன் வெளியேறியது.
(தொடரும்)

தொடரின் முன்னைய பகுதிகளை வாசிக்க:
6.
இஸ்ரேலின் வாகரையும், இலங்கையின் காஸாவும்
5.
சியோனிஸம்: ஏகாதிபத்தியத்தின் நவ காலனிய முகம்
4.யூதர்களுடன் முரண்படும் புலம்பெயர் தமிழர்கள்
3.அயோத்தி, ஜெருசலேம்: அயோக்கியர்களின் அரசியல்
2.
இஸ்ரேலியரிடம் தாலிபான்களும் பாடம் கற்கலாம்
1.
தமிழர்களை, யூதர்களுடன் ஒப்பிட முடியுமா?