Sunday, January 03, 2010

அமெரிக்காவில் பெருகி வரும் கம்யூனிச பண்ணைகள்

வேலையின்மை, வீடிழப்பு, கடன் சுமை, டாலரின் வீழ்ச்சி. முடிவுறாது நீளும் முதலாளித்துவ பொருளாதார பிரச்சினைகள். மாற்று வழி தேடிய அமெரிக்கர்கள் தற்போது கம்யூனிச வாழ்க்கை முறைக்கு மாறி வருகின்றனர். இன்று அமெரிக்கா முழுவதும் பத்தாயிரத்துக்கும் அதிகமான கம்யூனிச கூட்டுறவுப் பண்ணைகள் உருவாகி விட்டன. கூட்டு உழைப்பினால் கிடைக்கும் வருவாயை பங்கிட்டுக் கொள்ளும் கம்யூனிச மாதிரிக் கிராமங்களில் பணம் பாவனையில் இல்லை. முதலாளித்துவ பொருளாதாரத்திற்கே இயல்பான பேராசையும் அந்த மக்களிடம் இல்லை. ஆயிரக்கணக்கான ஏக்கர்களைக் கொண்ட கம்யூனிச கிராமங்கள், விவசாயம், கால்நடை வளர்ப்பு, சிறு கைத்தொழில் ஆகியவற்றுடன் சிறிய அளவு தொழிற்துறை உற்பத்திகளைக் கொண்டுள்ளன. சுய சார்புப் பொருளாதாரத்தைக் கொண்ட பண்ணைகள், அதன் உறுப்பினர்களின் அத்தியாவசிய தேவைகளைப் பூர்த்தி செய்கின்றன. நகரங்களில் காணப்படாத அயலாருடன் நட்புறவு, இயற்கையுடன் இணைந்து வாழ்தல், என்பன மக்களின் மகிழ்ச்சிக்கு உததரவாதம் அளிக்கின்றன.

அமெரிக்க வரலாற்றில் கூட்டுறவுப் பண்ணைகள் ஒரு புதுமை அல்ல. மொர்மன், எமிஷ் போன்ற புரட்டஸ்தாந்து கிறிஸ்தவ குழுக்களும், ஹிப்பிகளும் ஏற்கனவே கூட்டுறவுப் பண்ணைகளை வாழ்வாதாரமாக கொண்டு இயங்கி வருகின்றன. கிறிஸ்தவ குழுக்களின் மதப் பழமைவாத வாழ்க்கை நெறியும், ஹிப்பிகளின் போதைக் கலாச்சாரமும் முன்னைய கூட்டுறவுப் பண்ணைகளின் சீர்குலைவுக்கு காரணமாக இருந்தன. ஆனால் கடந்த வருடம் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால் தோன்றிய மதச்சார்பற்ற கூட்டுறவுப் பண்ணைகளில், போதைப்பொருள் பாவனை தடை செய்யப்பட்டுள்ளது. நவீன கம்யூனிச கிராமங்களில், மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஒரு பொதுக்குழு முடிவுகளை எடுக்கும் அதிகாரத்தைக் கொண்டுள்ளது. அமெரிக்காவில், வெர்ஜீனியா மாநிலத்தில் உள்ள ஒரு கம்யூனிசக் கிராமத்தை பற்றிய வீடியோ இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

மேலதிக விபரங்களுக்கு:
Thriving communes no haven for 'deadbeats'

No comments: