Monday, June 21, 2010

ஆப்பிரிக்காவில் ஒரு குவைத் - ஆவணப்படம்

ஈகுவாடோரியல் கினியா: உங்களில் எத்தனை பேர் இந்த நாட்டை பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள்? மேற்கு ஆப்பிரிக்க கரையில் இருக்கும் குட்டி நாடு. நீண்ட காலமாக வெளியுலக தொடர்பற்றிருந்த மர்ம தேசம். சில வருடங்களுக்கு முன்னர் அமெரிக்கா, பிரிட்டன், ஸ்பெயின், மற்றும் ஒரு சிறு கூலிப்படை ஆகியன கூட்டுச் சேர்ந்து சதி செய்தன. ஒரு அதிரடி சதிப்புரட்சி மூலம் ஆட்சி மாற்றம் ஏற்படுத்துவது அவர்களது நோக்கம். காரணம்? ஈகுவாடோரியல் கினியாவில் காணப்படும் அபரிதமான எண்ணெய் வளம்.

ஈராக்கிடம் இருந்து குவைத்தை விடுவிக்க நடந்த வளைகுடாப் போரின் பின்னர் அமெரிக்கா ஒரு முக்கியமான முடிவை எடுத்தது. எதிர்காலத்தில் எண்ணைத் தேவைக்காக (அமெரிக்க எதிர்ப்பு) இஸ்லாமிய நாடுகளில் தங்கியிருப்பதை தவிர்க்க விரும்பியது. வளைகுடா எண்ணெய் வள நாடுகளுக்கு மாற்றாக, ஆப்பிரிக்க எண்ணெய் மீது கண் வைத்தது. ஈகுவாடோரியல் கினியா, உலகில் பலர் அறிந்திராத குட்டி ஆப்பிரிக்க தேசம். முன்னாள் ஸ்பானிய காலனியான ஈகுவாடோரியல் கினியா சுதந்திரம் பெற்றதும் ஒரு கொடுங்கோலனின் இரும்புப் பிடிக்குள் வந்தது. தன்னை "கிறிஸ்துவின் மீட்பர்" என அறிவித்துக் கொண்டே ஆயிரக்கணக்கான அரசியல் எதிரிகளை சிலுவையில் அறைந்து கொன்றான். கொடுங்கோல் ஆட்சியால் வெறுத்துப் போன சொந்த மருமகனே இராணுவப் புரட்சி மூலம் ஆட்சியை கைப்பற்றினார். இன்றைய ஜனாதிபதி ஒபியங்கோ ஆட்சிக்கு வந்த பின்னர் தான் மக்களின் அத்தியாவசிய தேவைகளான குடிநீர், மின்சாரம் ஆகியன கிடைத்தன.

அண்மையில் கினியாவின் அபரிதமான எண்ணெய் வளம் காரணமாக வெளிநாட்டு கூலிப்படையினர் சதிப்புரட்சிக்கு திட்டமிட்டனர். கினியாவில் அமெரிக்க நிறுவனங்கள் எண்ணெய் அகழ்ந்த போதிலும், அமெரிக்க அரசு ஆட்சி மாற்றத்திற்கு ஆதரவு வழங்கியது. (லாபத்தில் அதிக பங்கு வேண்டும் என்ற பேராசை காரணமாக இருக்கலாம்.) தென் ஆப்பிரிக்காவில் இருந்து கிளம்பிய கூலிப்படை கினியா போய்ச் சேரவில்லை. இடையில் சிம்பாப்வே நாட்டில் வழிமறிக்கப் பட்டு கைது செய்யப்பட்டனர். மேற்குலக ஆதரவு பெற்ற கூலிப்படைக்கு தென் ஆப்பிரிக்க அரசு ஆதரவு வழங்கும் என்று நம்பியிருக்கலாம். ஆனால் தென் ஆப்பிரிக்கா அவர்களை பொறிக்குள் வீழ்த்தி விட்டது. கூலிப்படையின் கைதுக்கு பின்னர், தோல்வியுற்ற கினியா சதிப்புரட்சியில் பெரிய புள்ளிகள் சம்பந்தப் பட்டிருப்பது அம்பலத்திற்கு வந்தது. முன்னாள் பிரிட்டிஷ் பிரதமர் மார்க்கிரட் தச்சரின் மகன் மார்க், நிதி வழங்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார்.

பெருமளவு பணத்திற்கு ஆசைப்பட்டு போன ஒரு கூலிப்பட்டாளம் மட்டும், இந்த தோல்வியடைந்த சதிப்புரட்சிக்கு காரணமல்ல. அமெரிக்கா, பிரிட்டன், ஸ்பெயின் ஆகிய நாடுகளுக்கும் சதிப்புரட்சி நடக்கவிருப்பது முன்கூட்டியே தெரிந்திருந்தது. ஆனால் அவர்கள் அதை தடுக்கவில்லை. பெருமளவு எண்ணெய் விநியோகம் அமெரிக்காவை நோக்கி சென்ற போதிலும், அமெரிக்க அரசின் நடவடிக்கைகள் ஈகுவாடோரியல் கினியாவின் ஜனாதிபதியை ஆத்திரமூட்டின. அமெரிக்காவில், கினியா ஜனாதிபதிக்கு எதிரான மனித உரிமை மீறல் வழக்கு, வங்கி வைப்பு முடக்கப்பட்டமை, தோல்வியுற்ற சதிப்புரட்சியில் பங்கு என்பன, அமெரிக்க தொடர்பை துண்டிக்க வைத்தன. தற்போது ஈகுவாடோரியல் கினியா சீனாவின் பக்கம் சாய்ந்துள்ளது. அமெரிக்கா போல சீனா உள் நாட்டு விவகாரங்களில் தலையிடாக் கொள்கையை கடைப்பிடிப்பதும், இந்தப் புதிய நட்புறவுக்கு காரணம். ஈகுவாடோரியல் கினியாவில் சீனா புதிய தலைநகரம் ஒன்றை உருவாக்கும் கட்டுமானப் பணியில் ஈடுபட்டுள்ளது. கூடவே எண்ணெய் வர்த்தகத்தில் பங்கு கேட்டுள்ளது.

பேராசை பெரு நஷ்டம் என்றொரு பழமொழி உண்டு. அதிக எண்ணெய் வருமானத்திற்காக பேராசைப்பட்ட அமெரிக்கா, "ஆப்பிரிக்காவின் குவைத்தை" சீனாவிடம் தாரை வார்த்து விட்டு விழிக்கிறது. ஆப்பிரிக்காவை கொள்ளையடிப்பதற்காக, மேற்குலக நாடுகள் சதிப்புரட்சிக்கு ஆதரவளிப்பதும், கூலிப்படையினருடன் கூடிக்குலாவுவதும் இன்றைக்கும் தொடர்ந்த வண்ணம் உள்ளது. ஈகுவாடோரியல் கினியாவின் எண்ணெய் வளத்தை அபகரிக்க மேற்கொள்ளப்பட்ட சர்வதேச சதி முயற்சிகளை ஆராய்கிறது இந்த ஆவணப்படம். நெதர்லாந்து தொலைக்காட்சி சேவை ஒன்றில் ஒளிபரப்பானது. வீடியோ ஆங்கில உபதலைப்புகளை கொண்டுள்ளதால் புரிந்து கொள்ள இலகுவாக இருக்கும்.


Part 1


Part 2


Part 3


Part 4


Part 5


Part 6


1 comment:

sathishsangkavi.blogspot.com said...

அனைவரும் அறிய வேண்டிய இடம்.....