Thursday, September 09, 2010

மேற்கில் சுரண்டப்படும் கிழக்கைரோப்பிய உழைப்பாளிகள்

கிழக்கு ஐரோப்பிய நாடுகள் ஐரோப்பிய ஒன்றியத்தில் சேர்ந்த பின்னர், அவை மேற்குலக காலனிகளாக மாறி வருகின்றன. ஒரு புறம், மேற்கைரோப்பிய பெரும் வர்த்தக நிறுவனங்கள் அந்த நாடுகளின் பொருளாதாரத்தில் ஆதிக்கம் செலுத்துகின்றன. மறு புறம், கிழக்கு ஐரோப்பிய உழைப்பாளிகள் மேற்கைரோப்பாவில் குறைந்த கூலிக்கு சுரண்டப் படுகின்றனர். முன்னொரு காலத்தில் துருக்கி, மொரோக்கோ நாடுகளை சேர்ந்தவர்கள், அல்லது அகதிகள் செய்து வந்த அடி மட்ட வேலைகளை தற்போது கிழக்கு ஐரோப்பிய தொழிலாளருக்கு கொடுக்கிறார்கள். உழைப்புச் சுரண்டலுக்கு தயாரான புதிய தொழிலாளர் படை ஒன்று அருகிலேயே, அதுவும் ஐரோப்பா என்ற சாம்ராஜ்யத்தினுள் கிடைக்கின்றது. இதனால் ஆசிய, ஆப்பிரிக்க குடியேறிகள் விரட்டப்படுகின்றனர். இஸ்லாமிய எதிர்ப்பு, அகதிகள் தடுப்பு போன்ற கிளர்ச்சியூட்டும் அரசியலுக்கும் அதுவே அடிப்படைக் காரணம்.

நெதர்லாந்து தொலைக்காட்சியில் காண்பிக்கப்பட்ட ஆவணப்படம் ஒன்று, இங்கே கிழக்கு ஐரோப்பிய தொழிலாளர்கள் மிக மோசமாக சுரண்டப்படுவதை எடுத்துக் காட்டியுள்ளது.
Klaas Gaat Illegaal ஒரு செய்தியாளர் போலந்து நாட்டு தொழிலாளரின் அவலத்தை நேரில் கண்டு படமாக்கியுள்ளார். போலந்துக்காரரும் ஐரோப்பிய யூனியன் பிரஜைகள் தாம். ஆனால் போலந்தில் கிடைக்கும் ஊதியத்தை விட, நெதர்லாந்தில் அதிகம் சம்பாதிக்கலாம் என்ற ஆசையில் வருகின்றனர். அவர்களுக்கு வேலை தேடிக் கொடுக்கும் முகவர் நிறுவனம், ஆறு மாதம் தொடக்கம் ஒரு வருட ஒப்பந்தம் போட்டு விடுகின்றன. வேலை கடுமை காரணமாக இடை நடுவில் நாடு திரும்பிடா வண்ணம் தண்டப்பணம் அறவிடுகின்றன. அவற்றை செலுத்துவதற்காகவே தொடர்ந்து வேலை செய்ய வேண்டும்.

ஊருக்கு ஒதுக்குப் புறமாக "கரவன்" குடியிருப்புகளில் தொழிலாளர்கள் தங்க வைக்கப் படுகின்றனர். ஒடுக்கமான அறைகளைக் கொண்ட ஒவ்வொரு குடியிருப்பிலும் ஆறு பேர் தங்க வைக்கப் படுகின்றனர். மத்திய கிழக்கு வளைகுடா நாடுகளில் தொழிலாளரின் முகாம்களை பார்த்தவர்களுக்கு இதனை விளக்கத் தேவையில்லை. வசதிக் குறைபாடுகளைக் கொண்ட சிதிலமடைந்த கரவன் குடியிருப்புகளுக்கு குறைந்தது ஆயிரம் யூரோக்கள் வாடகை அறவிடுகிறார்கள். (வெளியே நகரத்தில் ஐநூறு யூரோவுக்கு வசதியான வீடு வாடகைக்கு எடுக்கலாம். ஆனால் அதற்கு அனுமதிக்கப்படுவதில்லை. முகவர்கள் ஒப்பந்தத்தைக் காட்டி மிரட்டி வைக்கின்றனர்.) அதை விட குடியிருப்புகளில் வசிக்கும் தொழிலாளர்கள் விடும் சிறு சிறு தவறுகளுக்காக தண்டப் பணம் அறவிடும் கொடுமையும் நடக்கின்றது. துப்பரவு செய்யா விட்டால், அல்லது வீட்டினுள் உணவு வீசிக் கிடந்தால், இப்படி எத்தனையோ தவறுகளை கண்டுபிடித்து தண்டப்பணம் வசூலித்து விடுவார்கள்.

சிறு சிறு தவறுக்கெல்லாம் தண்டப்பணம் பிடித்துக் கொள்வதால் மாத இறுதியில் சம்பளப் பணம் சொற்பமாகவே மிஞ்சும். அதுவும் நிச்சயமில்லை. இரண்டு மாத சம்பளப்பணத்தை பிடித்து வைத்துக் கொள்வது சாதாரணம். தினசரி வேலைக்கு போவது மட்டுமே அவர்களுக்கு நிச்சயமான வாழ்வு. அனேகமாக காய்கறித் தோட்டங்களிலேயே போலந்து தொழிலாளர்கள் வேலை செய்கின்றனர். அதிகாலை ஐந்து மணிக்கெல்லாம் எழுந்து சென்று விட வேண்டும். அதிக நேரம் வேலை செய்ய வேண்டும். சில நேரம் ஒரு நாளைக்கு 22 மணிநேரம் வேலை செய்ததாக ஒரு உழைப்பாளி தெரிவித்தார். பயமுறுத்தல் காரணமாக பலர் தமக்கு நேர்ந்த கொடுமைகளை வெளியே சொல்ல அஞ்சுகின்றனர். தேவாலயம் ஒன்றில் அடைக்கலம் புகுந்த ஒரு பெண் உழைப்பாளி, தான் பாலியல் ரீதியாக சுரண்டப் பட்டதாக தெரிவித்தார். இவையெல்லாம் இந்த ஆவணப் படத்தில் பதிவாகி உள்ளன.

நெதர்லாந்து செய்தியாளர், தனது உருவத்தை மாற்றி ருமேனிய தொழிலாளி போல நடித்து (under cover), இந்த தகவல்களை எல்லாம் சேகரித்துள்ளார். கிழக்கு ஐரோப்பிய மக்கள், சோஷலிச சர்வாதிகாரத்தில் இருந்து விடுதலையடைந்ததாக பலர் மகிழ்ச்சியில் துள்ளினார்கள். அதே கிழக்கு ஐரோப்பிய மக்கள், ஜனநாயக ஐரோப்பிய யூனியனில் அடிமைகளான அவலத்தை இந்த வீடியோவில் காணலாம்.

ஆவணப்படத்தை இங்கேயுள்ள சுட்டியில் பார்வையிடலாம். (குறிப்பு: நெதர்லாந்து மொழி பேசும் வீடியோ)
Klaas Gaat Illegaal

No comments: