Saturday, November 06, 2010

நாடற்ற ரோமானிகள் தனி நாடு கோரலாமா?

"ஐரோப்பாவின் தீண்டத்தகாதவர்கள்" கட்டுரையில், "யூதர்களுக்கு இஸ்ரேல் என்ற தாயகம் உருவாக்கப் பட்டது போல, ரோமா இன மக்களுக்கு ஏன் கிடைக்கவில்லை?" என்று குறிப்பிட்டிருந்தேன். பதிவர் டோண்டு அதற்கு எதிர்வினையாக ஒரு நீண்ட பதிவிட்டிருக்கிறார். (பார்க்க:யூதர்களுக்கு கிடைத்த வாய்ப்புகள் ரோமானிகளுக்கு ஏன் கிடைக்கவில்லை?) அதில் இந்தியாவின் தலித் சாதிகளின் நிலைமையை ரோமா மக்களுடனும், நாடார் சாதியை யூதர்களுடனும் ஒப்பிட்டிருக்கிறார். டோண்டு எடுத்திருக்கும் தீர்மானம் இது: "ரோமா மக்களின் பின்தங்கிய நிலைக்கு அவர்களே பொறுப்பேற்க வேண்டும். அவர்கள் நாடோடிகளாக வாழும் சுதந்திரப் பிரியர்கள். எந்த தொழிலிலும் ஈடுபடாதவர்கள். வணிகத் துறையில் முன்னேறாதவர்கள். அதிகாரத்தை எதிர்த்து போராடாதவர்கள். அவர்களிடையே இலக்கு நோக்கிய (தேசிய) அரசியல் அமைப்பு கிடையாது." இவை எல்லாம் ஆதாரமற்ற முன் அனுமானங்கள்.

ஹிட்லர் அரசாங்கத்தின் முக்கிய அமைச்சரான Heinrich Himmler,ரோமா மக்கள் குறித்து எத்தகைய கருத்துகளைக் கொண்டிருந்தாரோ, அதையே இன்று பலரும் பிரதிபலிக்கின்றார்கள்.
"எமது ஆராய்ச்சியின் முடிவுகளின் படி, சிகொயனர் (ரோமா) மக்கள் கற்கால இனத்தை சேர்ந்தவர்கள். பின்தங்கிய மன வளர்ச்சி காரணமாக சமூகத்துடன் ஒன்று சேர்ந்து வாழமுடியாதவர்கள்." (Bekämpfung der Zigeunerplage) ஹிட்லர் காலத்தில், குறைந்தது அரை மில்லியன் ரோமா மக்கள் விஷ வாயு செலுத்தி படுகொலை செய்யப்பட்டார்கள். டோண்டு கேட்கிறார்: "போலந்தில் நாசிஸ தடுப்பு முகாமில் கொல்வதற்காக அடைத்து வைக்கப்பட்ட யூதர்கள் எதிர்த்துப் போராடி மடிந்தது போல, ரோமா மக்கள் ஏன் போராடவில்லை?" இது ஒரு அப்பாவித்தனமான கேள்வி. தடுப்பு முகாம் கொண்டு செல்லப்பட்டவர்களை, தாம் கொலை செய்யப் போகிறோம் என்று, நாஸி அதிகாரிகள் அவர்களிடம் கூறவில்லை. முகாமில் தனியான ஒரு இடத்தில் குளியலுக்கு என்று கூட்டிச் சென்று இரகசியமாக விஷ வாயு செலுத்தி கொன்றார்கள். தமக்கு முன்னே சென்றவர்கள் இறந்து விட்டனர் என்ற விஷயம் அடுத்து வந்த குழுவினருக்கு தெரியாது. கிளர்ச்சி இடம்பெற்ற முகாமில் இருந்தவர்களுக்கு, இந்த தகவல் தெரிந்த பின்னர் தான் எதிர்த்துப் போராடினார்கள். ரோமா மக்கள், எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபடவில்லை என்பது ஒரு கற்பனை. நாசிஸ ஆக்கிரமிப்பாளரிடம் இருந்து விடுதலைக்காக போராடிய கம்யூனிச கெரில்லாக் குழுக்களில், ரோமா போராளிகளும் சேர்ந்திருந்தனர்.

ரோமா அல்லது ஜிப்சி மக்கள் எப்போது ஐரோப்பா வந்தார்கள் என்பது இன்று வரை கண்டறியப் படவில்லை. இந்த மக்கள் ஒரே மொழியை பேசுவதில்லை. ரொமானி மொழி பேசுவோர் பெரும்பான்மை மட்டுமே. வேறு பல பிரிவுகள் இருக்கின்றன. ஆனால் சமஸ்கிருதம், அல்லது ஹிந்துஸ்தானி மொழிகளின் மூலத்தை கொண்டுள்ளது மட்டுமே ஒரு ஒற்றுமை. பல ஐரோப்பிய நாடுகளில் நாடோடிகளாக அலைந்த காரணத்தால், பல்வேறு ஐரோப்பிய மொழிகளை சேர்ந்த சொற்களும் கலந்துள்ளன. ஜிப்சி மக்களின் பூர்வீகம் குறித்து எழுதப்பட்ட ஒரே ஒரு நம்பகமான சரித்திரக் குறிப்பு, இஸ்லாமிய வரலாற்றாசிரியர்களுடையது. சிந்து வெளி வரை படையெடுத்து சென்ற அரேபியர்கள், அங்கு வாழ்ந்த Zott (அனேகமாக ஜாட் சாதியினர்) எனும் இனத்தவர்களை பஸ்ராவுக்கு (ஈராக்) கொண்டு வந்து குடியேற்றினார்கள். இஸ்லாமிய அரேபியரின் பணிப்பின் பேரில், சிரியாவை காலனிப்படுத்த அம்மக்கள் அனுப்பி வைக்கப் பட்டனர். அங்கிருந்து கிரேக்க கிறிஸ்தவ சாம்ராஜ்யத்தினுள் நுழைந்திருக்கலாம் எனக் கருதப் படுகின்றது.

ரோமா மக்கள் நாடோடி வாழ்க்கைக்கு பழக்கப் பட்டவர்கள் என்பது உண்மை தான். அவர்கள் ஊருக்குள் சென்று குதிரைக்கு லாடமடிப்பது போன்ற உலோகம் சார்ந்த வேலைகளை செய்து வந்தனர். சிலர் கரடியை வைத்து வித்தை காட்டிப் பிழைத்தனர். சிலர் ஜோசியம் சொல்லிப் பிழைத்தனர். இசைக் கருவிகளுடன், நடனமாடும் பெண்களுடன் மக்கள் திரளை மகிழ்விப்பார்கள். இது அவர்களது சுதந்திரமாகத் தொழில் செய்யும் விருப்பைத் தான் எடுத்துக் காட்டுகின்றது. அதை தவறென்று கூற முடியாது. "நாகரீகமடைந்த மனிதர்களான நாங்கள்", ஒரு முதலாளிக்கோ, நிறுவனத்திற்கோ அடிமை சாசனத்தில் கையெழுத்துப் போட்டு விட்டு, கூலிக்கு மாரடிக்கிறோம். ரோமா நாடோடிகள் திருடுகிறார்கள் என்பது, ஆரம்பத்தில் ஒரு அந்நியர் குறித்த அவநம்பிக்கையாக தான் தோற்றம் பெற்றது. மெல்ல மெல்ல ஐரோப்பிய நாடுகள் எங்கும் ரோமா மக்களை ஒதுக்கும் சட்டங்கள் இயற்றப் பட்டன. சில ரோமா இனத் திருடர்கள் பிடிபட்டு தண்டனை வழங்கியதை அதற்கு காரணமாக காட்டினார்கள்.

ஒரு காலத்தில் ஸ்கொட்லாந்து நாட்டில் ஜிப்சிகளுக்கு அரசு மட்டத்தில் ஆதரவு இருந்தது. ஒரு ஜிப்சிப் பெண், ஸ்கொட்லாந்து மன்னனின் தீராத நோயை சுகப் படுத்தியதற்காக, அவர்கள் அரச விருந்தாளிகளாக நடத்தப்பட்டனர். சுவீடன் அரச குடும்பத்துடன் கொண்டிருந்த திருமண பந்தத்தின் காரணமாக, அவர்கள் சுவீடனுக்கு ராஜமரியாதையுடன் போய்ச் சேர்ந்தனர். இன்றும் ஸ்கண்டிநேவிய நாடுகளில் காணப்படும் ரோமா இனத்தவர்கள், பிரிட்டனில் இருந்து சென்றவர்கள் எனக் கருதப் படுகின்றது.(The Gypsies, Blackwell Publishers,Oxford) ஆனால் இந்த ராஜ மரியாதை எல்லாம் சிறிது காலமே நீடித்தது. அதற்குப் பின்னர், ரோமா இனத்தவர்களை ஒடுக்க ஆரம்பித்தார்கள். அனேகமாக இலகுவில் கண்டறியக் கூடிய மேனி நிறத்தைக் கொண்டதாலேயே, ஐரோப்பியர்கள் ரோமா மக்களை எப்போதும் சந்தேகக் கண் கொண்டு பார்த்தார்கள்.

ரோமா இனத்தவர்கள், அன்றிலிருந்து இன்று வரை நாடோடிகளாக அலையும் மக்கள் என்பது உண்மையல்ல. 18 ம் நூற்றாண்டிலேயே, பெரும்பான்மையானோர் நிரந்தரமாக ஓரிடத்தில் தங்கி விட்டார்கள். ஹங்கேரியன் சாம்ராஜ்யத்தில், 1880 ம் ஆண்டு எடுத்த சனத்தொகை கணக்கெடுப்பை இங்கே தருகிறேன்.
-நிரந்தரமாக ஓரிடத்தில் தங்கி வாழ்பவர்கள் 274940
-நிரந்தர வதிவிடம் இருப்பினும் நாடோடிகளாக வாழ்பவர்கள் 20406
-தொடர்ந்தும் நாடோடிகளாகவே வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் 8938
(கவனிக்கவும்: அன்றைய ஹங்கேரிய சாம்ராஜ்யமானது, ஆஸ்திரியா, யூகோஸ்லேவியா, போலந்து, உக்ரைன் ஆகிய நாடுகளின் பகுதிகளையும் உள்ளடக்கியிருந்தது.)

வேறு எந்த ஐரோப்பிய நாட்டையும் விட, ஸ்பெயின் ரோமா இனத்தவர்களுக்கு பெருமளவு கடமைப் பட்டுள்ளது. இன்று ஸ்பெயினின் தேசிய நடனமாக அறியப்பட்ட Flamenco நடனம், ரோமா இனத்தவர்களுக்குரியது. தென் ஸ்பெயினில் அண்டலூசியா மாகாணத்தில், பெருமளவு ரோமா இன மக்கள் வாழ்கின்றனர். 19 ம் நூற்றாண்டிலேயே, அண்டலூசியாவை நிரந்தர வதிவிடமாக்கியது மட்டுமல்லாது, தனித்துவமான இசையை, நடனத்தை வளர்த்து வந்தார்கள். அவர்களின் நடனம் இன்று ஸ்பெயின் முழுவதும் பயிலப் பட்டு வருகின்றது. சர்வதேச மேடைகளில் அரங்கேற்றப் படுகின்றது. இன்றும், தலைசிறந்த பிளமெங்கோ நடனக் கலைஞர்கள் யாவரும் ரோமா இனத்தவர்கள். அவர்களில் பலர் பணக்காரர்கள் என்பதை நான் இங்கே கூறத் தேவையில்லை.

இன்று ஐரோப்பிய நாடுகளில் வாழும் ரோமா இனத்தவர்கள் எல்லோரும் ஒரே மாதிரியான வாழ்க்கைத் தரத்தைக் கொண்டிருக்கவில்லை. மேற்கு ஐரோப்பாவில் பெரும்பாலானோர் சமூகத்துடன் ஒன்று கலந்து விட்டனர். பூர்வீகத்தை மறந்தவர்களாக, பெரும்பான்மை சமூகத்தின் பெயர்களை சூட்டிக் கொண்டு வாழ்கின்றனர். கிழக்கு ஐரோப்பாவிலும், சோஷலிச அரசுகள் இருந்த காலங்களில் பெரும்பான்மை சமூகத்துடன் ஒன்று கலக்க ஊக்குவிக்கப்பட்டது. ஆனால் சோஷலிசம் ஒரு தலைமுறையை தாண்டவில்லை. அதற்குள் முதலாளித்துவம் வந்து, சமூகத்தை இரண்டாகப் பிரித்து விட்டது. எப்போதும் முதலாளித்துவப் பொருளாதாரத்தில் பலமுள்ளது மட்டுமே நிலைத்து வாழும். அதனால் பெரும்பான்மை சமூகம், சிறுபான்மை ரோமா இனததவர்களை ஒடுக்கும் அவலம் தோன்றியது.

இன்று எத்தனையோ வணிகர்கள், முதலாளிகள் ரோமா மக்களிடம் இருந்து தோன்றியுள்ளனர். அவர்களின் வாழ்க்கைத் தரம் சிறப்பாக இருப்பதை இங்கே குறிப்பிடாமல் விட முடியாது. ஆனால் சில ரோமா முதலாளிகள், தமது சக இனத்தவர்களை சுரண்டும் அவலமும் நடக்கின்றது. ரோமா கந்து வட்டிக் காரர்களிடம் கடன் வாங்கி அல்லலுறும் மக்கள் அதிகம். உலகில் எல்லா சமூகங்களிலும் இத்தகைய பிரச்சினைகள் இருக்கின்றன, ரோமா இனம் அதற்கு விதிவிலக்கு அல்லவே?
இறுதியாக இன்னொரு விடயத்தையும் குறிப்பிட வேண்டும். ரோமா இனத்தவர்களிடையே படித்த மத்தியதர வர்க்கம் ஒன்றுள்ளது. "ரோமா இன மக்களுக்கென தனி நாடு வேண்டும்" என்ற கோரிக்கையை முன் வைக்கும் இயக்கமும், அவர்கள் மத்தியில் இயங்கி வருகின்றது. தமது ரோமா தேசத்திற்கென்று தேசியக் கொடியையும் உருவாக்கி விட்டார்கள். ரோமா தேசியவாதிகளின் மொழியும், எமக்கு ஏற்கனவே பரிச்சயமானது தான். "உலகம் முழுவதும் ரோமா இனத்தவர்கள் வாழ்கிறார்கள். அவர்களுக்கென்று ஒரு நாடு இல்லை."
மேலதிக தகவல்களுக்கு பின்வரும் இணைப்புகளை சொடுக்கவும்:
ROMANI NATIONALISM, FLAG AND ANTHEM
History of the Romani people

3 comments:

dondu(#11168674346665545885) said...

//ரோமா இனத்தவர்கள், அன்றிலிருந்து இன்று வரை நாடோடிகளாக அலையும் மக்கள் என்பது உண்மையல்ல. 18 ம் நூற்றாண்டிலேயே, பெரும்பான்மையானோர் நிரந்தரமாக ஓரிடத்தில் தங்கி விட்டார்கள்.ரோமா இனத்தவர்களிடையே படித்த மத்தியதர வர்க்கம் ஒன்றுள்ளது. "ரோமா இன மக்களுக்கென தனி நாடு வேண்டும்" என்ற கோரிக்கையை முன் வைக்கும் இயக்கமும், அவர்கள் மத்தியில் இயங்கி வருகின்றது. http://kalaiy.blogspot.com/2010/11/blog-post_06.html//
இப்போதுதானே மூன்று நூற்றாண்டுகள் ஆகின்றன அவர்கள் செட்டில் ஆகி. அவர்கள் முன்னால் இன்னும் நீண்ட ஆண்டுகள் நிற்கின்றன, தம் குறிக்கோளை அடைய.

இஸ்ரவேலர்களின் முன் உதாரணத்தை எடுத்துக் கொண்டு செயல்பட வேண்டியதுதான்.

//"போலந்தில் நாசிஸ தடுப்பு முகாமில் கொல்வதற்காக அடைத்து வைக்கப்பட்ட யூதர்கள் எதிர்த்துப் போராடி மடிந்தது போல, ரோமா மக்கள் ஏன் போராடவில்லை?" இது ஒரு அப்பாவித்தனமான கேள்வி. தடுப்பு முகாம் கொண்டு செல்லப்பட்டவர்களை, தாம் கொலை செய்யப் போகிறோம் என்று, நாஸி அதிகாரிகள் அவர்களிடம் கூறவில்லை. முகாமில் தனியான ஒரு இடத்தில் குளியலுக்கு என்று கூட்டிச் சென்று இரகசியமாக விஷ வாயு செலுத்தி கொன்றார்கள். தமக்கு முன்னே சென்றவர்கள் இறந்து விட்டனர் என்ற விஷயம் அடுத்து வந்த குழுவினருக்கு தெரியாது//
நான் கூறியது வார்சா குடியிருப்பில் நடந்த போராட்டம். மரணமுகாம்களுக்கு கொண்டு செல்லப்பட்ட யூதர்களுக்கும் தங்கள் முன்னால் சென்றவர்கள் மரணமடைந்தார்கள் என்பது தெரியாது.

ஒன்று மட்டும் நிச்சயம். ரோமா இன மக்கள் அவர்களாகத்தான் தங்கள் விமோசனத்தைத் தேடிக் கொள்ள முடியும். கடுமையான உழைப்பு தேவை.

அன்புடன்,
டோண்டு ராகவன்

RMD said...

ஒமுதன்மைப் ப்டுத்தக் கூடிய,தேர்ந்தெடுக்கப் பட்ட மக்களாக காட்டக் கூடிய ,அவர்களுக்கு கடவுளால் வழங்கப் பட்ட இடத்தை கூறும் ஒரு நூலை அவர்களால் எழுதி அதனை பாதுகாக்கவும் முடிந்தது.

இந்த புத்தகத்தை கிறித்தவர்களின் மத புத்தகத்திலும் சேர்த்து இருந்ததால அவர்கள் தங்களை தெரிந்து கொள்ளப் பட்ட கூட்டமாக பெரும்பான்மை கிறித்தவவர்களை நம்ப வைக்க முடிந்தது. இஸ்ரேல் உருவாவது இயேசுவின் இரண்டாம் வருகைக்கு அடையாளம் என்னும் கருத்தும் பரப்பப் பட்டது.

மதத்தை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்துவதில் தலை சிறந்தவர்கள் யூதர்கள்.

இந்த வேலைகளைத்தான் டோண்டு திறமை என்கிறார்.

பாவம் ரோமா மக்கள் அப்பாவிகள். இப்படி ஏமாற்று வேலைகள் செய்ய்ய தெரியாத்தால் கஷ்டப் படுகிறார்கள்.

Mohamed Faaique said...

nalla article sir. PDF aakkamudivathu romba vasathiyaaka irukku... thnks..