Monday, March 28, 2011

இந்தியத் தலையீடுகளும், ஜேவிபி யின் ஐயப்பாடுகளும்

[இந்தியாவின் சூழ்நிலைக் கைதியான ஈழம்] (பகுதி - 6)

ஈழத் தமிழ் தேசியம், அண்ணாதுரையின் திராவிட இயக்கத்தில் இருந்து சித்தாந்தத்தை கடன் வாங்கியது. மிதவாதத் தலைவர்கள், தனித் தமிழ்நாடு கோரிக்கையின் நீட்சியாகவே, தமிழீழத்தை கருதினார்கள். இருப்பினும் கட்சியின் இளைஞர் அணி, ஆயுதப் போராட்டத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியது. அவர்களைப் பொறுத்த வரையில், திராவிட இயக்கத்தினர் தமிழ்நாடு விடுதலைக்காக ஆயுதமேந்தி போராடாததை; ஒரு வரலாற்றுத் தவறாக கருதினார்கள்.

அரசுக்கு எதிரான ஆயுதப் போராட்டம் சாத்தியமே என்று அவர்கள் நம்புவதற்கு, கண் முன்னே கண்ட நிகழ்வுகள் இருந்தன. 1971 ம் ஆண்டு, ஜேவிபி அறிவித்த சோஷலிச இலங்கையை நோக்கிய கிளர்ச்சி, இலங்கைத் தீவின் முதலாவது ஆயுதப் போராட்டமாகும். 1977 ல் இருந்து, ஆயுதபாணி தமிழ் இளைஞர்கள் போலிசை இலக்கு வைக்கத் தொடங்கினர். ஜேவிபி கிளர்ச்சி நடந்து, ஐந்து வருடங்கள் கழித்து வடக்கில் வன்முறை வெடித்தமை குறிப்பிடத் தக்கது. ஆகவே ஆரம்ப கால தமிழ் தேசியப் போராளிகளின் தலைமுறை, சம காலத்தை சேர்ந்தவர்கள் என்பது புலனாகும். ஜேவிபி கிளர்ச்சி மட்டுமல்ல, யாழ் குடாநாட்டில் நடந்த சாதிய எதிர்ப்பு போராட்டமும், தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் உந்துசக்திகளாக அமைந்துள்ளன.

ஜேவிபியில் சில யாழ்ப்பாணத் தமிழ் இளைஞர்களும் உறுப்பினர்களாக இருந்துள்ளனர். எனக்குத் தெரிந்தவர்கள் எல்லோரும், தொழில் நிமித்தம் கொழும்பு நகரில் வாழ்ந்தவர்கள். ஜேவிபியில் இருந்த மலையகத் தமிழர்களின் எண்ணிக்கை அதை விட அதிகம். 1990௦, இரண்டாவது ஜேவிபி கிளர்ச்சி வரையில் அதன் உறுப்பினர்களாக இருந்த மலையகத் தமிழர் சிலரை கொழும்பில் சந்தித்திருக்கிறேன். அப்போது ஜேவிபியில் இருந்து விலகி, தேநீர்க்கடை பணியாளர்களாக வேலை செய்து கொண்டிருந்தனர். அவர்களின் தகவலின் படி, ஜேவிபியில் இருந்த தமிழ் இளைஞர்களின் எண்ணிக்கை மிகக் குறைவு என்றாலும், சில நூறு பேராவது தேறும்.

ஜேவிபியில் இருந்து விலத்திய சிங்கள இளைஞர்கள் சிலர், தமிழீழ தேசிய இயக்கங்களிலும் சேர்ந்திருந்தனர். இடதுசாரித் தன்மை கொண்ட இயக்கங்களில் சேர்ந்திருந்த இவர்களின் பங்களிப்பு குறைத்து மதிப்பிடத் தக்கதல்ல. சிங்கள மொழியிலான அரசியல் பிரச்சாரத்திற்கு மட்டுமல்ல, சிங்களப் பிரதேசங்களில் தாக்குதல்கள் நடத்தவும் உதவியுள்ளனர். பிற்காலத்தில் வளர்ச்சியடைந்த வலதுசாரித் தமிழ்த்தேசியம் அவற்றை எல்லாம் மறந்து விட்டது.

ஜேவிபியினர் மீது வைக்கப்படும் முக்கியமான குற்றச்சாட்டுகளில் ஒன்று, "இந்திய வம்சாவளி மலையகத் தமிழர்களை, இந்திய மேலாண்மை வல்லரசின் ஐந்தாவது தூணாக கருதியமை." எதிர்காலத்தில் அவர்களைச் சாட்டியே இந்தியத் தலையீடு இடம்பெறும் என்றும் நம்பினார்கள். ஆனால் அந்தக் கருத்தியல் தவறு என்று பிற்காலத்தில் நிரூபிக்கப்பட்டது. ஜேவிபி சோஷலிசம் பேசினாலும், அதில் பெருமளவு தூய தேசியவாதக் கூறுகள் காணப்பட்டன.

அவர்களது இந்தியா மேலான வெறுப்பின் மூலவேர், இலங்கை வரலாற்றின் ஒரு பகுதி ஆகும். இலங்கையில் அரசுரிமைப் போட்டிகளும், கிளர்ச்சிகளும் தோன்றிய காலத்தில் எல்லாம் இந்தியத் தலையீடு இடம்பெற்றுள்ளது. நவீன காலத்தில் பதிவு செய்யப்பட்ட இந்திய இராணுவ நடவடிக்கை, பிரிட்டிஷ் காலனிய ஆதிக்கத்தை நிலைநாட்டுவதற்காக இடம்பெற்றது. பிரிட்டிஷ் காலனியாதிக்கவாதிகளுக்கு எதிரான கிளர்ச்சியை அடக்க இந்தியப் படைகள் உதவின. 1987 ல் இந்தியப் படைகள் இலங்கையில் வந்திறங்கியமை, அதுவே முதல் தடவை அல்ல. ஏற்கனவே இரண்டு தடவைகள், இலங்கையில் எழுந்த அரச எதிர்ப்புக் கிளர்ச்சிகளை ஒடுக்க, இந்தியப் படைகள் தருவிக்கப் பட்டன.

கண்டி இராச்சியத்தை கைப்பற்றிய ஆங்கிலேயர்கள், மன்னனைப் பிடிக்க உதவிய பிரபுக்களுடன் ஒப்பந்தம் செய்திருந்தனர். ஆங்கிலேயர்கள் ஒப்பந்தப் படி நடக்காததைக் கண்டு வெகுண்டெழுந்த கெப்பிட்டிப்பொல என்ற ஊவா மாகாணத்தை சேர்ந்த பிரபு ஒருவர் கலகம் செய்தார். விரைவிலேயே ஆங்கிலேயருக்கு எதிரான கலகம் பிற பகுதிகளுக்கும் பரவியது. கண்டி இராச்சியம் மீண்டும் சுதந்திர நாடாகி விடும் என்ற சூழ்நிலை தோன்றியது. இலங்கையில் இருந்த பிரிட்டிஷ் படைகள் கலகத்தை அடக்க முடியாமல் தடுமாறின. இதனால் ஆங்கிலேயர் காலனியான சென்னையில் இருந்து, இந்தியப் படைகளை தருவிக்க வேண்டியதாயிற்று.

இந்தியப்படைகள் கண்ணில் பட்ட பொது மக்களை கொன்று, அவர்களின் சொத்துகளை நாசம் செய்து தான் கலகத்தை அடக்கினார்கள். இந்தியாவை பிராந்திய வல்லரசாக மாற்றும் எண்ணம், அன்றே பிரிட்டிஷ் காலனியாதிக்கவாதிகள் மனதில் எழுந்திருக்கும். நிகழ்கால பூகோள அரசியலையும் அதன் தொடர்ச்சியாகவே பார்க்க வேண்டியுள்ளது. வரலாறு திரும்புகின்றது என்று கூறுவார்கள். நமது கால இந்திய-இலங்கை ஆட்சியாளர்கள் ஆங்கிலேயத் தாயின் வயிற்றுப் பிள்ளைகளாகவே நடந்து கொள்கின்றனர்.

பனிப்போர் காலத்தில் இந்திய, இலங்கை அரசுகள் சோவியத் சார்பு முகாமுடன் நெருக்கமாகவிருந்தன. எழுபதுகளில் சோவியத் சார்பு இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி, மத்திய இடது கொள்கை கொண்ட சுதந்திரக் கட்சி அரசுடன் ஒத்துழைத்தது. ஸ்டாலினசம் குறித்த முரண்பாடுகளால் பிரிந்து சென்ற சீனா சார்பு கம்யூனிஸ்ட் கட்சியும் பாராளுமன்ற பாதையை நாடியது. இதனால் அதிலிருந்து பிரிந்த, ரோகன விஜேவீர தலைமையிலான இளைஞர்கள் மக்கள் விடுதலை முன்னணி என்ற இயக்கத்தை ஸ்தாபித்து ஆயுதமேந்திய புரட்சியை நடத்த விரும்பினர்.

இது ஒரு வகையில் இந்தியாவில் நக்சல்பாரி (மார்க்சிய லெனினிய) இயக்கங்களின் தோற்றத்தை ஒத்த வரலாறாக இருந்த போதிலும், ஜேவிபி அதிலிருந்து வேறுபட்டது. ஒரு காலத்தில் ஜேவிபி இலக்கியங்களில் பொல்பொட் புரட்சியாளராக புகழப்பட்டார். பொல்பொட்டின் க்மெர் ரூஜ் அமைப்பும், ஜேவிபியும் ஒரே தலைவிதியை பகிர்ந்து கொண்டதாலோ என்னவோ, இரண்டுமே கடும்போக்கு தேசியவாதத்தை கடைப்பிடித்தன. 1971 ம் ஆண்டு கிளர்ச்சியை அடக்குவதற்கு, சோவியத் யூனியனும், சீனாவும் இலங்கை அரசுக்கு உதவிய போதிலும், இந்தியப் படைகள் களத்தில் நின்று போரிட்டன. சுதந்திர இலங்கையின் வரலாற்றில் முதலாவது மனிதப் படுகொலை நடந்த வருடம் அது. பதினையாயிரத்திற்கும் குறையாதோர் படுகொலை செய்யப்பட்டனர்.

1977 ம் ஆண்டு ஆட்சியைப் பிடித்த வலதுசாரி யு.என்.பி. அரசு, சிறையில் இருந்த ஜெவிபியினருக்கு பொது மன்னிப்பு அளித்து விடுதலை செய்திருந்தது. 1983 இனக்கலவரத்தின் பின்னர், அதே அரசு மீண்டும் ஜேவிபியை தடை செய்தது. அன்று ஜேவிபி, மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளே இனக்கலவரத்திற்கு காரணம் என்று தடைக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. ஒரு பேரினவாத அரசு கொடுத்த விளக்கத்தை சிங்கள மக்களோ, அல்லது தமிழ் மக்களோ நம்பவில்லை. இருப்பினும் சிறிலங்கா அரசானது தமிழர்களுக்கு மட்டுமல்ல, இடதுசாரிகளுக்கும் எதிரானது என்பது நிரூபிக்கப்பட்டது.

தடை செய்யப்பட்டதால் தலைமறைவான ஜேவிபி உறுப்பினர்கள், நீண்ட கால கெரில்லா யுத்தத்திற்கு தயார் படுத்தினார்கள். அரசுக்கு எதிரான யுத்தத்தை ஆரம்பிக்க தக்க தருணம் பார்த்துக் காத்திருந்தார்கள். இந்திய-இலங்கை ஒப்பந்தம், எதிர்பார்த்திருந்த அரிய சந்தர்ப்பத்தை வழங்கியது. சிங்கள மக்கள் இந்தியாவின் தலையீட்டை விரும்பாததால், ஜேவிபியின் இந்திய எதிர்ப்பு பிரச்சாரம் ஈடுபட்டது. யுஎன்பி அரசாங்கத்தின் உள்ளேயும் அதிருப்தி நிலவியது. வருங்கால ஜனாதிபதியாகப் போகும் பிரேமதாச தலைமையில் ஒரு குழு கட்சிக்குள் கிளர்ச்சி செய்தது. முரண்நகையாக, இந்திய எதிர்ப்பாளர்களான ஜேவிபியும், பிரேமதாச அரசும் பிற்காலத்தில் ஒன்றுடன் ஒன்று மோதி பெரும் இரத்தக் களரியை உருவாக்கின.

இந்திய-இலங்கை ஒப்பந்தம் செய்யப்பட்ட சில வாரங்களில், கொழும்பில் மந்திரி சபை கூட்டம் நடந்து கொண்டிருந்த வேளை இரண்டு கிரனேட் குண்டுகள் வீசப்பட்டன. பாதுகாப்பு கடமையில் இருந்த ஜேவிபியைச் சேர்ந்த காவலர்களே, அந்த குண்டுவீச்சுக்கு காரணகர்த்தாக்கள். ஜனாதிபதி ஜே.ஆர்.யும், முக்கிய அமைச்சர்களையும் கொலை செய்யும் நோக்குடன் குண்டு வீசப்பட்டாலும், பலர் காயங்களுடன் உயிர் தப்பி விட்டனர். அந்தச் சம்பவம் ஏற்படுத்திய அதிர்வலைகள் நாடு முழுவதும் உணரப்பட்டன. யாழ் குடாநாட்டில் சாதாரண மக்கள், சிறிலங்கா அரசின் மேல் வெறுப்புக் கொண்டிருந்ததால், மந்திரிசபை குண்டுவெடிப்பை வரவேற்கவே செய்தனர்.

ஜேவிபியின் கிளர்ச்சியில் நேரடியாக பங்களிக்கா விட்டாலும், பெரும்பான்மைத் தமிழர்கள் அவர்களுக்கு தமது தார்மீக ஆதரவை தெரிவிக்க தயங்கவில்லை. ஆயினும் இந்தியப் படைகளின் பிரசன்னம் குறித்து தான், ஜேவிபியின் நிலைப்பாடு தமிழ் மக்களிடம் இருந்து முரண்பட்டது. தமிழ் மக்கள், இந்தியப் படைகளை பாதுகாப்பு அரணாகக் கருதினார்கள். பிரச்சினை சுமுகமாக தீர்ந்த பின்னர், படைகள் இந்தியாவுக்கு திரும்பும் என்று நம்பினார்கள். ஜேவிபியும், சிங்கள மக்களில் ஒரு பிரிவினரும், இந்தியப் படைகளை அந்நிய ஆக்கிரமிப்பு இராணுவமாக பார்த்தனர். இன்னும் இரண்டு மாதங்களில், புலிகளும் அத்தகைய நிலைப்பாட்டை எடுக்கவிருந்தனர்.

இனப்பிரப்பிரச்சினை தீர வேண்டும், யுத்தம் முடிய வேண்டும் என்று எதிர்பார்த்த சிங்களப் பொது மக்கள், இந்தியப் படைகளின் வருகையை தவறாக கருதவில்லை. ஆளும்கட்சியான வலதுசாரி யுஎன்பி ஆதரவாளர்கள், இடதுசாரி ஜேவிபியுடன் கணக்குத் தீர்க்க இது நல்ல சந்தர்ப்பம் என்று கருதினார்கள். தமது கழுத்துக்கு கிட்டே கத்தி வந்து விட்டதை, ஜேவிபியினரும் உணர்ந்திருந்தனர். அதனால் உடனடியாக இந்தியப் படைகள் வெளியேற வேண்டுமென்ற கோரிக்கையை முன் வைத்துப் போராடினார்கள். மக்கள் இந்தியப் பொருட்களை பகிஷ்கரிக்க வேண்டுமென போராட்டம் நடத்தினார்கள். பகிஷ்கரிப்பினால் தென்னிலங்கையில் இந்திய உற்பத்திப் பொருட்களின் விற்பனை வீழ்ச்சியடைந்தது. விற்பனையாளர்கள் இந்தியப் பொருட்களை பதுக்கி வைத்தனர், அல்லது வேறு நாட்டிலிருந்து தருவிக்கப்பட்டதாக கூறி விற்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. பகிஷ்கரிப்பை மீறி விற்ற கடைக்காரர்கள் எச்சரிக்கை செய்யப்பட்டனர், சில நேரம் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

சிறிலங்கா அரசு நீண்டகாலமாகவே இந்திய மருந்துகளையும், பேரூந்து வண்டிகளையும் இறக்குமதி செய்து வந்தது. அந்த வர்த்தகத்தில் எந்த வித பாதிப்பும் ஏற்பட்டதாகத் தெரியவில்லை. புடவை வகைகள், இரும்பு, போன்றவற்றை இறக்குமதி செய்யும் நடுத்தர இந்தியத் தமிழ் வணிகர்கள் தான் அதிகம் பாதிக்கப்பட்டனர். இதே வேளை, இந்தியப் படைகளின் கட்டுப்பாட்டில் இருந்த, வடக்கு-கிழக்கு மாகாணங்களில் இந்தியப் பொருட்கள் அளவுக்கு அதிகமாகவே வந்து குவிந்து கொண்டிருந்தன. மக்கள் அதுவரை கேள்விப்பட்டிராத பொருட்கள் எல்லாம் சந்தைக்கு வந்தன. வியாபாரிகள் தமிழ்ப் பொது மக்களை மட்டுமல்ல, இந்தியப் படையினரையும் வாடிக்கையாளர்களாக பெற்று விட்ட மகிழ்ச்சியில், அவற்றை இறக்குமதி செய்து விற்றுக் கொண்டிருந்தனர்.

"இந்தியப் படையினர், இந்தியாவில் இருந்து நேராக பலாலி விமானநிலையத்தில் வந்திறங்குவது போல, இந்தியப் பொருட்கள் கொழும்பைத் தவிர்த்து இறக்குமதியாகின்றதோ," என்று மக்கள் பேசிக் கொண்டனர். வட-கிழக்கு மாகாணங்களில் கடமையில் இருந்த இந்தியப் படையினருக்கு, இந்திய ரூபாயிலேயே ஊதியம் வழங்கப்பட்டது. இதனால் அவர்கள் விரும்பியோ விரும்பாமலோ இந்திய ரூபாய்களை புழக்கத்தில் விட்டனர். இந்திய ரூபாய் எந்தக் கடையிலும், இலகுவாக மாற்றக் கூடியதாக இருந்தது. இதனால் யாழ் குடாநாட்டில் இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடைந்தது. அன்று நடந்த மாற்றங்களை இப்படியும் கூறலாம்.

"ஈழம் ஒரு இந்தியக் காலனியாக மாறிக் கொண்டிருந்தது."


(தொடரும்...)

தொடரின் முன்னைய பதிவுகளை வாசிக்க:





No comments: