Monday, April 18, 2011

தென்னிலங்கையில் கொலையுதிர் காலம்


[இந்தியாவின் சூழ்நிலைக் கைதியான ஈழம்] (பகுதி - 16)


"நாடே சுடுகாடாகியது!" 1988, 1989 ஆண்டுகளில் தென்னிலங்கையில் வாழும் பாக்கியம் பெற்றவர்கள், அதனை நேரில் அனுபவித்திருப்பார்கள். பெருந்தெருக்களில் வாகனங்களில் பயணம் செய்வோர், எங்காவது ஒரு இடத்தில், பிணத்தை எரித்து எஞ்சிய சாம்பலை காணாமல் போக முடியாது. நாட்டில் சுடலைகளுக்கு பஞ்சம் ஏற்பட்டு விட்டது போலும். அதனால் தெருக்கள் எல்லாம் தற்காலிக சுடலைகளாகிக் கொண்டிருந்தன.

ஜேவிபி இயக்க உறுப்பினர்கள், அல்லது ஆதரவாளர்கள் ஆகியோர், பாதுகாப்புப் படையினரால் வேள்வித்தீயில் பலி கொடுக்கப்பட்டனர். வேள்விக்கடாவின் கழுத்தில் 'டயர்' போட்டு எரிப்பது, அரச கொலைப் படைகளுக்கு பிடித்தமான விளையாட்டு. ஜேவிபியினர் அழிந்த பின்னரும், அந்தக் கதைகள் திகிலை ஏற்படுத்திக் கொண்டிருந்தன. அரசாங்கத்தை விமர்சித்த பத்திரிகையாளர் ஒருவரை தொலைபேசியில் தொடர்பு கொண்ட இராணுவ அதிகாரி ஒருவர்; "கழுத்தில் டயர் மாலை போடுவோம், ஜாக்கிரதை." என்று பயமுறுத்தினார்.

கொழும்புக்கு அருகில் ஓடும் களனி ஆற்றில், மக்கள் இறங்கிக் குளிக்க அஞ்சினார்கள். ஒவ்வொரு நாளும் ஒரு இளம்பெண்ணின் சடலம் மிதந்து கொண்டிருந்தது. ஜேவிபி சந்தேகநபர்களாக பிடிக்கப்படும் பெண்களை சித்திரவதை செய்து, அவர்களின் உயிரற்ற நிர்வாண உடல்களை நகர மத்தியில் போடுவார்கள். அன்றைய நாட்களில், இவற்றைக் காண நேரும் பொது மக்கள் பீதியுற்றனர்.

சில வருடங்களுக்குப் பின்னர், அந்த அட்டூழியங்கள் எல்லாம் தேர்தல் பிரச்சாரத்தில் பயன்படுத்தப் பட்டன. யுஎன்பி அரசை தேர்தலில் தோற்கடிப்பதற்காக, சந்திரிகாவின் ஐக்கிய முன்னணி கட்சியினர் அந்தக் காட்சிகளை போஸ்டராக அச்சடித்து ஒட்டினார்கள். (மலினமான தேர்தல் பிரச்சார உத்தியை பெண்கள் அமைப்புகள் கண்டித்திருந்தன.) அது போன்றே சூரியகந்த எனுமிடத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழியும், ஐக்கிய முன்னணி வெற்றியை உறுதி செய்திருந்தது.

சூரிய கந்த புதைகுழியில் கொன்று புதைக்கப் பட்டவர்கள், விடலைப் பருவத்து பாடசாலை மாணவர்கள். ஜேவிபி ஆதரவுத் தளமாக திகழ்ந்த பாடசாலையை சேர்ந்த மாணவர்கள் என்பதால் அந்த கொடூரமான தண்டனை. பல வருடங்களாக அவர்கள் "காணாமல் போனோர்" பட்டியலில் சேர்க்கப் பட்டிருந்தனர். தென்னிலங்கையில் அந்த இரண்டு வருடங்களில் மட்டும் குறைந்தது இருபதாயிரம் பேராவது காணாமல் போயுள்ளனர். அவர்களும் எங்காவது இரகசிய புதைகுழிகளில் கொன்று புதைக்கப் பட்டிருக்கலாம். இலங்கையின் வட பகுதியிலும் இளைஞர்கள் காணாமல் போவதும், மனிதப் புதைகுழிகள் கண்டுபிடிக்கப் படுவதும் நடந்துள்ளன. ஆரம்பத்தில் சிங்கள, தமிழ் மக்கள் மத்தியில் தனித்தனியாக இயங்கி வந்த காணாமல் போனோர் அமைப்புகள், தற்போது ஐக்கிய வேலைத்திட்டத்தின் கீழ் ஒன்றாக செயற்படுகின்றன. "காணாமல் போவதற்கு எதிரான சர்வதேச கமிட்டி" யின் ஆதரவும் கிட்டியுள்ளது.

அன்றைய காலம், காணாமல் போகச் செய்வதிலும், கொலை செய்வதிலும் தேர்ச்சி பெற்ற கொலைப் படை ஒன்று இயங்கியது. அது தன்னை "பச்சைப் புலிகள்" என்று அழைத்துக் கொண்டது. அன்றைய ஆளும் கட்சியான யுன்பியின் வர்ணம் பச்சை என்பது குறிப்பிடத் தக்கது. அரச பாதுகாப்புப் படைகளை சேர்ந்தவர்களே, "பச்சைப் புலிகள்" என்ற பெயரில் அவதாரம் எடுத்திருந்தனர். அது ஒரு சட்டத்திற்கு புறம்பான, ஜனாதிபதியையும், பாதுகாப்பு அமைச்சரையும் தவிர வேறு யாருக்கும் பதில் கூற கடமைப் பட்டிராத அமைப்பு. சீருடை அணியாமல் சிவில் உடையுடன், இலக்கத் தகடு இல்லாத வாகனங்களில் திரிவார்கள். அவர்கள் யாரைக் கடத்திச் சென்றாலும், அல்லது கொலை செய்தாலும், பழி முழுவதும் "இனந்தெரியாதோர்" தலையில் விழுந்தது. அரச பாதுகாப்புப் படைகள் பொறுப்பில் இருந்து தப்பிக் கொண்டன.

ஜேவிபி ஒன்றும் புனிதமான இயக்கமல்ல. போலீஸ்காரர்களை இலக்கு வைத்து தாக்கி அழித்ததை விட, கொல்லப்பட்ட "துரோகிகளே" அதிகம். ஜேவிபி அகராதி படி, யாரும் துரோகி ஆகலாம். ஆளும் கட்சியான யுஎன்பி உறுப்பினர்கள், இந்திய-இலங்கை ஒப்பந்த ஆதரவாளர்கள், போலிசுக்கு காட்டிக் கொடுப்பவர்கள், மாற்றுக் கருத்தாளர்கள் அனைவரும் துரோகிகளாக அடையாளம் காணப்பட்டனர். ஜேவிபி ஆதரவாளர்கள், துரோகிகளுக்கு மரண தண்டனை வழங்குவதை நியாயம் என்று வாதாடினார்கள்.

இயக்கத்தை விட்டு பிரிந்து சென்றவர்களும் துரோகிகளாக கருதப்பட்டு கொலை செய்யப்பட்டனர். இதனால் ஜேவிபியுடன் முரண்பட்ட குழுவொன்று, அரசுடன் கூட்டுச் சேர்ந்தது. ஜேவிபி உறுப்பினர்களையும், மறைவிடங்களையும், போலிசுக்கு காட்டிக் கொடுத்தார்கள். "ஜேவிபி தான் எமது முதலாவது எதிரி. அரசு இரண்டாவது எதிரி. ஜேவிபி பாசிசத்தை அழிப்பது அவசரக் கடமை." என்று தமது செயலுக்கு நியாயம் கற்பித்தனர். ஜேவிபியில் இருந்த பிரிந்த எல்லோரும் அரசுடன் கூட்டுச் சேரவில்லை. சில ஆளுமையுள்ள நபர்கள் பத்திரிகைத் துறையில் ஈடுபட்டனர். இலங்கை அரசையும், ஜேவிபியையும் விமர்சித்து எழுதி வந்தனர்.

ஜேவிபி பிரகடனம் செய்த "துரோகிகள் பட்டியல்" நீண்டு கொண்டே சென்றது, அதன் அஸ்தமனத்திற்கு காரணமாயிற்று. அரசை விட ஜேவிபி தான், நாடளாவிய கொலைக் கலாச்சாரத்தால் அதிகம் பாதிக்கப் பட்டது. இறுதியில் ஜேவிபி உறுப்பினர்களும், அவர்களின் உறவினர்களையும் தவிர மற்றவர்களின் ஆதரவை இழக்க வேண்டியேற்பட்டது. குறிப்பாக இராணுவத்தை பகைத்துக் கொண்டமை, மனிதப் பேரழிவுக்கான பாதையை திறந்து விட்டது. சிறிலங்கா அரசு, பாதுகாப்புப் படைகள் முழுவதையும் ஜேவிபியுடன் போரிட பயன்படுத்தியது. இதனால், முன்னர் இராணுவத்தில் சேர்ந்திருந்த ஜேவிபி உறுப்பினர்களும் எதிரிகளானார்கள்.

"சேவையில் உள்ள ஜேவிபி உறுப்பினர்கள், உடனடியாக இராணுவத்தை விட்டு விலகி எம்முடன் இணைந்து கொள்ள வேண்டும்," என்று ஜேவிபி அறிவித்ததாக அன்று கிடைத்த தகவல்கள் கூறுகின்றன. "இராணுவத்தை விட்டு விலகாதவர்கள், எதிரிகளாக கருதப் படுவார்கள். அவர்களது குடும்ப உறுப்பினர்கள் கொலை செய்யப் படுவார்கள்." இவ்வாறு ஜேவிபி அறிவித்திருந்தது. அப்படியான வாசகங்களைக் கொண்ட சுவரொட்டிகள், "தேசப்பக்த விடுதலை முன்னணி" பெயரில் ஒட்டப் பட்டிருந்தன.

உண்மையிலேயே பல இராணுவ வீரர்களின் குடும்ப உறுப்பினர்கள் கொலை செய்யப் பட்டனர். அதற்கு பழி வாங்கும் முகமாக, ஜேவிபி யை சேர்ந்தோரின் குடும்பத்தவர்கள் கொல்லப் பட்டனர். அரச படைகளால் படுகொலைக்கு ஆளாவோர் ஜேவிபி உறுப்பினர்களாக இருக்க வேண்டிய அவசியமில்லை. துரதிர்ஷ்டவசமாக ஜேவிபி காரர்களை நண்பர்களாக கொண்டிருந்தவர்களும் கொல்லப்பட்டனர். சிலநேரம் தனது நண்பன் ஒரு ஜேவிபி உறுப்பினர் என்று அவர்களே அறிந்திருக்க மாட்டார்கள். அந்தக் காலத்தில் நடந்த கொடூரங்கள் வார்த்தைகளால் வடிக்க முடியாதவை. அப்படியான சம்பவங்கள் நடந்ததாக நிரூபிக்கவும் முடியாது.

எனக்குத் தெரிந்த கதை ஒன்று இரத்தத்தை உறைய வைத்தது. தமது பிள்ளை காணாமல் போனதால் கவலையுடன் தேடிக் களைத்த குடும்பத்தினரிடம், ஒரு குழு ஆயுதபாணி இளைஞர்கள் தொடர்பு கொண்டனர். காணாமல்போன நபர் தம்மிடம் பத்திரமாக இருப்பதாகவும், கூட்டி வருவதாகவும் தெரிவித்தனர். அதனை கொண்டாடுவதற்காக இறைச்சி கொண்டு வந்து சமைக்க கொடுத்தனர். எல்லோரும் அமர்ந்து விருந்து சாப்பிட்ட முடிந்த பின்னர், அந்த அதிர்ச்சியான தகவலை தெரிவித்தனர். "நீங்கள் இப்போது சாப்பிட்டது உங்கள் மகனது இறைச்சி!" அந்தக் கதை வதந்தியாகவும் இருக்கலாம். ஆனால் மக்கள் எத்தகைய துன்பங்களை அனுபவித்தனர் என்பதற்கு வேறு உதாரணம் தேவையில்லை.

ஜேவிபி, "இராணுவ வீரர்களின் குடும்ப உறுப்பினர்களை கொலை செய்யப் போவதாக" அறிவித்தது, அரசின் சூழ்ச்சி என்று சிலர் கூறுகிறார்கள். எது உண்மை, எது பொய் என்பது தெரியாமலே போகலாம். ஜேவிபியின் தலைவர்கள், உறுப்பினர்கள் பெருமளவில் கொல்லப்பட்டு விட்டனர். மேலும் ஜேவிபியுடன் தொடர்புடைய குடும்பங்கள், உறவினர்கள், ஆதரவாளர்கள் என்று பல நிராயுதபாணிகளும் கொல்லப்பட்டனர். இறுதிப் போரில் கொல்லப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை எழுபதாயிரமாக இருக்கலாம். ஜேவிபி பிற்போக்குவாத தலைமையின் தவறுகள் அழிவுப் பாதைக்கு இட்டுச் சென்றதை மறுக்க முடியாது. அதே நேரம், இடது-தேசியவாத எழுச்சி கூட தனது நலன்களுக்கு விரோதமானது என்று சர்வதேச சமூகம் கருதியது. உழைக்கும் மக்களின் மனக்குறைகளை கணக்கில் எடுக்காததால், மக்கள் மீண்டும் மீண்டும் பிற்போக்கு சக்திகளையே நாடிச் செல்கின்றனர்.

யுஎன்பி ஆட்சியில் நடந்த படுகொலைகளுக்காகவும், மனித உரிமை மீறல்களுக்காகவும், அடுத்து வந்த பொதுத் தேர்தல்களில் அந்தக் கட்சி தோல்வியைத் தழுவியது. இருப்பினும் தேர்தலில் வென்ற எதிர்க்கட்சி ஆட்சிக்கு வந்ததால் யாருக்கும் நீதி கிடைக்கவில்லை. யுஎன்பி அரசின் கொலைக் குழுக்கள் செய்த படுகொலைகளை பிரச்சாரம் செய்து, ஆட்சியைப் பிடித்த ஐக்கிய முன்னணி அரசு, எந்த விசாரணையும் செய்யவில்லை. இதில் வேடிக்கை என்னவென்றால், பாராளுமன்ற பாதைக்கு திரும்பிய மிதவாத ஜேவிபி கூட எந்த அழுத்தமும் கொடுக்கவில்லை. தேர்தலில் கட்சிகள் மாறினாலும், அரசு இயந்திரம் ஒன்று தான். அரசுக்கு எதிராக கிளம்பும் சக்திகள், சிறுபான்மை இனமாக இருந்தாலும், சொந்த இனமாக இருந்தாலும், ஈவிரக்கமின்றி அடக்கப்பட்டு வந்துள்ளது. இதிலிருந்து பாடம் படிக்காதவர்கள், வரலாற்றை மறுபடியும் உற்பத்தி செய்கின்றனர்.

(தொடரும்...)

தொடரின் முன்னைய பதிவுகளை வாசிக்க:
15.சிங்கள- தலித் ஜனாதிபதியின் திகில் ராஜாங்கம்
14. இலங்கையை உலுக்கிய "சேகுவேரா போராட்டம்"
13.தென்னிலங்கை கிளர்ச்சியில் சிங்கள தலித்- படுகொலை
12.ஈழ அகதிகளுக்கு தஞ்சம் அளித்த சிங்கள அரசு!
11.யாழ் குடாநாடெங்கும் ஆயுதப் புதையல்கள்
10.ஈழத் தமிழருக்கு இந்தியர்களும் அடக்குமுறையாளர்கள்
9.அந்நிய இராணுவத்தின் முற்றுகைக்குள் யாழ் குடாநாடு
8.ஆக்கிரமிப்புப் படையாக மாறிய அமைதிப் படை
7.ஆயுதக் குழுக்களுடன் அமைதி காத்த இந்திய இராணுவம்
6.இந்தியத் தலையீடுகளும், ஜேவிபி யின் ஐயப்பாடுகளும்
5.யாழ் குடாநாட்டில் வந்திறங்கிய இந்தியப் படைகள்
4.சென்னையில் அடைக்கலமான அகதிகளும், போராளிகளும்
3.தமிழகத்தில் ஈழ அகதிகளின் வர்க்கப் பிரச்சினை
2.ஈழ அகதிகளை ஆயுதபாணிகளாக்கிய இந்தியா
1.இந்தியாவின் சூழ்நிலைக் கைதியான ஈழம்

1 comment:

Mohamed Faaique said...

விவரமான தகவல்களுக்கு நன்றி...