Sunday, April 24, 2011

அமெரிக்கர்கள் கைவிட்ட ஹ்மொங் விடுதலைப் போராட்டம்


"உலகில் பல நாடுகளின் இன முரண்பாடுகள், ஏகாதிபத்திய பொருளாதார ஆதிக்கப் போட்டியின் வெளிப்பாடு." இந்த உண்மையை இன்றைக்கும் பலர் உணர மறுக்கின்றனர். பல மூன்றாம் உலக நாடுகளில் நடந்த, "இன விடுதலைப் போர்களை" அதற்கு உதாரணமாகக் காட்டலாம். லாவோ நாட்டில் ஹ்மொங் இன மக்கள் நடத்திய முப்பதாண்டு கால விடுதலைப் போர், ஆய்வுக்குட்படுத்தப் பட வேண்டிய ஒன்று. அமெரிக்காவினதும், சி.ஐ.ஏ. யினதும் அளவுக்கதிகமான ஆதரவைப் பெற்ற விடுதலைப் போராட்டங்களில் அதுவும் ஒன்று. அதிலும் குறிப்பாக, அமெரிக்கர்கள் வெறுக்கும் "கம்யூனிசப் பூதத்திற்கு" எதிராக போராடியவர்கள், ஹ்மொங் மக்கள். இன்றைக்கு ஹ்மொங் சிறுபான்மை இனத்தவர்களின் தலைவிதியை தீர்மானிக்கும் பொறுப்பை, லாவோ நாட்டை ஆளும் கம்யூனிஸ்ட்களின் கையில் விடப்பட்டுள்ளது. அமெரிக்காவிற்கு புலம்பெயர்ந்து வாழ்ந்த "ஹ்மொங் தேசியத் தலைவரையும்" கைது செய்து சிறையில் போடுமளவிற்கு அமெரிக்காவின் வெளிவிவகாரக் கொள்கை தலைகீழாக மாறியது. அண்மையில் கசிய விடப்பட்ட ராஜாங்க திணைக்கள அறிக்கை ஒரு உண்மையை வெளிப்படுத்தியது. "கம்யூனிச" லாவோ அரசுக்கும், அமெரிக்காவுக்கும் இடையில் நல்லுறவு ஏற்பட்டுள்ளது. எல்லாமே பணத்துக்காகத் தான். பொருளாதாரம் முக்கியம், அமைச்சரே!

சுமார் முப்பதாண்டுகளுக்கு முன்னர் முடிவடைந்த, அமெரிக்க-வியட்னாம் போரின் இறுதியில், வியட்நாமிலும், லாவோசிலும் கம்யூனிஸ்ட்கள் ஆட்சியைப் பிடித்தனர். அன்றிலிருந்து லாவோஸ் நாட்டில் ஹ்மொங் தேசிய விடுதலைப் போராட்டம் ஆரம்பமாகியது. அமெரிக்காவின் ஆதரவைப் பெறுவதற்காக, ஹ்மொங் போராளிகள் கம்யூனிச எதிர்ப்பாளர்களாக காட்டிக் கொண்டனர். ஆனால், பெரும்பான்மை லாவோ இனத்திற்கும், சிறுபான்மை ஹ்மொங் இனத்திற்கும் இடையிலான இன முரண்பாடுகளே யுத்தத்திற்கு காரணம். மலைவாழ் ஹ்மொங் மக்கள் மொழியால், கலாச்சாரத்தால் லாவோ மக்களிடம் இருந்து வேறுபட்டவர்கள். வளமற்ற மலைப்பிரதேசம் என்பதாலும், அவர்களின் வாழிடங்கள் அபிவிருத்தியின்றி பின்தங்கியிருந்தன. வியட்னாம் யுத்தம் நடந்து கொண்டிருந்த காலத்தில், ஹ்மொங் பிரதேசம் கேந்திர முக்கியத்துவம் பெற்று விளங்கியது.

வியட்னாம் யுத்தம் தொடங்கிய அறுபதுகளில், சி.ஐ.ஏ. லாவோசில் ஒரு இரகசிய நகரம் கட்டியிருந்தது. (The Most Secret Place On Earth) உலக வரை படத்தில் இல்லாத அந்த இரகசிய நகரம் குறித்து, அமெரிக்க ஊடகங்களும் அறிந்திருக்கவில்லை. அன்று வட வியட்நாமில் மட்டும் கம்யூனிச ஆட்சி நடந்தது. அமெரிக்க கட்டுப்பாட்டில் இருந்த தென் வியட்னாமினுள், கம்யூனிசப் போராளிகள் ஊடுருவி தாக்குதல் நடத்தினார்கள். வியட்னாமின் அயல்நாடான லாவோஸ் ஊடாகத் தான் அந்த ஊடுருவல் இடம்பெற்றது. லாவோசில் ஹ்மொங் மக்களின் பிரதேசம் வட வியட்னாம் எல்லையோரம் அமைந்துள்ளமை குறிப்பிடத் தக்கது. அங்கே தான் சி.ஐ.ஏ. இரகசிய நகரம் கட்டியது. அமெரிக்கர்களைத் தவிர, அமெரிக்காவுக்கு விசுவாசமான ஹ்மொங் மக்கள் மட்டுமே அந்த நகரத்தில் வாழ்ந்தனர். வியட்னாம் கம்யூனிஸ்ட் போராளிகளை எதிர்த்துப் போராடுவதற்காக 60 % ஹ்மொங் ஆண்களுக்கு இராணுவப் பயிற்சி வழங்கப் பட்டது. ஜெனரல் வங் பாவோ தலைமையிலான ஹ்மொங் கெரில்லா படையணி, வியட்நாமிய கம்யூனிஸ்ட் போராளிகளை விரட்டியடிக்க பயன்படுத்தப் பட்டது. அமெரிக்கா ஹ்மொங் போராளிகளுக்கு தேவையான ஆயுதங்கள், நிதி வழங்கியது மட்டுமல்ல, அவர்களின் குடும்பங்களையும் கவனித்துக் கொண்டது. வியட்னாம் யுத்தம் முடிந்த அதே நேரத்தில், லாவோசிலும் Pathet Lao என்ற கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சிக்கு வந்தது. அமெரிக்கர்கள் வியட்னாம், லாவோசை விட்டு விலகி விட்டாலும், தாய்லாந்து ஊடாக ஹ்மொங் போராளிகளுக்கு உதவினார்கள்.

லாவோ சுதந்திரத்தின் பின்னர், வங் பாவோ தலைமையிலான ஹ்மொங் போராளிகள் லாவோ பேரினவாதத்திற்கு எதிரான விடுதலைப் போராட்டத்தை நடத்தினார்கள். அமெரிக்காவிலும் சில கிறிஸ்தவ நிறுவனங்கள் லாவோ மக்களுக்கு ஆதரவாக அரசுக்கு அழுத்தம் கொடுத்தார்கள். சி.ஐ.ஏ. குறிப்பிட்ட காலம், ஹ்மொங் போராளிகளுக்கு ஆயுதங்களும், நிதியும் வழங்கிய போதிலும், பின்னர் நிறுத்தி விட்டது. தற்போது "கம்யூனிசம் இறந்து விட்டதால்", கடந்த இரு தசாப்தங்களாக ஹ்மொங் போராளிகளுக்கு எந்த வெளி உதவியும் கிடைக்கவில்லை. கரடுமுரடான மலைகளில், வனாந்தரங்களில் பதுங்கியிருந்த ஹ்மொங் கெரில்லாக் குழுக்கள், லாவோ படையினரைத் தவிர வேறு எந்த வெளியாரையும் காணவில்லை. வியட்னாம் போர்க் கால ஆயுதங்களைக் கொண்டு லாவோ இராணுவத்தை எதிர்த்து போராட முடியவில்லை. உணவின்றி பட்டினியால் வாடிய ஹ்மொங் போராளிகள், இறுதியில் லாவோ படையினரிடம் சரணடைந்தனர். இதற்கிடையே அயல்நாடான தாய்லாந்தில் தஞ்சம் கோரிய ஆயிரக்ககணக்கான ஹ்மொங் அகதிகளை, அந்த நாடு திருப்பி அனுப்பத் தொடங்கியுள்ளது.

ஆயிரக்கணக்கான ஹ்மொங் அகதிகள் அமெரிக்காவில் வாழ்கின்றனர். ஹ்மொங் கெரில்லா இராணுவத்தின் தலைவர் வங் பாவோ கூட அமெரிக்காவில் தான், தனது இறுதிக் காலத்தை கழித்தார். அமெரிக்காவில் வாழும் முதலாம் தலைமுறையை சேர்ந்த ஹ்மொங் அகதிகள் மட்டுமே இன்றும் கூட ஹ்மொங் தேசிய விடுதலை குறித்து பேசி வருகின்றனர். தாயகத்துடன் தொடர்பற்ற இரண்டாம் தலைமுறையினருக்கு அது குறித்து அதிக அக்கறை இல்லை. 2007 ம் ஆண்டு, வங் பாவோ அமெரிக்க பொலிசாரால் கைது செய்யப்பட்டார். அமெரிக்காவில் இருந்து கொண்டு லாவோ அரசைக் கவிழ்க்க சூழ்ச்சி செய்தார் என்று அவர் மீது குற்றம் சாட்டப் பட்டது. இவ்வருடம் மாரடைப்பால் மரணமடைந்த வங் பாவோ கைதுக்கு, அமெரிக்க - லாவோ இராஜ தந்திர நகர்வே காரணம். கசிய விடப்பட்ட விக்கிலீக்ஸ் கேபிள் ஒன்று அதனை உறுதி செய்துள்ளது. லாவோ அரசு சோஷலிச பொருளாதாரத்தை கைவிட்டு, முதலாளித்துவத்தை தழுவிக் கொண்டுள்ளது. அமெரிக்காவுடனும் நட்புறவை ஏற்படுத்திக் கொண்டுள்ளது. பெரு மூலதனத்துடன் சேர விரும்பும் லாவோ ஆட்சியாளர்களின் முடிவை அமெரிக்காவும் வரவேற்கின்றது. "லாவோ அரசாங்கத்தை சேர்ந்த அமைச்சர்கள் ஊழலில் திளைப்பதாகவும், மாதம் 75 டாலர் சம்பளத்தில், ஆடம்பர பங்களா, கார் என்று பணக்கார வாழ்க்கை வாழ்வதாகவும்..." அமெரிக்க அரசு குறை கூறியிருந்தது. "ஆயினும் கம்யூனிஸ்ட்களை விட, ஊழல் பெருச்சாளிகள் சிறந்தவர்கள்!" என்ற முதலாளித்துவ தத்துவமே அமெரிக்காவின் நண்பர்களை தீர்மானிக்கின்றது.



மேலதிக விபரங்களுக்கு:

WikiLeaks cables bare secrets of U.S.-Laotian relations
Settled after 35 years, Hmong must decide: What's next?
லாவோசில் சி.ஐ.ஏ. கட்டிய மர்ம நகரம்

No comments: