Sunday, May 01, 2011

மே தினம் இராணியின் தினமாக மாறிய கதை


உலகம் முழுவதும் மே தினத்திற்கு விடுமுறை விடப்படுகின்றது. ஒரு சில நாடுகள் மட்டும் விதி விலக்கு. சுவிட்சர்லாந்தில் சில மாகாணங்களில் மட்டுமே விடுமுறை அங்கீகரிக்கப் பட்டுள்ளது. இரண்டாம் உலகப்போரின் பின்னர், நெதர்லாந்தில் மே தின விடுமுறை இரத்து செய்யப்பட்டது. அதற்கு தெரிவிக்கபப்டும் காரணம், மே தினத்திற்கு முதல் நாள், அதாவது ஏப்ரல் 30 அன்று, இராணியின் பிறந்த தினம் கொண்டாடப்படுகின்றது. அதுவும் தற்போது இராணியாக முடி சூட்டிக் கொண்ட பெயாற்றிக்ஸ்சின் பிறந்த தினமல்ல. ஏற்கனவே முடி துறந்த அவரது தாயார், யூலியானாவின் பிறந்த தினம்.

இது குறித்து பல வெள்ளையின நெதர்லாந்து பிரஜைகளிடம் கருத்துக் கேட்ட பொழுது, அவர்களின் அரசியல் பாமரத்தனம் வெளிப்பட்டது. முன்னை நாள் இராணியின் பிறந்த தினம், கோடை கால தொடக்கத்தில் வருவதால், வெளிப்புறக் கொண்டாட்டத்திற்கு ஏற்ற தினம், என்று தெரிவித்தனர். ஆனால், "இராணியின் தினத்திற்கு" அடுத்த நாள், உழைப்பாளர்களின் மே தினம் என்ற உண்மை பலருக்கு தெரியாது.

இரண்டாம் உலகப்போருக்கு முன்னர், பெரும்பான்மை உழைப்பாளர்களினால் கொண்டாடப்பட்ட மே தினத்தை, இன்றைய உழைக்கும் வர்க்கம் மறந்து பல தசாப்தங்களாகி விட்டன. இன்றைய உழைப்பாளிகள், இராணியின் தினத்தை மது அருந்தி, மகிழ்வுடன் ஆடிப்பாடிக் களிக்கின்றனர். முதல் நாள் மது அருந்திய மயக்கத்தில், அடுத்த நாள் உழைப்பாளர்களின் தினம் என்ற உண்மையை மறந்து போகின்றனர். நெதர்லாந்தில் கம்யூனிசம் போன்ற "தீமைகளை" கருவறுக்க அரசு கொண்டு வந்த திட்டம், சிறப்பாக செயற்படுகின்றது. "இராணி வாழ்க!"

இராணியின் தினத்தன்று, வர்த்தக விடுமுறை தினமாகும். அனைத்து வர்த்தகர்களும் கடைகளை மூடி விட வேண்டும். ஏனெனில், அன்றைய தினம் மட்டும் விற்பனை வரி அறவிடப் படுவதில்லை. இதனால், உழைத்துக் களைத்த சாமானிய மக்கள், ஒரு நாள் வியாபாரிகளாக முதலாளித்துவத்தின் சுவையை நுகர முடிகின்றது. இராணியின் தினத்தன்று, நடைபாதையில் கடை விரித்து எந்தப் பொருளையும் விற்கலாம். பலர், தமது வீடுகளில் கழித்து விடப்பட்ட பாவனைப் பொருட்களையும் கொண்டு வந்து போட்டு விற்பார்கள்.

பாவித்த பொருட்களையும், கடைகளில் விற்கப் படாமல் தேங்கி விட்ட சரக்குகளையும் மிகக் குறைந்த விலைக்கு வாங்கிச் செல்ல வாடிக்கையாளர்கள் ஈயாக மொய்ப்பார்கள். பெரியவர்கள் மட்டுமல்ல, சிறுவர்களும் ஏதாவது விற்று நாலு காசு சேர்க்கும் படி அறிவுறுத்தப் படுவார்கள். வயலின் வாசித்துக் காட்டி, அல்லது வீட்டில் தயாரித்த தின்பண்டங்கள் விற்று, சிறுவர்கள் "வருங்கால முதலாளிகளாக" வருவதற்கான திறமைகளை வெளிப்படுத்துவார்கள். முன்னாள் சோஷலிச நாடுகளில் சிறுவர்கள் மூளைச் சலவை செய்யப்பட்டதாக பாட நூல்களும் போதிக்கின்றன. ஆனால், முதலாளித்துவ நாடுகளிலும் சித்தாந்தத்தை சிறு வயதிலேயே மூளைக்குள் திணிக்கத் தொடங்கி விடுகிறார்கள்.

நான் நெதர்லாந்துக்கு வந்த ஆரம்ப காலம், ஒரு வருடம் ஒரு கிராமத்தில் தங்கியிருக்க வேண்டியிருந்தது. கிராமத்து மக்களுடன் தொடர்பு கொள்வதன் மூலம், வெளிநாட்டவர்களை கண்டிராத மக்களுக்கும் புரிந்துணர்வை ஏற்படுத்துவது அரசின் ஏற்பாடு. அப்போது சந்தித்த மக்களிடம், உலகில் பல நாடுகளில் அரசாட்சி ஒழிக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆகியும், நெதர்லாந்து ஒரு இரானிய அரசுத் தலைவராக கொண்டிருப்பது குறித்து கருத்துக் கேட்போம். ஐம்பது வருடங்களுக்கு முன்னர், வறுமையில் வாடிய மக்கள், இன்று செல்வந்த வாழ்க்கை வாழ்வதற்கு, தமது இராணியின் தாராள குணமே காரணம் என்று கூறியது வியப்பை அளித்தது.

"இராணி தனது நகைகளை விற்று குடி மக்களின் வறுமையை போக்கியதாக..." அப்பாவித்தனமாக நம்பிக் கொண்டிருக்கின்றனர். நெதர்லாந்து அரச வம்சம், காலனிய நாடுகளை சுரண்டி செல்வம் சேர்த்த உண்மையை அவர்கள் அறிந்திருக்கவில்லை. இந்த நாட்டின் பாட நூல்களும் அந்த விடயத்தில் மௌனம் சாதிக்கின்றன.

கிழக்கிந்தியக் கம்பனி என்ற பெயரில் கடல் கடந்து வாணிபம் செய்த, ஒல்லாந்து காலனியாதிக்கவாதிகள் கொள்ளையடித்த செல்வத்தில் பெரும் பகுதி அரச குடும்பத்தை சென்றடைந்தது. காட்டிலே வேட்டையாடிய மிருகத்தின் பெரும்பகுதி சிங்கத்திற்கே சேரும். எஞ்சிய இறைச்சியை தான் நரி போன்ற மிருகங்கள் உணவாகக் கொள்ளும். அதனால் தானோ என்னவோ, நெதர்லாந்தின் "ஒரான்யெ" அரச வம்சம், சிங்கத்தை அரச இலச்சினையாக கொண்டுள்ளது. உலகின் இரண்டாவது பணக்காரப் பெண்மணியான இராணியின் மாளிகையில், இன்றைக்கும் சிங்கக்கொடி பட்டொளி வீசிப் பறந்து கொண்டிருக்கிறது.

நெதர்லாந்து அரச வம்சத்தினர் கம்யூனிஸ்டுகளை வெறுப்பதற்கு தனிப்பட்ட காரணமும் இருக்கிறது. சார் மன்னனின் ரஷ்யாவில் அவர்கள் பெருமளவு பணத்தை முதலீடு செய்திருந்தார்கள். எதிர்பாராத விதமாக, 1917 ல் இடம்பெற்ற போஷேவிக் கம்யூனிசப் புரட்சி இடியென இறங்கியது "சார் மன்னன் வாங்கிய அந்நிய நாட்டுக் கடன்களுக்கு, போல்ஷெவிக் புரட்சியாளர்கள் பொறுப்பேற்க முடியாது," என்று அறிவித்து விட்டனர். இதனால் போட்ட முதலையும் இழந்து, வட்டியையும் பறி கொடுத்த ஆத்திரத்தில் இருந்தனர், நெதர்லாந்து அரச வம்சத்தினர்.

போல்ஷெவிக் ஆட்சிக்கு எதிராக எதிர்ப்புரட்சியில் ஈடுபட்ட வெள்ளைப் படையினருக்கு, நிதியுதவி வழங்கினார்கள். ஆயினும், அதிர்ஷ்டம் அவர்கள் பக்கம் திரும்பவில்லை. உள்நாட்டுப் போரில், எதிர்ப்புரட்சியாளர்களை தோற்கடித்த போல்ஷெவிக் கம்யூனிஸ்டுகள், இறுதி வரை வெளிநாட்டுக் கடன்களை திருப்பிக் கொடுக்கவேயில்லை. "இரண்டாம் உலகப்போரின் இறுதியில், பெர்லின் வரை வந்த செம்படை நெதர்லாந்தையும் பிடித்து விடுவார்கள்." என்று வதந்தியை கிளப்பி விட்டார்கள்.

"கம்யூனிசப் பூதம் பிடித்துச் சாப்பிட்டு விடும்", என்ற அச்சத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்தார்கள். அரச வம்சம் உழைப்பாளர்களின் மே தினத்தை அபகரித்து, இராணியின் தினமாக மாற்றி விடுவதற்கு இவ்வளவு காரணங்கள் போதாதா?

No comments: