Thursday, April 19, 2012

பெற்றோரிடம் இருந்து குழந்தைகளை பிரிக்கும் நோர்வே ! - ஓர் ஆய்வு



"இந்தியா, இலங்கை இலிருந்து புலம்பெயர்ந்து, நோர்வே நாட்டில் வாழும்  பெற்றோருக்கு, தமது  குழந்தைகளை சரியாக வளர்க்கத் தெரியாது!" 
இந்தக் குற்றச்சாட்டை முன் வைத்து, நோர்வே அரச அலுவலர்கள், அவர்களது பிள்ளைகளை பிரித்துச் சென்று, குழந்தைகள் நல காப்பகத்தில் தடுத்து வைத்திருக்கின்றனர். இந்தச் செய்தி , அண்மையில் இந்திய, தமிழ் ஊடகங்களில் முக்கிய இடத்தைப் பிடித்திருந்தது. இந்தச் சம்பவம் ஏற்கனவே, பல தடவைகள் நோர்வேயில் நடந்துள்ளன. கடந்த வருடம், மூன்று சோமாலியக் குடும்பங்களை சேர்ந்த ஆறு பிள்ளைகள், இவ்வாறு குழந்தைகள் நல காப்பகத்திற்கு அனுப்பி வைக்கப் பட்டனர். ஆனால், வேற்றின சமூகத்தில் நடந்த சம்பவம் என்பதால், தமிழ் ஊடகங்கள் அதையிட்டு அக்கறை காட்டவில்லை. இந்த வருடம் ஒரு இந்திய குடும்பமும்,  ஒரு இலங்கைத் தமிழ் குடும்பமும், குழந்தை  உரிமைகள் சட்டத்தினால் பாதிக்கப் பட்ட பின்னர் தான், நமது ஊடகங்கள் அதிலே கவனம் எடுத்தன. 

நோர்வேயில், Stavanger நகரில் வாழ்ந்த ஒரு இந்தியக் குடும்பத்தின் கதை, அனைத்து இந்திய ஊடகங்களிலும் பரபரப்பாக பேசப் பட்டது. இரு நாடுகளுக்கு இடையிலான இராஜதந்திர உறவுகளிலும் பாதிப்புகளை ஏற்படுத்தியது. இந்திய ஊடகங்களைப் பொறுத்த வரையில், அது ஒரு "அரசு நடத்திய ஆட் கடத்தல்".  ஊடகங்களுக்கு பேட்டியளித்த பெற்றோர்கள், "கலாச்சார  வித்தியாசங்களைப் புரிந்து கொள்ளாத  நோர்வீஜிய அரசுப் பணியாளர்களின் செயல்." என்று சாடினார்கள். "இது கலாச்சார வித்தியாசம் காரணமாக எழுந்த பிரச்சினையல்ல. குழந்தைகளின் உரிமைகள் சம்பந்தமானது." என்று நோர்வே அரச தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இருப்பினும், குழந்தைகளை பறிகொடுத்த இந்திய பெற்றோர்கள், மத்தியதர வர்க்கத்தை சேர்ந்தவர்கள் என்பதாலும், ஊடக பலம் காரணமாகவும், அரசு நேரடியாக தலையிட்டதாலும், குழந்தைகளை மீளப் பெற்றுக் கொண்டனர். ஆனால், இந்தளவு ஆதரவற்ற பெற்றோரின் குரல்கள் வெளியே கேட்பதில்லை. 

தமது குழந்தைகளை பறிகொடுத்த இலங்கைத் தமிழ்ப் பெற்றோரின் கதை, பிபிசி தமிழோசையில் ஒலிபரப்பானது. Bergen நகரில் வாழும் அந்த தமிழ்த் தாயும், "கலாச்சார வேறுபாடு காரணமாகவே, குழந்தையை தன்னிடம் இருந்து பிரித்ததாக," தெரிவித்தார். கடந்த மூன்று மாதங்களாக குழந்தைகளை இழந்து தவிப்பதாகவும், நித்திரை கொள்ள முடியாமல் தூக்க மாத்திரைகளை பாவிப்பதாகவும்," நோர்வீஜிய பத்திரிகை ஒன்றிற்கு தெரிவித்தார்.  "கையால் உணவூட்டுவது, மடியில் இருத்தி வைப்பது, ஒரே கட்டிலில் படுப்பது" போன்றன குழந்தைகள் உரிமைகளை மீறும் செயல் என்று தமக்கு தெரிவிக்கப் பட்டதாக அந்த தாய் பிபிசி தமிழோசைக்கு தெரிவித்தார். இந்தியப் பெற்றோரும் இதே போன்ற கருத்துகளைத் தான் கூறினார்கள். அப்படியானால், நமது நாடுகளில் சாதாரணமானது என்று நினைத்துக் கொண்டிருக்கும் பழக்க வழக்கங்கள், மேலைத்தேய நாட்டவர் கண்களுக்கு காட்டுமிராண்டித் தனமாக தெரிகின்றதா? இது கலாச்சார வேறுபாட்டால் எழும் பிரச்சினையா? 

 குழந்தைகளை பறிகொடுத்த இந்திய, இலங்கை, சோமாலியப் பெற்றோர் அனைவரும் ஒருமித்த குரலில் ஒரு விடயத்தைக் கூறுகின்றனர். நோர்வேயில் வாழ வந்த தமக்கு, அந்த நாட்டின் சட்டதிட்டங்கள் பற்றி அறிவுறுத்தப்படுவதில்லை என்று குற்றம் சுமத்துகின்றனர். எழுதப்படிக்கத் தெரியாத சோமாலியப் பெற்றோர் முதல், பன்னாட்டுக் கம்பனியில் வேலை செய்த, இந்திய பெற்றோர் வரை அந்த விமர்சனத்தை தான் முன்வைக்கின்றனர்.  ஐரோப்பிய நாடுகளில் குழந்தைகளின் உரிமைகள் பற்றிய சட்டங்கள் கடுமையானவை என்பதை மறுப்பதற்கில்லை. அண்மைக் காலமாக அதிகரித்து வரும் சிறுவர் மீதான பாலியல் துஷ்பிரயோகம் காரணமாக சட்டம் இறுக்கப் படவில்லை. "நடுநிலை பேண விரும்பிய" பிபிசி தமிழோசையும், அவ்வாறு நினைத்துக் கொண்டிருப்பது, பேட்டி எடுத்தவரின் கேள்விகளில் இருந்து புரிந்து கொள்ள முடிந்தது. 

மேலைத்தேய நாடுகளின் அரசாங்கங்கள், குழந்தை வளர்ப்பிலும், பராமரிப்பிலும் தலையிட்டு, தாமே  பெற்றோரின் பொறுப்பையும்  ஏற்றுக் கொள்ளும்   காரணம் என்ன?

“குழந்தைகள் அவர்களுடைய பெற்றோரால் சுரண்டப்படுவதற்கு முற்றுப்புள்ளி வைக்க விரும்புகிறோம் என்றா எங்கள் மீது குற்றம் சாட்டுகிறீர்கள்? நாங்கள் இந்தக் குற்றத்தைப் புரிகிறவர்கள்தான். ஒப்புக்கொள்கிறோம்…. உங்களுடைய கல்வி இருக்கிறதே, அதுமட்டும் என்னவாம்? அதுவும் சமூக முறையிலான கல்விதானே?….. கல்வியில் சமுதாயம் தலையிடுதல் என்பது கம்யூனிஸ்டுகளுடைய கண்டுபிடிப்பு அல்ல; இந்தத் தலையீட்டின் இயல்பினை மாற்றவும், ஆளும் வர்க்கத்தினுடைய செல்வாக்கிலிருந்து கல்வியை விடுவிக்கவுமே கம்யூனிஸ்டுகள் முயலுகிறார்கள்…” - கார்ல் மார்க்ஸ் (கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையில் இருந்து)

இரண்டாம் உலகப்போருக்குப் பின்னர், மேற்கு ஐரோப்பிய நாடுகளில் ஒரு பாரிய கலாச்சாரப் புரட்சி நடந்தது. குடும்ப உறவுகள்  இப்படித் தான் இருக்க வேண்டும், குழந்தைகளை இப்படித் தான் வளர்க்க வேண்டும்  என்று அரசு தீர்மானித்து சட்டம் இயற்றியது. அதன் அர்த்தம், ஒரு குழந்தையை வளர்ப்பது அதன் தாய், தந்தையர் மட்டுமல்ல. குழந்தை வளர்ப்பில் அரசின் பங்களிப்பும் கணிசமான அளவு இருக்க வேண்டும். உண்மையில், பெற்ற தாய், தந்தையை விட, அரசு அதிக பொறுப்பை எடுத்துக்  கொண்டுள்ளதோ என சில நேரம் நினைக்கத் தோன்றும். அந்தளவுக்கு ஒரு குடும்பத்தினுள் அரசின் தலையீடுகள் அதிகம். இதுவே ஒரு சோஷலிச நாட்டில் நடந்திருந்தால், "மனித உரிமை மீறல்கள்" குறித்து  இன்று எல்லோரும் பேசியிருப்பார்கள். "கம்யூனிச அரசுகள் குடும்பங்களை சிதைத்து, பிள்ளைகளை பெற்றோரிடம் இருந்து பிரிக்கின்றனர்." என்று பிரச்சாரம் முடுக்கி விடப் பட்டிருக்கும். பனிப்போர் காலத்தில் அப்படியான கதைகள், ஊடகங்களில் முக்கிய இடம் பிடித்தன. அது வேறு விஷயம். 

இப்போது நோர்வேக்கு வருவோம். இன்றுள்ள குழந்தைகள் நல உரிமைகள், நோர்வீஜிய சமூகத்தில் ஆதி காலத்தில் இருந்தே நிலவி வந்துள்ளதா?  அகழ்வாராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்ட, வைகிங் கால  குடிமனைகளில், ஒரே வீட்டில் பல குடும்பங்கள் வாழ்ந்துள்ளமை தெரிய வந்துள்ளது. கூட்டுக்  குடித்தனம் அந்தக் காலத்தில் சர்வசாதாரணமாக இருந்துள்ளது. இருபதாம் நூற்றாண்டில், பொருளாதார வசதிகள் பெருகிய பின்னர், வீட்டு வசதிகளும் பெருகின. பிள்ளைகளுக்கென தனியான அறைகள் ஒதுக்கப் பட்டன. . அதே போன்று, கரண்டியால் உணவுண்ணும் பழக்கம் கூட 19 ம் நூற்றாண்டில் அறிமுகமான  கலாச்சாரம் தான். தீவிர கிறிஸ்தவ மத நம்பிக்கையாளர்களான நோர்வீஜியர்கள் வீடுகளில், குழந்தைகளை அடித்து வளர்ப்பது  பெற்றோரின் கடமையாக கருதப் படுகின்றது. (பார்க்க: Vår gude gitte rett å slå barn) ஆகவே நோர்வீஜியர்கள் (அல்லது ஐரோப்பியர்கள்) தமது பாரம்பரிய கலாச்சாரத்தை எம் மீது திணிக்கிறார்கள் என்று பொருள்கொள்ள முடியாது. குழந்தை வளர்ப்பு பற்றிய பிரச்சினை, கலாச்சார முரண்பாடுகளால் எழுந்த பிரச்சினை அல்ல. துரதிர்ஷ்டவசமாக, நோர்வேயில் வாழும் இந்திய/இலங்கைப் பெற்றோர் நிலைமையை அவ்வாறு தான் புரிந்து கொள்கின்றனர்.

ஐரோப்பாவில் லிபரல் சமுதாயத்தை படைத்த முதலாளித்துவம், அதற்கான கலாச்சாரத்தையும் புதிதாக அறிமுகப் படுத்தியது. இந்த முதலாளித்துவ-லிபரல் சமுதாயம் குடும்ப உறவுகளில் இருந்தே ஆரம்பிக்கின்றது. ஒரு குழந்தை பிறந்ததில் இருந்து, அதனை வளர்த்து, கல்வி புகட்டுவது எல்லாமே ஒரு முதலாளித்துவ அரசின் கடமைகள். அந்தக் குழந்தைக்கு பிரஜாவுரிமை வழங்கப்பட்ட நாளில் இருந்து, அது தேசத்தின் சொத்தாக கருதப் படுகின்றது. அரை நிலப்பிரபுத்துவ   சமுதாய அமைப்பில் இருந்து புலம்பெயரும் இந்திய/இலங்கைப் பெற்றோர் இந்த முரண்பாட்டை புரிந்து கொள்வதில்லை. "குழந்தைகளை கீழ்ப்படிய வைத்து, அடித்து வளர்க்க வேண்டும்" என்ற நிலப்பிரபுத்துவ போதனையும், "குழந்தைகளை அடிக்காமல், சுதந்திரமாக வளர விட வேண்டும்" என்ற முதலாளித்துவ போதனையும், நோர்வே போன்ற ஐரோப்பிய நாடுகளில் மோதிக் கொள்கின்றன. சுருக்கமாக, இது கலாச்சாரங்களின் மோதல் அல்ல, மாறாக, சித்தாந்தங்களின் மோதல். 

நிலப்பிரபுத்துவ சமுதாயத்தில், குழந்தைகள் தாய், தந்தைக்கு கீழ்ப்படிந்து நடக்க வேண்டும். குடி மக்கள் மன்னனுக்கும், கடவுளுக்கும்  கீழ்ப்படிந்து நடக்க வேண்டும். முதலாளித்துவ-லிபரல் சமுதாயத்தில் தனி நபரின் உரிமைகள் முக்கியமானவை. அது சமுதாயத்தை "சுதந்திரமான தனி நபர்களின் கூட்டமைப்பாக" கருதுகின்றது. சுதந்திரமான தனி நபர்களை, அரசும், முதலாளிகளும் சேர்ந்து உருவாக்கிய பொதுக் கல்வி ஒன்றின் ஊடாக நடைமுறைப் படுத்துகின்றனர். ஐரோப்பிய நாடுகளில், ஒரு பிள்ளை, ஐந்து வயதில் இருந்து பதினாறு வயது வரையில், கட்டாயமாக பாடசாலை செல்ல வேண்டும். 

பெற்றார் தமது பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்ப மறுத்தால், தண்டப்பணம் அறவிடப்படும். நெதர்லாந்தில் வாழும், மொரோக்கோ, துருக்கி போன்ற இஸ்லாமியப் பின்னணியைக் கொண்ட பெற்றோர்கள் சிலர், தமது பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்ப விரும்பாமல், வீட்டில் வைத்திருந்திருக்கிறார்கள். அவர்கள் அரசினால் கடுமையாக எச்சரிக்கப் பட்டனர். பெரும்பாலும் கிராமங்களில் இருந்து வந்த, பழமைவாத கலாச்சாரம் பேணும் பெற்றோர், தமது பிள்ளைகள் பள்ளிக்கூடம் சென்று, "சீரழிந்த ஐரோப்பிய கலாச்சாரத்தை" கற்றுக் கொள்வதை விரும்புவதில்லை. மறு பக்கத்தில் ஐரோப்பிய கல்வி நிலையங்கள், ஒரு பிள்ளை எந்த நாட்டில் இருந்து வந்திருந்தாலும், தமது நாட்டுக் கலாச்சாரத்துடன் வாழ வேண்டும் என்று விரும்புகின்றன. ஐரோப்பியர்கள் தமது நாகரீகம்  உலகில் சிறந்தது என்று நம்புகின்றனர். 

கையால் உணவூட்டல் போன்ற கலாச்சார வேறுபாடுகளே, குழந்தைகளை தம்மிடம் இருந்து பிரிப்பதற்கு காரணம் என்று, இந்திய/இலங்கைப் பெற்றோர் நம்புகின்றனர். நோர்வீஜிய அதிகாரிகள் மீதும் அத்தகைய குற்றச்சாட்டை வைக்கின்றனர். ஆனால், நோர்வீஜிய அரசும், குழந்தைகள் காப்பக ஊழியர்களும் முற்றிலும் மாறுபட்ட குற்றச்சாட்டுகளை பெற்றோர் மீது சுமத்துகின்றனர். நோர்வேயில் குழந்தைகளை அடிப்பதற்கு சட்டத்தால் தடை செய்யப் பட்டுள்ளது. இருப்பினும், வெளிநாட்டுக் குடியேறிகள் சமூகத்தில் குழந்தைகளை அடித்து வளர்ப்பது சர்வசாதாரணம். இலங்கை, இந்தியா, சோமாலியா போன்ற நாடுகளில் உள்ள பெற்றோர் தம் பிள்ளைகளை வளர்ப்பதைப் போன்று, நோர்வேயில் செய்ய முடியாதுள்ளது. 

சிறுவர் பராமரிப்பு இல்லத்திற்கு (Nursury) செல்லும் பிள்ளைகள், வீட்டில் தாயாரிடம் அடிவாங்கியதாக முறைப்பாடு செய்துள்ளன. இந்த முறைப்பாட்டின் அடிப்படையிலேயே, தாம் குழந்தைகளை பெற்றோரிடம் இருந்து பிரித்ததாக, குழந்தைகள் நல காப்பக பணியாளர்கள் தெரிவிக்கின்றனர். குழந்தைகள் நல காப்பகத்தில், பணியாளர்களின் பராமரிப்பில் வளரும் குழந்தைகளை பெற்றோர் பார்க்க முடியாது.  இந்த "பறிமுதல் நடவடிக்கைக்கு" பின்னர், சம்பந்தப்பட்ட பெற்றோர்  மனநல மருத்துவரிடம் ஆலோசனை கேட்க வேண்டுமென  அறிவுறுத்துகின்றனர்.  Gjøvik எனும் இடத்தில், பிள்ளைகளை பறிகொடுத்த சோமாலியத் தாய்மார், வாரந்தோறும் நகரசபை கட்டிட வளாகத்தில் ஆர்ப்பாட்டம் செய்துள்ளனர். "எங்கள் குழந்தைகளை எம்மிடம் திருப்பித் தாருங்கள்" என்ற கோஷத்தை முன்வைத்து போராடினார்கள். அவர்களது போராட்டத்திற்கு, பத்து மாதங்களுக்குப் பின்னர் பலன் கிடைத்தது. இறுதியில் பிள்ளைகள், தாய்மாரிடம் ஒப்படைக்கப் பட்டனர். 

சோமாலியர்கள் போன்று, தமிழர்களும் போராட்டம் நடத்தியதாக நான் கேள்விப்படவில்லை. நோர்வேயில் இயங்கும் பத்துக்கும் குறையாத தமிழர் அமைப்புக்கள் எவையாவது மத்தியஸ்தம் வகிக்க முன் வந்தனவா, என்று தெரியவில்லை. ஆனால், சோமாலியர்களின் அமைப்பொன்று (Internasjonal Somalisk Forum i Norge), பரஸ்பர நம்பிக்கையை ஏற்படுத்தி, சுமுகமான தீர்வைக் காண உதவியது. தாய்மாருக்கும், குழந்தைகள் நல காப்பகத்திற்கும் இடையில் மத்தியஸ்தம் வகித்தது. அவர்கள் இரண்டு பக்க தவறுகளையும் ஏற்றுக் கொள்ள வைத்தனர். சோமாலியப் பெற்றோர் தமது குழந்தைகளை அடித்து வளர்ப்பதை கண்டிக்க வேண்டும். அதே சமயம், நோர்வீஜிய அதிகாரிகள் தகவல்களை வழங்கி, எச்சரிக்கை விடுத்த பின்னர் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும் என்று சுட்டிக் காட்டியுள்ளது.

குழந்தைகள் நல காப்பக பணியாளர்கள், சில நேரம் வேண்டுமென்றே வெளிநாட்டவர் சமூகங்கள் மீது கடுமையாக நடந்து கொள்வதாக குற்றம் சாட்டப் படுகின்றது. நிர்வாகத்தில் உள்ளோரின் ஊழல், ஊடகங்களில் எதிர்மறையான செய்திகளை வழங்கும் உள்நோக்கம், என்று பல்வேறு காரணங்கள் கூறப் படுகின்றன. சோமாலியச் சமூகமும் சில மாற்றங்களுக்குட்பட வேண்டும். குறிப்பாக, பிள்ளைகளை அதிகம் வெளியே செல்ல விடாமல், வீட்டுக்குள்ளே அடைத்து வைக்கப் படுகின்றனர். நண்பர்களை வைத்துக் கொள்ள அனுமதிப்பதில்லை. பிள்ளைகள் மீது பெற்றோர் தமது அபிலாஷைகளை திணிப்பதால் எழும் முரண்பாடுகள். இவை போன்ற செயல்களை மாற்றிக் கொள்ள வேண்டும் என சோமாலிய நலன் பேணும் அமைப்பு கேட்டுக் கொண்டது. பல குடும்பங்களில் பிள்ளைகளுக்கும், பெற்றோருக்கும் இடையில் பெரும் போராட்டம் நடைபெறுவதாக, சோமாலிய-நோர்வீஜிய எழுத்தாளர் Amal Aden சுட்டிக் காட்டினார். இந்தப் பிரச்சினைகள் எல்லாம், சோமாலிய சமூகத்தில் மட்டும் நடைபெறுகின்றதா? இந்தியா, இலங்கையை சேர்ந்த குடும்பங்களிலும் அது தான் நிலைமை. 

குழந்தைகள் நல காப்பகத்தில், வெளிநாட்டு குடிவரவாளர்களின் குழந்தைகளை மட்டுமே தடுத்து வைத்திருப்பது போன்று, ஊடகங்கள் செய்தி வெளியிடுகின்றன. எங்காவது ஒரு வெளிநாட்டவரின் குழந்தையை எடுத்துச் செல்வது மட்டுமே அவர்களுக்கு செய்தி. குழந்தைகள் நல காப்பகத்தில், பெருமளவு நோர்வீஜியக் குழந்தைகள் தங்க வைக்கப் பட்டுள்ளன. இதெல்லாம் அவர்கள் கண்களுக்கு செய்தியாக தெரிவதில்லை. உண்மையில் குழந்தைகள் நல காப்பகங்கள், முதன் முதலாக நோர்வீஜிய குடும்பங்களில் தான் கைவைத்தன. இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர், அடித்தட்டு மக்களின் குழந்தைகள் பல அங்கே தங்க வைத்து, "நாகரீகம்" சொல்லிக்  கொடுத்தனர். தற்பொழுது, போதைவஸ்து பாவிக்கும், அல்லது நோயாளிகளான பெற்றோரின் பிள்ளைகள் குழந்தைகள் நல காப்பகத்தில் தான் வளர்கின்றன. ஆனால், அந்நிய கலாச்சாரப் பின்னணியில் இருந்து வந்து குடியேறிய மக்களையும், அவ்வாறான பிரிவுக்குள் அடக்குவது கொஞ்சம் நெருடலான விடயம். 

இந்தப் பிரச்சினையை தீர்ப்பதற்கு, பேச்சுவார்த்தை அவசியமாகின்றது. வெளிநாட்டுக் குடியேறிகளின் சமூகங்களும், அரசு அதிகாரிகளும் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள முன்வர வேண்டும். புதிதாக பிரஜாவுரிமை பெற்றவர்களை, "அண்மைய வரவாளர்கள்" பெயரிட்டு அழைக்கிறார்கள். அவர்களும் நோர்வீஜியர்களின் கலாச்சாரத்தை பின்பற்ற வேண்டும் என்ற, தேசியவாத சிந்தனை அரச மட்டத்திலும் காணப்படுகின்றது. நோர்வேயில் பன்முகக் கலாச்சாரம் ஒரு மாயை என்பதையே, குழந்தைகள் மீதான அரசின் ஆளுமை எடுத்துக் காட்டுகின்றது. 

No comments: