Friday, February 15, 2013

விஸ்வரூபம்: அபத்தங்களின் விசால ரூபம்



விஸ்வரூபம் ஒரு சாதாரண திரைப்படம் தான். ஆனால், அது சமூகத்தில் ஏற்படுத்திய தாக்கம் அளப்பெரியது. அதனால் தான் பல்வேறு தரப்பிரனராலும் அது விமர்சனத்திற்குள்ளானது. பலத்த எதிர்பார்ப்பை தூண்டிய படம் வெளியான பின்னர், அது சிலரை குஷிப் படுத்தினாலும், பலரை ஏமாற்றமடைய வைத்துள்ளது. உண்மையில், அனைத்து ஊடகங்களினதும், சமூக ஆர்வலர்களினதும் கவனத்தை பெற்ற விஸ்வரூபம் பற்றிய சர்ச்சைகள் மட்டுமே, அதனுடைய வர்த்தக நோக்கிலான வெற்றி எனலாம். அந்த சர்ச்சைகள் மட்டும் எழுந்திரா விட்டால், படம் ஒரு வாரத்திலேயே திரையரங்குகளை விட்டு தெருவில் ஓடியிருக்கும். 

விஸ்வரூபம் திரைப்படத்தை, ஆங்கில மொழியில் எடுத்து, அமெரிக்காவில் மட்டும் வெளியிட்டிருந்தால், "தமது தாய் நாட்டை பாதுகாப்பதற்கு மிகவும் விசுவாசமான இந்திய அடிமைகள்" கிடைத்ததை நினைத்து அமெரிக்கர்கள் ஆனந்தக் கண்ணீர் விட்டிருப்பார்கள். படக் கதை அமெரிக்காவிலேயே நடக்கின்றது. இடையிடையே Flashback ஆக,  ஆப்கானிஸ்தானில் நடந்த சம்பவங்களை காட்டுகின்றார்கள். "ஒசாமா இறந்த பின்னரும், தாலிபான் அல்கைதாவின் வேலையை பொறுப்பெடுத்து செயற்படுகின்றது. அமெரிக்காவை அழிக்கத் துடிக்கும் தாலிபான் பயங்கரவாத அபாயத்தில் இருந்து, அமெரிக்காவை இந்திய ஹீரோ மீட்கிறார்." என்ற பாதையில் கதையை நகர்த்திச் செல்கின்றனர். அமெரிக்க அரசியல்வாதிகள், ஊடகங்களை விட்டு விடுவோம். இதுவரை எத்தனையோ கற்பனைக் கதைகளை படமாக்கிய, எந்தவொரு அமெரிக்க படத் தயாரிப்பாளரும், இப்படியான கோணத்தில் சிந்திக்கவில்லை. ஏனெனில், அமெரிக்காவில் சாதாரண பாமர மக்கள்  கூட, இது மாதிரியான தகிடுதத்த கதையை நம்புவார்களா என்று சந்தேகப் பட்டிருப்பார்கள். 

கமல்ஹாசன், தனது தகவல்களுக்கு CNN, FOX, TIMES போன்ற அமெரிக்க ஊடகங்களையே தங்கியிருக்கிறார் என்பது புரிகின்றது. ஒரு சாதாரண மேட்டுக்குடி இந்தியன், அவை கூறும் தகவல்களை உண்மையென்று நம்பும் அப்பாவித்தனத்தை கூட மன்னித்து விடலாம். தன்னை நாலும் அறிந்த அறிவாளி என்று காட்டிக் கொள்ளும் கமல்ஹாசன், இந்த விடயத்தில் சறுக்கியுள்ளது மனதுக்கு நெருடலாகவுள்ளது. கமல்ஹாசன் மீது எனக்கிருந்த மதிப்பு, மரியாதையை எல்லாம், விஸ்வரூபம் என்ற இரண்டு மணிநேர திரைப்படம் தகர்த்தெறிந்து விட்டது. தமிழ் மக்களுக்கு அதிகம் பரிச்சயமில்லாத, "ஆப்கானிஸ்தான், தாலிபான்" பற்றி ஒரு படம் எடுப்பது நல்ல விடயம் தான். ஆனால், அதற்கு முன்னர் அந்த நாட்டைப் பற்றி, தாலிபானின் போராட்டம் பற்றி, சிறிதளவேனும் கள ஆய்வு செய்திருக்க கூடாதா? இவ்வளவு பணத்தை செலவளிக்கும் பொழுது, ஆப்கானிஸ்தான் சென்று அங்குள்ள நிலவரத்தை ஆராய்வது, படத்திற்கு ஒரு பெறுமதியைக் கொடுக்கும். தாலிபான் பற்றி ஆழமாக அறிந்து கொள்ள வேண்டுமானால், Ahmed Rashid எழுதிய Taliban: Militant Islam, Oil and Fundamentalism in Central Asia   என்ற நூலை பரிந்துரைக்கிறேன். 

நாயகன் படத்தில், மும்பை தாராவி பகுதி மாதிரி செட் போட்டு அசத்தியது போல, விஸ்வரூபத்தில் கமல் சாதனை படைத்துள்ளதாக பலர் பேசிக் கொள்கின்றனர். ஆனால், நாயகனுக்கு மும்பை போல, விஸ்வரூபம் ஆப்கானிஸ்தானை தத்ரூபமாக  காட்டியிருக்கிறதா என்பது சந்தேகமே. விஸ்வரூபம் திரைப்படக் குழுவினருக்கு, ஆப்கானிஸ்தான் பற்றியோ, அல்லது தாலிபான் பற்றியோ அதிகம் தெரியவில்லை என்பது  புலனாகின்றது. ஆப்கானிஸ்தானில் இந்தியர்கள் யாரும் வாழ்வதில்லை என்றோ, அந்த நாட்டைப் பற்றி இந்தியர்களுக்கு அதிகம் தெரியாதென்றோ, கமல்ஹாசனும் அவரது இரசிகர்களும் நினைத்துக் கொண்டால், அந்த அறியாமையை எண்ணி சிரிப்பதா, அழுவதா என்று தெரியவில்லை. ஆப்கானிஸ்தானில் தாலிபான் வருவதற்கு முன்னர், நிறைய இந்தியர்கள் வாழ்ந்து வந்தனர். சுமார் 10000 இந்து, சீக்கிய மதங்களை சேர்ந்த வட இந்தியர்கள், காபுல் நகரத்தில் நீண்ட காலம் வாழ்ந்தனர். ஆப்கானிஸ்தான் முன்னர் சோவியத் படைகளின் கட்டுப்பாட்டின் கீழ், சோஷலிச நாடாக இருந்த காலத்தில், அவர்களுக்கு பெரும் வரவேற்பு இருந்தது. (பனிப்போர் காலத்தில், இந்தியாவும், சோவியத் யூனியனும் நண்பர்களாக இருந்தமை இங்கே குறிப்பிடத் தக்கது.)

ஆப்கானியர்களும் ஓரளவு இந்தியக் கலாச்சாரத்தை பின்பற்றுவதால், இந்திய சினிமாக்களும், இசையும், அலங்காரப் பொருட்களும் ஆப்கானிஸ்தானில் அமோகமாக விற்பனையாகின. அதனால் நிறைய இந்தியர்கள் இருதரப்பு வர்த்தகத்தில் ஈடுபட்டிருந்தனர். சோவியத் படைகள் விலக்கிக் கொள்ளப் பட்டு, அவர்களுக்கு எதிராக போராடிய இஸ்லாமியவாத முஜாகிதீன் ஆட்சி ஏற்பட்ட  காலத்தில், சில நெருக்கடிகள் ஏற்பட்ட போதிலும், இந்தியர்களின்  இருப்பிற்கு எந்த வித ஆபத்தும் ஏற்படவில்லை. ஆனால், பாகிஸ்தான் உதவியுடன் தாலிபான் இராணுவம், பெரும்பகுதி ஆப்கானிஸ்தானை தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்த பின்னர், அங்கிருந்த இந்தியர்கள் வெளியேற வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. இந்தியர்களின் வர்த்தக ஸ்தாபனங்கள், உடைமைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

ஜெர்மனியில் நாஜிகளின் ஆட்சி ஏற்பட்ட ஆரம்ப காலத்தில்,  யூதர்கள் தம்மை அடையாள படுத்துவதற்காக,மஞ்சள் நிற  யூத நட்சத்திரம் பொறிக்கப்பட்ட உடை அணிந்திருக்க வேண்டுமென உத்தரவிடப் பட்டது. தாலிபான்களின் ஆப்கானிஸ்தானில், இந்துக்கள் காவி நிற உடை அணிந்து வெளியே செல்ல வேண்டும் என்று உத்தரவிடப் பட்டது. அன்று இதனை சர்வதேச சமூகமும், மனித உரிமை நிறுவனங்களும் கண்டித்திருந்தன. ஜெர்மனியாக இருந்தாலும், ஆப்கானிஸ்தானாக இருந்தாலும், பாஸிச சக்திகள் ஒரே மாதிரித் தான் நடந்து கொள்கின்றன.

தாலிபான் ஒடுக்குமுறை காரணமாக, இந்தியர்கள் நாட்டை விட்டு அகதிகளாக வெளியேறினார்கள். பெரும்பான்மையானோர் இந்தியாவில் அடைக்கலம் கோரினாலும், சிறிதளவு வசதியான இந்தியர்கள், ஐரோப்பிய, அமெரிக்க நாடுகளுக்கு அகதிகளாக சென்றனர். நான் சில ஆப்கான்-இந்திய அகதிகளை சந்தித்துக் கதைத்திருக்கிறேன். அவர்கள் எல்லோரும் சீக்கிய மதத்தை சேர்ந்தவர்கள். காபுல் நகரில் வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்தவர்கள். தாலிபான் வருவதற்கு முன்னரே வெளியேறி இருந்தாலும், ஆப்கானிஸ்தான் நிலவரம் குறித்து அவர்கள் மூலமும் அறிந்து கொள்ள முடிந்தது. விஸ்வரூபம் என்ற இந்திய சினிமாவில், ஆப்கான் இந்தியர்கள் குறித்து ஒரு காட்சியெனும் இல்லாமலிருப்பது ஆச்சரியத்திற்குரியது. இது தெரியாமல் ஏற்பட்ட தவறா, அல்லது வேண்டுமென்றே தவிர்க்கப் பட்டதா? 

விஸ்வரூபம் படத்தில், RAW உளவாளியான கமல்ஹாசன், காஷ்மீரி என்ற பெயரில் தாலிபான் இயக்கத்தினுள்  ஊடுருவுகின்றார். அவர்களுக்கு இராணுவ பயிற்சி அளிக்கின்றார். முல்லா ஒமார், ஒசாமா பின்லாடன் போன்ற உயர்மட்ட தலைவர்களுடன் பழகும் வாய்ப்பை பெறுகின்றார். ஆப்கானிஸ்தான் இந்தியாவுக்கு எந்த சம்பந்தமும் இல்லாத நாடல்ல. இலங்கைப் பிரச்சினையில் இந்தியாவுக்கென்றொரு வெளியுறவுக் கொள்கை இருப்பதைப் போல, ஆப்கானிஸ்தானிலும் இந்தியாவின் தலையீடு உள்ளது. அமெரிக்கா "அல்கைதாவுக்கு எதிரான போர்" ஒன்றை அறிவித்த பின்னர், இந்திய அரசு காஷ்மீர் ஜிகாதி இயக்கங்களையும், அல்கைதாவுடன் தொடர்பு படுத்தி  பிரச்சாரம் செய்து வந்தது. ஆனால், அமெரிக்கா உட்பட, உலகில் யாருமே அந்தப் பிரச்சாரத்தை பொருட்படுத்தவில்லை. ஏனெனில், பாகிஸ்தானை தளமாக கொண்டுள்ள, காஷ்மீர் ஜிகாதி இயக்கங்கள் எல்லாம், ISI அல்லது CIA கட்டுப்பாட்டின் கீழ் உள்ளவை. 

தாலிபான் இயக்கமானது, முழுக்க முழுக்க அமெரிக்க-பாகிஸ்தான் கூட்டுத் தயாரிப்பாகும். ISI தன்னிடம் இருந்த அமெரிக்க ஆயுதங்களை கொடுத்து, தாலிபானை ஆப்கானிஸ்தானுக்குள் அனுப்பி வைத்தது. ஆரம்ப காலங்களில், ஆப்கானிஸ்தானில் தாலிபான் கட்டுப்பாட்டின் கீழ் வந்த பிரதேசங்களில் பாகிஸ்தான் ரூபாய் புழக்கத்தில் விடப்பட்டது. ஆகவே, இப்படியான நெருங்கிய கட்டமைப்பிற்குள், ஒரு இந்திய RAW உளவாளி ஊடுருவி, தலைமைக்கு நெருக்கமாக வருவது நம்பக் கூடியதாக இல்லை. தாலிபான் மட்டுமல்ல, அல்கைதா கூட காஷ்மீர் போராளிக் குழுக்களுடன் தொடர்பு வைக்கவில்லை. அதற்கு காரணம், பாகிஸ்தான் அவர்களை எந்த தொடர்புமற்று பிரித்து வைத்திருக்கவே விரும்பியது. தனிப்பட்ட முறையில் ஓரிருவர் தொடர்பு வைத்திருந்தாலும், அவர்கள் ISI அதிகாரிகளால் துன்புறுத்தப் பட்டனர்.

ஈழ விடுதலை இயக்கங்களுக்கு, தமிழகத்தில் வைத்து, இந்திய இராணுவ அதிகாரிகள் பயிற்சி கொடுத்தமை, அனைவரும் அறிந்ததே. அதே போன்று, பாகிஸ்தான் மண்ணில் வைத்து, தாலிபான் உறுப்பினர்களுக்கு பாகிஸ்தான் இராணுவ அதிகாரிகள் பயிற்சி அளித்தனர். அதைவிட, அல்கைதா அமைப்பில் இருந்த அரேபியர்களும், தாலிபானுக்கு கெரில்லா போர்ப் பயிற்சி வழங்கினார்கள். ஆகவே, விஸ்வரூபம் சினிமாவில் காட்டப் படுவதைப் போல, ஒரு RAW அதிகாரி தாலிபானுக்கு இராணுவப் பயிற்சி அழிப்பது நடைமுறைச் சாத்தியமற்றது. ஆனால், தாலிபானுக்கு எதிராக போரிட்ட, இன்னொரு ஆப்கான் போராளிக் குழுவுக்கு பயிற்சி வழங்கி இருக்க கூடிய சாத்தியக்கூறுகள் உண்டு. அது பற்றி அடுத்து பார்ப்போம்.

விஸ்வரூபம் திரைப்படத்தில், "இது தான் ஆப்கானிஸ்தான்", "இது தான் தாலிபான்" என்று குறிப்பிட்டு சொல்லிக் காட்டியிரா விட்டால், படக்கதை செவ்வாய்க் கிரகத்தில் நடக்கும், வேற்றுக் கிரகவாசிகளின் கதை என்று தான் நினைக்கத் தோன்றியிருக்கும். ஒருவேளை, இந்தப் படத்தை நிஜத் தாலிபான்கள் பார்க்க நேர்ந்தால், எல்லோரும் கூண்டோடு தற்கொலை செய்திருப்பார்கள். அந்தளவுக்கு, சினிமாவுக்கும், நிஜத்திற்கும் இடையிலான வித்தியாசம் மிகப்பெரியது. தாலிபான் போராளிகளும், தலைவர் ஒமாரும் உடுத்தி இருக்கும் உடையும், தலையில் அணிந்திருக்கும் குல்லாயும், அவர்களுக்கு எந்த விதத்திலும் சம்பந்தமற்றவை. (ஒருவேளை பாகிஸ்தானி தாலிபானை மனதில் கொண்டு, அப்படி ஒரு 'மேக் அப்' போட்டிருக்கலாம்.)


இதிலே மிகப் பெரிய கொடுமை என்னவென்றால், "சினிமா தாலிபான்களின்" உடையலங்காரம், நிஜத் தாலிபான்களை  எதிர்த்து போராடிய குழுக்களை நினைவுபடுத்துகின்றன! தாலிபான் தலைவர் ஒமார் அணிந்திருக்கும் குல்லாய், அவரின் பரம எதிரியும் வடக்கு கூட்டணிப் படையின் தலைவருமான மசூத் அணிந்திருந்த குல்லாய் ஆகும். முல்லா ஒமாரும், தாலிபான் போராளிகளும் எப்போதும் தலையில் தலைப்பாகை மட்டுமே கட்டி இருப்பார்கள். ஒரு சினிமாவில், விடுதலைப் புலிகளை, ஸ்ரீலங்கா இராணுவ சீருடையில் காட்டினால், உங்களுக்கு எவ்வளவு அபத்தமாக தோன்றுமோ, அதேயளவு அபத்தமானது விஸ்வரூபம் காட்டும் தாலிபான் பற்றிய சித்திரமும். 

கருப்பு நிற சீருடையில், அல்கைதா உறுப்பினர்கள் இராணுவப் பயிற்சி பெறுவதைக் காட்டும் வீடியோ ஒன்றை, அல்கைதா மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்வதற்காக விநியோகித்து வந்தனர். அந்த வீடியோ, CNN போன்ற உலகத் தொலைக்காட்சிகளில் திரும்பத் திரும்ப காண்பிக்கப் பட்டது. கமல்ஹாசனின் மனதில் அந்த வீடியோ காட்சிகள் ஆழமாக பதிந்துள்ளன. அவற்றை விஸ்வரூபம் திரைப்படத்தில் நிகழ்த்திக் காட்டுகின்றார். சினிமாவில் RAW அதிகாரியாக வரும் கமல், தாலிபானுக்கு பயிற்சி அளிக்கிறாரா? அல்லது அல்கைதாவுக்கு பயிற்சி அளிக்கிறாரா? கமல், தாலிபானையும், அல்கைதாவையும் மாற்றி மாற்றிப் போட்டு, தானும் குழம்பி, இரசிகர்களையும் குழப்புகிறார். விஸ்வரூபம் திரைப்படத்தின் உச்சகட்ட அபத்தம் அது தான். 

(தொடரும்)

விஸ்வரூபம் பற்றிய முன்னைய பதிவுகள்:
கமல்ஹாசனின், "அமெரிக்க விசுவாச ரூபம்"

*************************



சினிமா தொடர்பான முன்னைய பதிவுகள்:

போதி தர்மரை அவமதிக்கும் ஏழாம் அறிவு!
தமிழ்ப் போதிதர்மர் பற்றி, சீனர்கள் தயாரித்த திரைப்படம்
ஸ்பெயின் பாட்டாளி வர்க்க புரட்சி பற்றிய சினிமா
ஈராக் சினிமாவில் அமெரிக்கா வில்லன்! - திரையிடத் தடை

No comments: