Friday, May 31, 2013

கிறிஸ்தவ ஆர்மேனியாவை ஆக்கிரமித்த மேற்கைரோப்பிய படைகள்

[சிலுவைப் போர் எனும் ஐரோப்பிய ஏகாதிபத்திய அரசியல்]
(பாகம் : 5)


கிறிஸ்தவ ஆர்மேனியா ஆக்கிரமிக்கப்படுகின்றது

துருக்கியில் எதிர்ப்பின்றி முன்னேறிய சிலுவைப் படைகள் ஆர்மேனிய நாட்டின் தலைநகரம் எடேசாவை வந்தடைந்தனர். இன்றிருக்கும் ஆர்மேனியா நாட்டை போல மும்மடங்கு பிரதேசம் அன்றைய ஆர்மேனிய மன்னராட்சியின் கீழ் இருந்தது. ராஜ்ஜியத்தின் பெரும்பகுதி பிற்காலத்தில் துருக்கியின் பகுதிகளாகி விட்டன.

ஆர்மேனியர்கள் (90%) கிறிஸ்தவர்கள். இருப்பினும் தமக்கென விசேஷ வழிபாட்டு முறையை கடைப்பிடித்தனர். சின்னச்சிறு ஆர்மேனிய நாட்டிற்கு, இரண்டு பக்கமும் எதிரிகள் இருந்தனர். இஸ்லாமிய துருக்கியர்களும், கிறிஸ்தவ கிரேக்கர்களும் ஆர்மேனியாவை விழுங்கி விடத் துடித்தார்கள். அவர்கள் மேற்கத்திய சிலுவைப் படைகளையும் நம்பவில்லை. இருப்பினும் ஆர்மேனிய மன்னன், துருக்கியருக்கு எதிராக சிலுவைப் படைகளின் பாதுகாப்பை நாடினான். அது எவ்வளவு பெரிய தவறு என்பது சில நாட்களின் பின்னர் புரிந்தது.

பவ்டவைன் (Boudewijn : பெல்ஜியத்தை சேர்ந்தவர்) என்ற தளபதியால் தலைமை தாங்கப்பட்ட சிலுவைப் படையணியே, ஆர்மேனியாவின் எடேசா நகருக்கு சென்றது. எடேசாவை எதிரிகளிடம் இருந்து பாதுகாக்க வேண்டுமானால், தனக்கு அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்று கேட்டார் பவ்டவைன். அதாவது ஆர்மேனிய மன்னனின் அடியாளால் போன்று இருக்க முடியாது. ஆனால், அரச குடும்பத்தில் ஒருவனாக கருதப் பட வேண்டும்.  மூப்படைந்த கிழவனான ஆர்மேனிய அரசன், கிறிஸ்தவ சகோதரத்துவ உணர்வு காரணமாக, பவ்டவைனை பிள்ளையாக தத்தெடுப்பதாக அறிவித்தார். 

ஆர்மேனிய வழக்கப் படி பொது மக்களின் முன்னிலையில் நடந்த, ஒரு வாலிபனை தத்தெடுக்கும் சடங்கு, அந்தக் கால கிசு கிசு செய்தியாக, மத்திய கிழக்கு முழுவதும் வலம் வந்தது. அப்படி என்ன விசேஷம் அந்த சடங்கில் உள்ளது? அரசனும், அரசியும் இரண்டு பெரியதொரு வெள்ளை அங்கியை அணிந்து கொண்டு மேடையில் வீற்றிருப்பார்கள். தத்தெடுக்கப்படும் பிள்ளை நிர்வாணமாக அங்கிக்கு உள்ளே தவழ்ந்து சென்று மார்போடு மார்பு உரச வேண்டும். அன்று, பவ்டவைன் என்ற திடகாத்திரமான வாலிபனை, குழந்தை போல பலர் முன்னிலையில் தத்தெடுத்த கதை, ஒற்றர்கள் மூலம் துருக்கிய படைகள் மத்தியில் பரவியது. அவர்கள் அதனை தமக்குள் சொல்லிச் சொல்லி சிரித்தார்கள்.

இந்த வேடிக்கையான தத்தெடுப்பு நாடகம் பல காலம் நீடிக்கவில்லை. தத்தெடுக்கும் வைபவம் முடிந்த சில நாட்களில், பவ்டவைனின் அடியாட்கள், ஆர்மேனிய அரசனையும், அரசியையும் வீதியில் விரட்டி விரட்டி அடித்துக் கொன்றார்கள். அந்த கொடுஞ் செயலை, "வளர்ப்பு மகன்" தடுக்கவில்லை. அடுத்த சில நாட்களில் ஆர்மேனியாவின் ஆட்சி பவ்டவைன் கைகளுக்கு மாறியது. அவர் தனது நம்பிக்கைக்கு உரிய சிலுவைப் படைவீரர்களை முக்கிய பொறுப்புகளில் நியமித்தார். 

முதன் முறையாக ஒரு மத்திய கிழக்கு பிரதேசம், மேலைத்தேய ஐரோப்பியரின் ஆளுமையின் கீழ் வந்தது. வருங்காலத்தில் வரப்போகும், காலனியாதிக்க காலகட்டத்திற்கு கட்டியம் கூறுவது போல, அந்த சம்பவம் அமைந்திருந்தது.


கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த அந்தியோக்கியா முற்றுகை

அந்தியோகியா (இன்று: Antakya, துருக்கி) என்ற சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த நகரம் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் அமைந்துள்ளது. மத்தியதரைக் கடலோரம், இன்றைய சிரியா எல்லையில் அமைந்துள்ள அந்த நகரம் பற்றிய குறிப்புகள் விவிலிய நூலிலும் வருகின்றன. இன்றைக்கும் நிலைத்து நிற்கும் உலகிலேயே பழமையான கிறிஸ்தவ தேவாலயம் (புனித பீட்டரின் குகை) அந்நகருக்கு சிறப்பு சேர்க்கின்றது. 

ஆதி கால கிறிஸ்தவ சமூகம் அங்கே தோன்றியிருந்தது. முன்னொருகாலத்தில் சீனாவுக்கு சென்று வரும் வியாபாரிகளின் இடைத்தங்கல் முகாமாக இருந்ததது. அதன் வர்த்தக முக்கியத்துவம் காரணமாக ரோமர்களின் காலத்திலேயே மிகப் பெரிய நகரமாக திகழ்ந்தது. 20 ம் நூற்றாண்டில் நவீன சிரியாவின் பகுதியாக இருந்தது. பின்னர், பிரெஞ்சு காலனியாதிக்கவாதிகள் அதனை துருக்கிக்கு விற்று விட்டனர். துருக்கியின் ஹத்தை மாகாணமாக அறியப்படும் பகுதியில், இன்றைக்கும் அரேபியர்களே (முஸ்லிம்களும், கிறிஸ்தவர்களும்) பெரும்பான்மை இனம்.

சிலுவைப்போர் காலத்தில், அந்தியோக்கியா "யாகி சியான்" என்ற துருக்கி இனத்தை சேர்ந்த முஸ்லிம் மன்னனின் ஆட்சியின் கீழ் இருந்தது. சிலுவைப் படைகள் வருகின்றன என்று அறிந்தவுடனேயே, யாகி சியான் நாட்டை பாதுகாக்கும் கடமையில் ஈடுபட்டான். பாதுகாப்பு ஏற்பாடுகளில் ஒரு குறைபாடு இருந்தது. நகரை சுற்றி கட்டப்பட்டிருந்த மிக நீண்ட மதில் சுவர் தான் அந்த குறைபாடு. 

அந்தக் காலங்களில், சிங்கப்பூர் மாதிரி குட்டி நாடுகள் அதிகம். தலைநகரத்தையும், சில கிராமங்களையும், சுற்றியுள்ள வயல் பரப்புகளையும் மட்டுமே தேச எல்லைகளாக கொண்ட நாடுகள். மதில்களால் சூழப்பட்ட அந்தியோக்கியாவில் நகரபகுதி மட்டுமல்லாது, விவசாய நிலங்களும் இருந்தன. இதனால் அன்றிருந்த 40000 மக்களுக்கு உணவிடுவதில் எந்தப் பிரச்சினையும் இருக்கவில்லை. ஆனால் ஒரேயொரு பிரச்சினை, சீனப் பெருஞ்சுவர் போல முடிவில்லாது நீண்டு சென்று கொண்டிருந்த மதில்களை பாதுகாப்பது எப்படி?

அந்தியோக்கியா 13 வருடங்களுக்கு முன்னர், அதாவது 1084 வரை, கொன்ஸ்டான்டிநோபில் தலைமையின் கீழ் கிரேக்க சாம்ராஜ்யத்தின் பகுதியாக இருந்தது. ஒரு இஸ்லாமிய அரசனான யாகி சியான் ஆட்சியின் கீழே, கிறிஸ்தவர்களின் மதச் சுதந்திரம் பாதுகாக்கப்பட்டது. ஆர்மேனிய, ஜாகொபிய, மறோனிய, கிரேக்க பிரிவுகளை சேர்ந்த கிறிஸ்தவர்கள் அந்தியோக்கியாவில் எந்தப் பிரச்சினையும் இன்றி வாழ்ந்து வந்தார்கள். இருப்பினும் கிரேக்க சக்கரவர்த்தி, இம்முறை சிலுவைப்படை என்ற கூலிப்படையை  அனுப்பி அந்தியோக்கியாவை இணைக்கப் பார்க்கிறார், என்ற அச்சம் நிலவியது. அப்படியான நோக்கில் படையெடுப்பு இடம்பெற்றால், அந்தியோக்கியா கிறிஸ்தவர்கள் கட்சி மாறி விடுவார்களோ என்று மன்னன் அஞ்சினான். 

இதனால் யாகி சியான், அனைத்து கிறிஸ்தவ ஆண் பிரஜைகளையும் நாட்டை விட்டு வெளியேற்றினான். அவர்கள் நகரின் பாதுகாப்பு மதில்களுக்கு வெளியே வசிக்கும் படி உத்தரவிட்டான். அவ்வாறு நகரின் வெளியே பாதுகாப்பு கடமையில் ஈடுபட்ட கிறிஸ்தவர்களின் மனைவி, பிள்ளைகளை, யாகி சியான் தனது பொறுப்பில் வைத்துக் கொண்டான். பணயக்கைதிகளாக வைக்கப்பட்டிருக்கும் குடும்பத்தினர் நலன் கருதி, கிறிஸ்தவர்கள் அந்தியோக்கியா அரசுக்கு விசுவாசமாக நடக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அந்தியோக்கியாவை சுற்றி வளைத்து முற்றுகையிட்ட சிலுவைப்படைகளின் உள்ளே ஒற்றர்களாக செயற்பட்டார்கள்.

சுமார் மூன்று மாதங்கள் நீடித்த முற்றுகை இறுதியில் ஒரு முடிவுக்கு வந்தது. அந்தியோக்கியா மன்னன் எதிர்பார்த்தது போலவே, கோட்டை வாயில் கதவு ஒரு துரோகியினால் திறக்கப்பட்டது. அதன் மூலம் சிலுவைப் படைகள் அந்தியோக்கியாவினுள் நுழைந்தன. எதிரிக்கு காட்டிக் கொடுப்பவர்கள் எல்லா மதத்திலும், இனத்திலும் இருப்பார்கள். அன்று சிலுவைப்படைகள் நுழையும் வழியை திறந்து விட்டது, பீருஸ் என்ற அர்மேனிய முஸ்லிம். அவன் ஒரு முறை மந்திர, தந்திரங்களில் ஈடுபட்ட காரணத்தால் தண்டிக்கப் பட்டவன். அதற்காக கிடைத்த சந்தர்ப்பத்தை கொண்டு பழி வாங்கினான். 

பீருஸ் என்ற அர்மேனிய முஸ்லிம், இரவு நேரத்தில் இரகசியமாக,நுளை  வாயில் கதவுகளை திறந்து விட்டான். அந்தச் செயல், சிலுவைப் படைக்கு வைக்கப்பட்ட பொறி இல்லை என்று நிரூபிப்பதற்காக,  ஏற்கனவே தனது மகனை எதிரிப் படையினர் பக்கம் அனுப்பி வைத்திருந்தான். அப்படி ஒரு காட்டிக் கொடுப்பு இடம்பெற்றிரா விட்டால், சிரியாவில் இருந்து வந்த மேலதிக படைகள் அந்தியோக்கியாவை காப்பாற்றி இருக்கும். அதை விட நீண்ட கால முற்றுகையை தாக்குப் பிடிக்கக் கூடியவாறு, போதுமான உணவுப் பொருட்கள் சேமித்து வைக்கப் பட்டிருந்தன.

(தொடரும்)


இந்த தொடரின் முன்னைய பகுதிகள்:
1. சிலுவைப்போர் எனும் ஐரோப்பிய ஏகாதிபத்திய அரசியல்
2.போப்பாண்டவர் பிரகடனம் செய்த "கத்தோலிக்க புனிதப் போர்"
3.கிறிஸ்தவ நாகரிக உலகை நாசமாக்கிய சிலுவைப் படைகள்
4.இஸ்லாமிய சுல்தானை பாதுகாத்த கிறிஸ்தவ சக்கரவர்த்தி

******************************

 சிலுவைப்போர், கிறிஸ்தவ மத வரலாறு தொடர்பான வேறு பதிவுகள்:
1.சிலுவைப் போர்களும், சில்லறைப் பொய்களும்
2.கிறிஸ்தவம்: அடிமைகளின் விடுதலை முதல் அதிகார வேட்கை வரை‏
3.பைபிளை மொழிபெயர்த்தவன் ஒரு கிறிஸ்தவ மதத்துரோகி!
4.கிறிஸ்தவ நாட்டில் இருந்து ஒரு திறந்த மடல்...

No comments: