Thursday, August 15, 2013

ஆப்பிரிக்க சந்தைகளில் விற்கப் பட்ட ஐரோப்பிய அடிமைகள்

ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து, ஐரோப்பிய அடிமை வியாபாரிகளால் கறுப்பின அடிமைகள் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட வரலாறு எல்லோருக்கும் தெரியும். ஆனால், ஒரு காலத்தில் ஐரோப்பிய வெள்ளையர்கள், ஆப்பிரிக்க நகரங்களில் அடிமைகளாக விற்பனை செய்யப் பட்டனர் என்பது யாருக்காவது தெரியுமா?

இன்று வரையில் எந்தவொரு வரலாற்று ஆசிரியரும் எழுதியிராத, அல்லது எழுதத் துணியாத தகவல்கள் இவை. உலகில் நீண்ட காலமாக கட்டிக் காக்கப் படும், "மிகப் பெரிய இரகசியம்" இதுவாகத் தான் இருக்கும். ஒரு காலத்தில், ஆப்பிரிக்காவில் அடிமைகளாக இருந்த வெள்ளையர்கள், பிற்காலத்தில் விடுதலையாகி தமது தாய்நாட்டுக்கு திரும்பி வந்து வாழ்ந்த போதிலும், தமது கடந்த காலம் பற்றி யாரிடமும் எதுவும் கூறவில்லை. யாரும் தனது நினைவுக் குறிப்புகளை எழுதி வைக்கவில்லை.

மூன்று காரணங்களுக்காக, இந்த வரலாற்றுத் தகவல்கள் மறைக்கப் படலாம். 

  1.  ஐரோப்பியர்கள் உலகை ஆளப் பிறந்தவர்கள். உலகில் வேறெந்த இனத்திடமும் அடிமையாக இருந்திராதவர்கள் என்ற இனவாத மேலாண்மை குறித்த அரசியல். அது எப்போதும் ஆண்ட பரம்பரைக் கதைகளை மட்டுமே விரும்புகின்றது. அடிமையாக இருந்த கதைகளை மறைக்கின்றது.
  2.  ஒரு காலத்தில் வெள்ளையின-ஐரோப்பிய அடிமைகளை வைத்திருந்த வட ஆப்பிரிக்க பிரதேசம், பிற்காலத்தில் ஐரோப்பிய காலனியாகியது. அதனால், வெற்றி பெற்றவர்கள் வரலாற்றை திருத்தி எழுதினார்கள். தமது அவமானகரமான கடந்த காலத்தை மறைத்து விட்டார்கள்.
  3.  அது ஒரு முற்றிலும் மாறுபட்ட காலகட்டம். கிறிஸ்தவம், இஸ்லாம் என்ற இரண்டு மதங்களுக்கு இடையிலான, மதப் போர் நடந்து கொண்டிருந்த காலம். 19 ம் நூற்றாண்டில், ஐரோப்பிய காலனியாதிக்கம் உலகம் முழுவதும் ஆதிக்கம் செலுத்திய காலத்தில், மதப் போர்களின் காலம் முடிந்து விட்டிருந்தது.

மூன்றாவதாக குறிப்பிட்ட காரணத்தில் இருந்து தான், இந்த மறைக்கப்பட்ட வரலாற்றுத் தகவலை தேடத்  தொடங்க வேண்டும். சிலுவைப்போர் என்றதும், எல்லோரும் ஜெருசலேமை கைப்பற்றச் சென்ற படைகளை பற்றி மட்டுமே நினைக்கின்றனர். சிலுவைப்போர் ஒரே திசையில் மட்டுமே நடக்கவில்லை. ஸ்பெயின், போர்த்துக்கல் நாடுகளிலும் இன்னொரு சிலுவைப்போர் நடந்தது. அன்று அந்த நாடுகள், "முஸ்லிம் நாடுகளாக" அரேபிய சக்கரவர்த்தியினால் ஆளப்பட்டன. மொரோக்கோ நாட்டில் இருந்து படையெடுத்த மூர்கள் 500 வருடங்களுக்கு மேலாக அந்தப் பிரதேசத்தை ஆண்டு வந்தனர். உள்நாட்டு ஸ்பானிஷ், போர்த்துக்கேய மக்கள் பலர், முஸ்லிம்களாக மாறி இருந்தனர்.

மூர்களுடனான போரில் வென்று, ஸ்பெயின், போர்த்துக்கல்லினை தமது முழுமையான கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்த கிறிஸ்தவ அரசர்கள், அந்தப் பிரதேசத்தை நூறு சதவீத கிறிஸ்தவ நாடாக மாற்ற விரும்பினர். அதற்கு முன்னரே, மூர்-அரேபிய ஆளும் வர்க்கத்தினரும், அவர்களின் நாட்டவரும்,பூர்வீகத் தாயகமான  மொரோக்கோவுக்கு பின்வாங்கிச் சென்று விட்டனர். ஸ்பானிஷ் முஸ்லிம்களும், யூதர்களும் மட்டுமே எஞ்சி இருந்தனர். (அவர்களது பூர்வீகம் ஸ்பெயின் ஆகும்.) ஆனால், கிறிஸ்தவ மன்னனும், கத்தோலிக்க திருச் சபையும் அவர்களின் மதச் சுதந்திரத்தை பறித்தனர். கிறிஸ்தவ மதத்திற்கு மாறுமாறு கட்டாயப் படுத்தினார்கள். பல்லாயிரக் கணக்கான யூதர்களும், முஸ்லிம்களும் அவர்களது மத நம்பிக்கையை மாற்றிக் கொள்ளாத குற்றத்திற்காக, சிறையில் அடைத்து சித்திரவதை செய்யப் பட்டனர். மரண தண்டனை விதித்து கொலை செய்யப் பட்டனர். 

கத்தோலிக்க சமயத்தை தழுவிக் கொண்ட, முன்னாள் யூதர்களும், முஸ்லிம்களும், அரசு அதிகாரிகளினால் சந்தேகக் கண் கொண்டு பார்க்கப் பட்டனர். அவர்களும் துன்புறுத்தப் பட்டனர். உண்மையில், அன்றைய ஸ்பெயினில் ஒரு இனச் சுத்திகரிப்பு நடந்து கொண்டிருந்தது. கிறிஸ்தவ அரசின் கடுமையான ஒடுக்குமுறை காரணமாக, இனிமேல் அங்கே வாழ முடியாது என்று தீர்மானித்த ஆயிரக் கணக்கான ஸ்பானிஷ்-முஸ்லிம் குடும்பங்கள், அகதிகளாக மொரோக்கோவுக்கு தப்பி ஓடின. அவர்கள் வட மொரோக்கோ, மற்றும் அல்ஜியர்ஸ், துனிஸ், திரிப்பொலி போன்ற நகரங்களிலும் சென்று குடியேறினார்கள். ஸ்பெயினில் இருந்து விரட்டப்பட்ட முஸ்லிம் அகதிகள், தமது தாயகத்தை ஆளும் கிறிஸ்தவ அரசுக்கு எதிராக, பழிவாங்கும் போர் ஒன்றை தொடங்கினார்கள். அது ஒரு சாதாரண போராக இருக்கவில்லை. 

ஸ்பானிஷ்-முஸ்லிம் அகதிகளுடன், சில மூர் கடற் கொள்ளையரும் சேர்ந்து, கிறிஸ்தவ ஐரோப்பாவுக்கு எதிரான "ஜிகாத்" ஒன்றை நடத்தினார்கள். வெளியுலகிற்கு மட்டுமே, அது "கிறிஸ்தவர்களுக்கு எதிரான முஸ்லிம்களின் மதப் போர்". உண்மையில், அது ஸ்பானிஷ் முஸ்லிம் அகதிகளின் பழிவாங்கும் நடவடிக்கையாகவே தொடங்கியது. ஆனால், பின்னர் அது மதப் போராக மாறியது. இதனை முன் நின்று நடத்தியவர்களும், ஆதாயம் பெற்றவர்களும் கடற்கொள்ளையர் ஆவர். அன்றைய மொரோக்கோ மன்னராட்சி, மறைமுகமான ஆதரவு வழங்கினாலும், நேரடியாக படைகளை அனுப்பவில்லை. 

முஸ்லிம் கடற்கொள்ளையர்கள், மத்தியதரைக் கடலில் கிறிஸ்தவ கப்பல்களை வழிமறித்து கொள்ளையடித்தார்கள். கப்பலில் வந்த ஐரோப்பியர்களை பிடித்துச் சென்று அடிமைகளாக விற்றார்கள். துனிஸ், அல்ஜியர்ஸ், மற்றும் சில நகரங்களில், ஐரோப்பிய அடிமைகள் நல்ல விலைக்கு விற்கப் பட்டனர். அடிமை வணிகம் சூடு பிடிக்கவே, கடற்கொள்ளையர்கள் நாட்டுக்குள் புகுந்தும் அடிமைகளை பிடித்தார்கள். ஸ்பெயின், இத்தாலி, கிரீஸ் போன்ற நாடுகளின் கரையோரப் பகுதிகளில் வாழ்ந்த மக்கள், என்றைக்கு அடிமைகளாவோமோ என்ற பயத்துடன் வாழ வேண்டியிருந்தது. அந்தளவுக்கு அந்தப் பகுதிகள், அடிக்கடி கடற்கொள்ளையரின் தாக்குதலுக்கு உள்ளாகின.  


வட ஆப்பிரிக்க சந்தைகளில் விற்கப்பட்ட, குறிப்பிட்டளவு அடிமைகளை, தனியார் வாங்கிச் சென்றனர். எஞ்சியவர்களை அரசு வாங்கிக் கொண்டது. அந்தக் காலத்தில் இருந்த பாரிய கப்பல்களில் துடுப்பு வலிக்கும் வேலையில் இந்த அடிமைகள் ஈடுபடுத்தப் பட்டனர். மேலும், பெரிய கட்டுமானப் பணி, துறைமுகங்கள் கட்டுவது போன்ற கடுமையான வேலைகளும் கொடுக்கப் பட்டன. தனியாரினால் வாங்கிச் செல்லப்பட்ட அடிமைகள், வீட்டுப் பணியாளர்களாகவும், வயலில் வேலை செய்யவும் ஈடுபடுத்தப் பட்டனர். ஒப்பீட்டளவில், இந்த வேலைகள் கட்டுமானப் பணி, கப்பல் வேலை போன்று கஷ்டமாக இருக்கவில்லை.

கிறிஸ்தவ அடிமைகள் மதம் மாறுவதற்கு சந்தர்ப்பம் வழங்கப் பட்டது. ஏராளமான ஐரோப்பிய அடிமைகள் முஸ்லிம்களாக மதம் மாறினார்கள். இஸ்லாமிய மதத்தை ஏற்றுக் கொண்ட பின்னரும் அவர்கள் அடிமைகாகவே இருந்தனர். ஆனால், கடினமான வேலைகளை செய்யப் பணிக்கப் படவில்லை என்பது மட்டுமே வித்தியாசம். ஆயினும், பெரும்பாலான அடிமைகள் இஸ்லாமிய மதத்திற்கு மாற மறுத்தனர். அவர்கள் மத்தியில் மதச் சேவை செய்த கிறிஸ்தவ பாதிரியார்களும் அதற்கு ஒரு காரணம். செத்தாலும் பரவாயில்லை, முஸ்லிமாக மதம் மாறக் கூடாது என்று தடுத்து விட்டனர். அதனால், பல்லாயிரம் அடிமைகள் கடினமான வேலை காரணமாக உடல் சோர்வுற்று, மூப்படையும் முன்னமே மாண்டு போயினர். 

வட ஆப்பிரிக்காவில் எத்தனை இலட்சம் கிறிஸ்தவ அடிமைகள் இருந்தனர் என்பதற்கான சரியான புள்ளிவிபரம் கிடைக்கவில்லை. யாரும் அவற்றை பதிவு செய்து வைக்கவில்லை என்று தெரிகின்றது. அண்ணளவாக பத்து இலட்சத்திற்கும் மேற்பட்ட ஐரோப்பிய அடிமைகள், வட ஆப்பிரிக்காவில் இருந்துள்ளனர். அமெரிக்காவில் உள்ள கறுப்பின அடிமைகளின் தலைமுறையினர் போன்று, வட ஆப்பிரிக்காவில் ஐரோப்பிய தலைமுறையினர் யாரும் இல்லை. வெள்ளையின அடிமைகளின் எண்ணிக்கை குறைந்து சென்று, காலப்போக்கில் இல்லாமல் போனதற்கு பல காரணங்கள் இருக்கலாம்.    

அடிமைகளில் 90% மானோர் ஆண்கள். அவர்கள் குடும்பம் அமைப்பதும், இனப்பெருக்கம் செய்வதும் தடுக்கப் பட்டிருந்தது. பலர் கடுமையான வேலை காரணமாக சோர்வடைந்து மரணமடைந்து விட்டனர். அதை விட, பெருந்தொகையான புதிய அடிமைகள், கொண்டு செல்லப் பட்ட பின்னர் பேரம் பேசி, பணம் கிடைத்தவுடன் விடுவிக்கப் பட்டனர். பணம் வைத்திருந்த உறவினர்கள், கேட்ட தொகையை கொடுத்து விடுதலை வாங்கி அழைத்துச் சென்றனர். அதே நேரம், வட்டிக்கு கடன் கொடுக்கும் ஐரோப்பியர்களுக்கு விற்கப் பட்டு, அவர்களால் ஐரோப்பிய நாடுகளில் ஒப்பந்த அடிமைகளாக வேலை வாங்கப் பட்ட சம்பவங்களும் நடந்துள்ளன.

வரலாறு முழுவதும், எல்லா சம்பவங்களையும் முன் அனுமானங்களுடன் ஒரே மாதிரி கணித்து விட முடியாது. எல்லாவற்றையும் கருப்பு, வெள்ளையாக பார்க்க முடியாது. ஐரோப்பிய அடிமைகள் எல்லோரும் ஒரே மாதிரி நடத்தப் படவில்லை. முஸ்லிமாக மதம் மாறியவர்கள், அரபு சமூகத்துடன் இரண்டறக் கலந்து விட்டனர். அது மட்டுமல்ல, பிற்காலத்தில் அவர்களில் சிலர், கடற்கொள்ளையர்களாக மாறி இருந்தனர். அதற்கு நிறைய உதாரணங்களைக் காட்டலாம். இத்தாலியை சேர்ந்த முன்னாள் அடிமை ஒருவரின் கதை மிகவும் சுவாரஸ்யமானது. 

இத்தாலியில் நிலவுடமையாளர்களுக்கு கீழே வேலை செய்யும் பண்ணையடிமைகள், அங்கே ஏற்கனவே அடிமை வேலை செய்து கொண்டிருந்தனர். அவர்கள் தமது (கிறிஸ்தவ) நிலவுடமையாளரை வெகுவாக வெறுத்தார்கள். அப்படியான ஒருவர், முஸ்லிம் கடற்கொள்ளையரினால் அடிமையாக அல்ஜீரியாவுக்கு பிடித்துச் செல்லப் பட்டார். அந்த இத்தாலியர் அல்ஜீரியா சென்ற பின்னர் , இஸ்லாமிய மதத்தை தழுவிக் கொண்டார். அது மட்டுமல்லாது, கடற்கொள்ளையரின் கப்பலிலேயே ஒரு  வேலை தேடிக் கொண்டார். 

குறுகிய காலத்திற்குள் மிகவும் விசுவாசமான கடற்கொள்ளைக்காரராக மாறி, ஒரு கப்பலின் தலைமைப் பதவிக்கு உயர்த்தப் பட்டார். அவர் கடற்கொள்ளையரின் கப்பலில், இத்தாலியில் தனது பிறந்த இடத்திற்கே திரும்பிச் சென்றார். அங்கிருந்த தனது குடும்பத்தினரை கப்பலில் ஏற்றுக் கொண்டு அல்ஜீரியாவுக்கு தப்பி ஓடி விட்டார். குடும்ப உறுப்பினர்களும், தாமாகவே விரும்பித் தான் கப்பலில் ஏறினார்கள். ஏனெனில், நிலப்பிரபுவினால் சுரண்டப்பட்ட அவர்களுக்கு, இது விடுதலையாகப் பட்டது. அல்ஜீரியா சென்றதும், எல்லோரும் முஸ்லிமாக மாறி அந்த நாட்டிலேயே தங்கி விட்டனர். 

மேற்குறிப்பிட்ட இத்தாலியரின் கதையில் இருந்து, வட ஆப்பிரிக்காவில் குடியேறிய ஐரோப்பியர்கள் எல்லோரும் அடிமைகள் அல்ல, என்பதை புரிந்து கொள்ளலாம். ஐரோப்பாவில், இராணுவத்தை விட்டு தப்பியோடிய போர்வீரர்கள், நிலமற்ற விவசாயிகள், நிலப்பிரபுக்களால் சுரண்டப்பட்ட பண்ணையடிமைகள் ஆகியோர் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, இஸ்லாமிய வட ஆப்பிரிக்காவில் புதிய வாழ்க்கையை ஆரம்பித்தனர். கிறிஸ்தவ அடிமைகளை விட, அத்தகைய "கிறிஸ்தவ குடியேறிகளுக்கு" அதிக வரவேற்புக் கிடைத்திருக்கும் என்பதை இங்கே குறிப்பிடத் தேவையில்லை.

அடிமைகளாகவும் இல்லாமல், முஸ்லிமாகவும் மாறாமல், வியாபாரக் கூட்டணி காரணமாக வட ஆப்பிரிக்காவில் குடியேறிய ஒரு சிறு பிரிவினரும் உள்ளனர். அந்தக் காலத்தில், நெதர்லாந்தும், பெல்ஜியமும், ஸ்பெயின் மன்னராட்சிக்கு உட்பட்ட பகுதிகளாக இருந்தன. ஸ்பெயினிடம் இருந்து விடுதலை அடைவதற்காக போராடியவர்கள், முஸ்லிம் கடற்கொள்ளைக்காரர்களுடன் கூட்டுச் சேர்ந்து கொண்டனர். டச்சுக் கடற்கொள்ளையரும், முஸ்லிம் கடற்கொள்ளையரும் இணைந்து, ஸ்பானிஷ் கப்பல்களை கொள்ளையடித்தார்கள். டச்சுக் கடற்கொள்ளையரும் மொரோக்கோவை தளமாக கொண்டு தான் செயற்பட்டனர்.

முஸ்லிம் கடற்கொள்ளையர்கள் ஸ்பெயினுடன் மட்டும் நிறுத்திக் கொள்ளவில்லை. இங்கிலாந்து, ஐஸ்லாந்து வரை சென்று, அங்கேயும் நூற்றுக் கணக்கானோரை அடிமைகளாக பிடித்துச் சென்றுள்ளனர். இங்கே குறிப்பிடப் பட்டுள்ள சம்பவங்கள் யாவும், 16 ம் நூற்றாண்டுக்கும், 18 ம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலப் பகுதியில் நடந்தவை. 19 ம் நூற்றாண்டில், இவை எல்லாம் ஒரு முடிவுக்கு வந்தன. ஐரோப்பாவில் புதிய வல்லரசுகளாக உருவான பிரிட்டனும், பிரான்சும் வலிமையான கடற்படைகளை அனுப்பி, கடற்கொள்ளையை ஒரு முடிவுக்கு கொண்டு வந்தன.

ஐரோப்பாக் கண்டத்தில் ஒரு சாம்ராஜ்யத்தை உருவாக்கிய நெப்போலியன் அனுப்பிய பிரெஞ்சுப் படைகள், அல்ஜீரியா, துனீசியாவை ஆக்கிரமித்தன. அன்றிலிருந்து அந்த நாடுகள் பிரெஞ்சுக் காலனிகளாகின. ஸ்பெயின் வட மொரோக்கோவின் சில பகுதிகளை கைப்பற்றியது. வட ஆப்பிரிக்காவில் அடிமைகளாக இருந்த இலட்சக் கணக்கான ஐரோப்பியர்களும், ஸ்பெயினுக்கு எதிரான ஜிகாத் ஒன்றை நடத்திய ஸ்பானிஷ்-முஸ்லிம்களும், வரலாற்றில் இருந்து எந்த சுவடும் இன்றி மறைந்து போனார்கள். யாருக்குத் தெரியும்? இன்று அந்த நாடுகளில் வாழும் பல அரேபியர்களின் உடலில் ஐரோப்பிய இரத்தம் ஓடலாம். 

*************

உசாத்துணை :

1.Rijstpap, tulpen & jihad (Lucas Catherine)
2.Morisco's (Lucas Catherine)
3. Christian Slaves, Muslim Masters: White Slavery in the Mediterranean, the Barbary Coast and Italy, 1500-1800 (Robert C. Davis)

1 comment:

MOHAMED AMEER said...

இதே போன்ற அறிந்திடாத செய்திகளை வழங்கியமைக்கு நன்றி