Monday, February 10, 2014

தேசியவாத போதை தெளிந்தது! பொஸ்னியா எரிகின்றது!

பொஸ்னியாவில் வர்க்கப் போராட்டம்! பொஸ்னியா எரிகின்றது!!

இந்த செய்திகளை, உங்களுக்கு தெரிந்த எந்தவொரு ஊடகமும் வெளியிட்டிருக்காது. பதினைந்து வருடங்களுக்கு முன்னர், பொஸ்னியாவில் வாழும் மூவின மக்கள், தேசியவெறி கொண்டு, ஒருவரையொருவர் கொன்று குவித்துக் கொண்டிருந்தனர். சர்வதேச ஊடகங்கள் எல்லாம், பொஸ்னியாவில் முகாமிட்டு, அங்கு நடந்த போரை, இனப் படுகொலைகளை, உலகம் முழுவதும் அறிவித்துக் கொண்டிருந்தன. "பொஸ்னிய போருக்கு காரணம் என்ன? தேசியவாதமா? இனவாதமா? மதவாதமா?" - மேலைத்தேய அறிவுஜீவிகள், இப்படி எல்லாம் மயிர் பிளக்கும் விவாதம் செய்து கொண்டிருந்தார்கள். 

கடந்த மூன்று நாட்களாக, பொஸ்னியாவில் மக்கள் எழுச்சி ஒன்று நடந்து கொண்டிருக்கிறது. பொஸ்னியாவில் உள்ள சிறிய, பெரிய நகரங்களில் எல்லாம் கலவரம் பரவியது. அங்குள்ள அரசாங்கக் கட்டிடங்கள் எரிக்கப் பட்டன. ஆனால், சர்வதேச ஊடகங்கள் எங்கே? போர் நடந்த காலத்தில், குண்டுவெடித்து ஒருவர் பலியானலே, அழுது வடித்த ஊடகவியலாளர்கள், எங்கே தொலைந்து போனார்கள்? இரவு பகலாக மண்டையை பிசைந்து, பொஸ்னிய இனப் பிரச்சினைக்கு தீர்வு கண்ட, மேற்கத்திய நாடுகளின் தலைவர்களிடம் இப்போது கேட்டால், "பொஸ்னியாவா? அது எங்கே இருக்கிறது?" என்று கேட்பார்கள். 

இங்கே எழும் கேள்விகளுக்கெல்லாம் விடை ஒன்று தான். வர்க்கப் போராட்டம் என்றைக்குமே ஒளிபரப்பப்படுவதில்லை. இனக் குரோதங்களால் நடக்கும் போர்கள் மட்டுமே, உலகின் கவனத்தைக் கவருகின்றன. ஏனென்றால், "ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம்." மக்களை இனவாரியாக பிரித்து வைத்தால், அவர்களை ஆள்வது இலகு. இது காலனிய காலத்தில் இருந்து தொடரும் அரசியல் நிர்வாகத்தின் அடிப்படை.

"தேசியவாதத்தை தடுத்து நிறுத்து! பொஸ்னிய மக்களைப் பிரிக்காதே!" - எரிந்து கொண்டிருக்கும் அரசாங்க கட்டிடம் ஒன்றின் சுவரில் எழுதப் பட்ட வாசகம். 

தேசியவாதம், இனவாதம், மதவாதம் என்பன, உலகிலேயே மிகவும் மோசமான போதைவஸ்துகள். மக்கள் தமது பிரச்சனைகளை மறந்து மயக்கத்தில் ஆழ்த்துவதற்காக, ஆளும் வர்க்கத்தால் இலவசமாக விநியோகிக்கப் பட்டு வருகின்றன. ஆனால், எத்தனை வருடங்களுக்குத் தான், மக்களை தொடர்ந்தும் போதையில் ஆழ்த்தி வைத்திருக்க முடியும்? முந்திய காலங்களில், இந்தியாவில் சில இடங்களில், உணவின்றி பட்டினி கிடக்கும் ஏழைகள், கொஞ்சம் அபின் உட்கொண்டு விட்டு, சில மணிநேரத்திற்கு பசி தெரியாமல் சந்தோஷமாக  இருப்பார்கள். தேசியவாதமும் அவ்வாறானது தான். 

ஏழைகள் மனதில், "தேசிய இன உணர்வு" எனும் போதையை ஏற்றி விட்டால், அவர்கள் சில காலத்திற்கு, பசியும், பிணியும், தெரியாமல் வாழ்வார்கள். உலகம் முழுவதும், மேட்டுக்குடியினரும், மத்தியதர வர்க்க அறிவுஜீவிகளும், "தீவிரமான தேசியவாதிகளாக" இருப்பது, ஒரு தற்செயல் நிகழ்வல்ல. அப்போது தான், அவர்களால் ஒரு போலியான வர்க்க ஒற்றுமையை கட்டிக் காப்பாற்ற முடியும்.


" ஏழைகள், செல்வந்தர்களை கொன்று விடாமல் தடுப்பதற்கு, மதம் உதவுகின்றது."   என்று சொன்னான் நெப்போலியன். 19 நூற்றாண்டில் மதம் பிரதானமாக இருந்தது. இன்று மதத்தின் இடத்தை, தேசியவாதம் பிடித்துள்ளது. முரண்நகையாக, நெப்போலியனின் போர்கள் தான், தேசியவாதம் என்ற சித்தாந்தத்தை உலகிற்கு அறிமுகப் படுத்தியது. 

பதினைந்து வருடங்களுக்கு முன்னர், பொஸ்னியாவின் உள்நாட்டுப் போர், மேற்கத்திய நாடுகளின் தலையீட்டினால் முடிவுக்கு வந்தது. அப்போது, மேற்கத்திய நாடுகள், தமது தலைசிறந்த இராஜதந்திரிகளை அனுப்பி, "இனப்பிரச்சினைக்கு அனைவரும் ஏற்கக் கூடிய தீர்வொன்றைக்" கண்டன. பொஸ்னியாவில் உள்ள மூன்று தேசிய இனங்களுக்கும், தனித் தனியான சுயாட்சிப் பிரதேசங்கள், தனித் தனியான அரசாங்கங்கள் அமைத்துக் கொடுத்தன. அதாவது, ஒவ்வொரு இனத்திற்கும் தனியாக ஒரு நாடு பிரித்துக் கொடுத்து விட்டால், பிரச்சினை தீர்ந்து விடும். அது அவ்வளவு சுலபமில்லை. 

இனப் பிரச்சினைக்கு தீர்வாக, தனி நாடு பிரித்துக் கொடுத்த அறிவாளிகள், மெத்தப் படித்தவர்கள் தான். அதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால், ஒரு சின்ன விஷயத்தில் கோட்டை விட்டு விட்டார்கள். "ஒவ்வொரு தேசிய இனத்திற்கும், ஒரு தேசிய அரசு அமைத்துக் கொடுத்து விட்டால் போதுமா? அங்கு வாழும் மக்களுக்கு யார் வேலை கொடுப்பார்கள்? யார் உணவு கொடுப்பார்கள்? அவர்களின் வறுமையை போக்குவதற்கு என்ன வழி?" அதைப் பற்றியெல்லாம், அன்று யாருமே கவலைப் படவில்லை. உள்ளூர் அரசியல்வாதிகள், அன்று விட்ட தவறின்  விளைவை இன்று அனுபவிக்கிறார்கள். 

தேசிய இனப் பிரச்சினைக்கு தீர்வு கண்ட பதினைந்து வருடங்களில், பொஸ்னிய பொருளாதாரம் ஆஹா, ஓஹோ என்று வளர்ந்து சாதனை படைக்கவில்லை. மாறாக மூவினங்களையும் சேர்ந்த மேட்டுக்குடியினர் மட்டுமே நன்மை அடைந்தார்கள். ஒரு காலத்தில், சாதாரண மக்களுக்கு தேசிய வெறியூட்டி போருக்கு தள்ளியவர்கள், இன்று தமக்கும், தமது குடும்பத்திற்கும் மட்டும் செல்வம் சேர்ப்பதில் குறியாக இருக்கின்றனர். அவர்களால் யுத்த களத்தில் பலி கொடுக்கப் பட்ட மக்கள், இன்று தொழில் இன்றி, வருமானம் இன்றி, வீடின்றி பல்வேறு இன்னல்களை அனுபவிக்கிறார்கள். 

பொஸ்னியாவில் வேலையில்லாதோர் எண்ணிக்கை 40% க்கும் அதிகம். இது அரசாங்க கணக்கு. பட்டப் படிப்பு படித்து விட்டு வேலையில்லாமல் இருக்கும் இளைஞர்கள், ரொக்கமாக பணம் கொடுத்து வேலை வாங்க வேண்டிய அவல நிலை. ஊழலுக்கு இதை விட சிறந்த உதாரணம் இருக்க முடியாது. வறுமையை பற்றி இங்கே சொல்லத் தேவையில்லை. எழுபது சதவீதமானோர் வறுமைக் கோட்டை தாண்டுவார்களா என்பதே கேள்விக்குறி. 
சரயேவோ நகரில், ஆர்ப்பாட்டம் செய்யும் மக்கள் ஒரு அரசாங்க கட்டிடத்தை எரிக்கின்றனர்.

இந்த நிலைமையில், மக்கள் மனதில் தணலாய்க் கிடந்த தார்மீக சீற்றம், ஒரு நாள் எரிமலையாக வெடித்தது. துஸ்லா நகரில், மூன்று அரச தொழிற்சாலைகளை தனியாருக்கு விற்றதன் காரணமாக, அங்கே கலவரம் வெடித்தது. ஊழல் மலிந்த அரசாங்கம், அந்த தொழிற்சாலைகளை, தனியாருக்கு சிறு தொகைப் பணத்திற்கு விற்றிருந்தது. புதிதாக பொறுப்பேற்ற தனியார் கம்பனி ஒன்றின் நிர்வாகம், தொழிலாளர்களுக்கு சம்பளப் பாக்கி கொடுக்காமல் வைத்திருந்தது மட்டுமல்லாமல், அவர்களை ஒட்டுமொத்தமாக பணி நீக்கம் செய்திருந்தது. 

வேலையிழந்த  தொழிலாளர்களுடன், வேலையில்லாதவர்களும், மாணவர்களும் கைகோர்த்துக் கொண்டனர். வீதியில் அமைதியாக நடந்த ஆர்ப்பாட்டத்தின் மீது, பொலிசார் வன்முறை பிரயோகித்தமையினால், மக்களின் பொறுமை எல்லை கடந்தது. மக்கள் எல்லோரும் ஒன்று திரண்டு சென்று, துஸ்லா நகராட்சி சபையின் கட்டிடத்திற்கு தீ வைத்தார்கள். அதைத் தொடர்ந்து பிற அரசாங்கக் கட்டிடங்களும் தாக்கி எரிக்கப் பட்டன. (அதைக் காட்டும் வீடியோ பதிவு கீழே உள்ளது:)



துஸ்லா நகரில் நடந்த கலவரத்தின் எதிரொலி, பிற பொஸ்னிய நகரங்களிலும் கேட்டது. ஒரே நாளில், ஒரு டசினுக்கும் குறையாத நகரங்களில் மக்கள் எழுச்சி உருவானது. தேசியவாத மேட்டுக்குடியினரால், "இணையப் போராளிகள்" என்று பரிகசிக்கப் படும், சோஷலிச இளைஞர்கள், பேஸ்புக், டிவிட்டர் போன்ற சமூக வலைத்தளங்கள் மூலம் மக்களை அணிதிரட்டினார்கள். அரச எதிர்ப்புக் கலவரம், பொஸ்னியா முழுவதும் காட்டுத் தீ போலப் பரவியது. 

பொஸ்னிய மக்கள் எழுச்சியில், சில குறிப்பிடத் தக்க முற்போக்கான அம்சங்கள் உள்ளன. அது ஒரு வர்க்கப் போராட்டம். இன்று அங்கு போராடும் மக்களின் மனதில், வர்க்க உணர்வு மேலோங்கிக் காணப்படுகின்றது. இதே மக்கள் தான், பதினைந்து வருடங்களுக்கு முன்னர், தேசியவெறியுடன் ஒருவரை கொன்று, இரத்தம் குடித்துக் கொண்டிருந்தார்கள். ஒரு காலத்தில், ஜென்மப் பகைவர்களாக போரிட்ட இனங்கள், இன்று சகோதரத்துவ உணர்வுடன் ஆட்சியாளர்களை எதிர்த்து நிற்கின்றனர். 

"மக்கள் அரசாங்கத்திற்கு அஞ்சக் கூடாது. அரசாங்கம் தான் மக்களுக்கு அஞ்ச வேண்டும்." அது தான் உண்மையான ஜனநாயகம். ஆட்சியாளர்கள் தங்களது பணப் பைகளை நிரப்பிக் கொள்வதற்காக, தங்கள் மனதில் தேசியவாத வெறியை ஊட்டி வந்தார்கள் என்ற உண்மையை, இன்று பொஸ்னிய மக்கள் நன்றாக உணர்ந்து கொண்டார்கள். எரிக்கப் பட்ட அரசாங்க கட்டிடங்களின், சுவர்களில் எழுதப் பட்டுள்ள கோஷங்களில் இருந்தே, அதனைப் புரிந்து கொள்ளலாம். 
"தேசியவாதம் ஒழிக!" பொஸ்னியாவில் எரிக்கப் பட்ட அரசாங்க கட்டிடம் ஒன்றின் சுவரில் எழுதப் பட்ட வாசகம். 


அரசாங்கக் கடிதங்களை தீயிட்டுக் கொளுத்திய மக்கள், அங்கே தமது மனதில் உள்ளதை சுவரில் கிறுக்கி விட்டு சென்றுள்ளனர்.
"  தேசியவாதம் ஒழிக!"
"  பொஸ்னிய மக்களை பிரிக்காதே! தேசியவாதத்தை தடுத்து நிறுத்து!"
இது போன்ற தேசியவாத எதிர்ப்பு வாசகங்கள், சாதாரண மக்களின் அரசியல் விழிப்புணர்வை எடுத்துக் காட்டுகின்றன. 

பொஸ்னியாவில் உள்நாட்டுப் போர் நடந்த காலங்களில், "பொஸ்னியாவில் நடந்த அரசியல் படுகொலை ஒன்று, முதலாம் உலகப் போருக்கு மூல காரணியாக இருந்தது."  என்று மேற்கத்திய ஊடகங்கள் எமக்கு வரலாற்றுப் பாடம் நடத்தின. சில நேரம், இன்று பொஸ்னியாவில் ஏற்பட்டுள்ள வர்க்கப் போராட்டம், பிற ஐரோப்பிய நாடுகளிலும் வர்க்கப் போரை உண்டாக்கி விடும் என்று அஞ்சுகிறார்கள் போலத் தெரிகின்றது. அதனால் தான், இன்று எல்லா சர்வதேச ஊடகங்களும், பொஸ்னியாவில் நடக்கும் மக்கள் எழுச்சியை, ஒட்டுமொத்தமாக புறக்கணித்து வருகின்றன. 

(பொஸ்னிய மக்கள் எழுச்சியினை காட்டும் படங்களையும், வீடியோக்களையும் இங்கே இணைத்துள்ளேன்.)





பொஸ்னியா தொடர்பான முன்னைய பதிவுகள்:

1 comment:

காரிகன் said...

மேற்குல அதி மேதாவிகளும் மெத்தப் படித்தவர்களும், அறிவு ஜீவிகளும் செய்ய முடியாததை உங்களின் இந்தப் பதிவு கண்டிப்பாகச் செய்யும்.மறுக்கப்படும் உண்மைகளை வெளியுலகத்துக்கு கொண்டுவருவதில் உங்களை மிஞ்ச இன்னொருவர் இனிமேல்தான் வரவேண்டும். வாழ்த்துக்கள். Hats off to you brave heart.