Thursday, April 10, 2014

உக்ரைன் இனப் பிரச்சினைக்கு சமஷ்டித் தீர்வை எதிர்க்கும் மேற்குலகம்


மேற்குலக நாடுகள், "உலகம் முழுவதும் ஜனநாயகம், சுயநிர்ணயம் போன்ற உயரிய இலட்சியங்களுக்காக பாடுபடுவதாக," இன்னமும் வெகுளித் தனமாக நம்பிக் கொண்டிருக்கும், அப்பாவிகள் யாராவது இருந்தால் கையை உயர்த்துங்கள். உக்ரைன் பிரச்சினையில், மேற்குலக நாடுகள், ஜனநாயகம் என்ற சொல்லையே வெறுக்கும் வகையில் நடந்து கொள்கின்றன. ஏற்கனவே, கொங்கோ, சிலி, ஈரான், போன்ற பல நாடுகளில், அமெரிக்கா ஜனநாயக அரசுகளை கவிழ்ப்பதற்கு சதி செய்துள்ள பல சம்பவங்கள், வரலாற்றில் பதியப் பட்டுள்ளன.  

உக்ரைன் நாட்டில், பெரும்பான்மை மக்களால், ஒரு ஜனநாயகத் தேர்தலில் தெரிவு செய்யப் பட்ட ஜனாதிபதியை, ஒரு சதிப்புரட்சி மூலம் பதவியை விட்டு அகற்றிய வன்முறைக் கும்பலுக்கு மேற்குலகம் உதவியது. கிரீமிய மக்கள், ஒரு பொது வாக்கெடுப்பு மூலம், தமது சுயநிர்ணய உரிமையை தீர்மானித்த பொழுது, அமெரிக்கா அந்த முடிவை எதிர்த்தது. தற்போது, உக்ரைனில் ஒற்றையாட்சி முறையை ஒழித்து, அந்த இடத்தில் சமஷ்டி தீர்வின் மூலம் அதிகாரப் பரவலாக்கல் கொண்டு வரும் திட்டத்தையும், அமெரிக்கா எதிர்த்து வருகின்றது. அமெரிக்காவோடு சேர்ந்து கொண்டு, மற்றைய "ஜனநாயகத் தூய்மைவாதிகளான" மேற்கு ஐரோப்பிய நாடுகளும் எதிர்க்கின்றன. 

பல மேற்கத்திய ஆதரவாளர்கள், உக்ரைனிய தேசியவாதிகளின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்கின்றனர். அதே நேரம், ரஷ்ய சிறுபான்மையினத்தின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்க மறுக்கின்றனர். உக்ரைனில் ரஷ்யர்கள் பிற்காலத்தில் குடியேற்றப் பட்டதாக, உக்ரைனிய பேரினவாதிகளின் பிரச்சாரங்களை கேட்டு விட்டு, வரலாற்றை திரிப்பவர்கள் பலர் உள்ளனர். உண்மையில், இன்று ரஷ்ய மொழி பேசும் மக்கள், பெரும்பான்மையாக வாழும் தென்- கிழக்கு உக்ரைனிய பகுதிகள், பல நூறாண்டுகளாக ரஷ்ய சாம்ராஜ்யத்தின் பகுதிகளாக இருந்து வந்துள்ளன. 

17 - 19 நூற்றாண்டுகளில் கூட, உக்ரைன் என்றொரு நாடு இருக்கவில்லை.
அது போலந்து, ரஷ்யா, துருக்கி ஆகிய மூன்று
பேரரசுகளின் அங்கமாக இருந்தது.
இன்று, உக்ரைனிய மொழி பேசும் மக்கள் பெரும்பான்மையாக வாழும், மத்திய, மேற்கு உக்ரைனிய பகுதிகள், போலந்து-லிதுவேனியா சாம்ராஜ்யத்தின் பகுதிகளாக இருந்து வந்துள்ளன. 1917 ல் ரஷ்யாவில் கம்யூனிஸ்ட் புரட்சி நடக்கும் வரையில், அந்த வரைபடத்தில் பெரிய மாற்றங்கள் ஏற்படவில்லை. ரஷ்யர்கள் உக்ரைனிய பிரதேசங்களை "குட்டி ரஷ்யா" என்று அழைத்தனர். அங்கே உக்ரைனிய மொழி என்ற, தனியான மொழி பேசும், மக்கள் இனம் எதுவும் அடையாளம் காணப் படவில்லை. 

நீண்ட காலமாக, உக்ரைனிய மொழி என்ற ஒன்றிருப்பதாக ரஷ்யர்கள் நம்ப மறுத்தார்கள். அவர்களைப் பொறுத்த வரையில், அது ஒரு ரஷ்ய மொழியின் வட்டார வழக்கு மொழி மட்டுமே. "எது தனித்துவமான மொழி? எது வட்டார வழக்கு மொழி?" என்பதை வரையறுப்பது, இன்றும் கூட மொழியியலாளர்களினால் முடியாமல் உள்ளது.  "இந்தியத் தமிழும், ஈழத் தமிழும், இரண்டு வேறு மொழிகளா?" இந்தக் கேள்வியைக் கேட்டால், (தமிழர்கள்) எல்லோரும், கேட்டவருக்கு பைத்தியம் பிடித்து விட்டது என்று நினைப்பார்கள். ஆனால், ஈழத் தமிழானது ஒரு தனித்துவமான மொழியாக பரிணமிக்கக் கூடிய, அனைத்து அம்சங்களையும் தன்னுள் கொண்டுள்ளது. 

இப்படி ஒரு வரலாற்றை கற்பனை செய்து பாருங்கள். "நாம் பேசுவது தமிழ் அல்ல, அது தனித்துவமான ஈழ மொழி" என்றொரு அரசியல் இயக்கத்தை, ஈழத் தமிழர்கள் முன்னெடுக்கின்றனர். அப்போது, தமிழகத் தமிழ் தேசியவாதிகளின் எதிர்வினை எப்படி இருக்கும்? அவர்கள், ஈழத் தமிழ் தேசியவாதிகளின் சுயநிர்ணய உரிமையை ஆதரிப்பார்களா? நிச்சயமாக இல்லை. "ஈழ மொழி என்ற ஒன்று உலகில் இல்லை. அது பொதுவான தமிழ் மொழியின் வட்டார வழக்கு மொழி" என்று வாதாடுவார்கள். இந்த தர்க்கம் தான், உக்ரைனில் ரஷ்ய- உக்ரைனிய இனப் பிரச்சினையின் அடிப்படை. 

ரஷ்ய மொழியும், போலிஷ் மொழியும் ஒரே மாதிரி ஒலிக்கும், ஸ்லாவிய மொழிக் குடும்பத்தை சேர்ந்த சகோதர மொழிகள். ரஷ்யா, போலந்து ஆகிய நாடுகளுக்கு இடையில் வாழும் மக்கள், இரண்டுக்கும் இடைப்பட்ட மொழிகளைப் பேசுவதில் வியப்பில்லை. பெலாரஸ், மற்றும் உக்ரைனிய மொழிகள் குறிப்பிடத் தக்கவை. அவை சில நேரம் ரஷ்ய மொழி போன்றிருக்கும், சில நேரம் போலிஷ் மொழி போன்றிருக்கும். பெலாரஸ், உக்ரைனிய மொழிகளைப் பேசும் மக்கள், ரஷ்ய மொழியினை படிக்காமலே, ரஷ்யர்கள் பேசுவதைப் புரிந்து கொள்ள முடியும். ஆனால், ரஷ்யர்கள் அந்த மொழிகளைப் புரிந்து கொள்ள சிரமப் படுவார்கள். அதற்கு காரணம், நவீன காலத்தில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்கள், மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சி. 

ரஷ்ய திரைப்படத் துறை, பதிப்பகங்கள் என்பன, வணிக ரீதியாக மிகவும் பலமானவை.  அவர்கள் தயாரித்து விநியோகம் செய்யும் திரைப்படங்கள், தொலைக்காட்சி, வானொலி நிகழ்ச்சிகளின் தாக்கம் மிகவும் அதிகம். உதாரணத்திற்கு, தமிழகத்தின் திரைப்படத் துறை, வணிக ரீதியாக பலமாக இருப்பதால், ஈழத்திலும் இந்தியத் தமிழ் படங்களைத் தான் பார்க்கிறார்கள். அதனால், ஈழத் தமிழர்களுக்கு, இந்தியத் தமிழ் நன்றாகப் புரியும். அதே நேரம், இந்தியத் தமிழர்கள், ஈழத் தமிழைப் புரிந்து கொள்ள சிரமப் படுவார்கள். 

போலந்து, பின்னர் ஜெர்மனி, ஆஸ்திரியா ஆகிய நாடுகளை சேர்ந்த சக்கரவர்த்திகளினால் ஆளப் பட்ட உக்ரைனின் மேற்குப் பகுதிகள், தனித்துவமான கலாச்சாரத்தைக் கொண்டிருந்தன. 1917 ம் ஆண்டு, சோவியத் ஒன்றியம் உருவானது. உக்ரைனியர்களின் தனித்துவமான கலாச்சாரத்தை அங்கீகரித்த கம்யூனிஸ்டுகள், அதனை தனியான குடியரசாக்கினார்கள். ஆயினும், ரஷ்ய, உக்ரைனிய மொழித் தூய்மைவாதிகளுக்கு இடையிலான முரண்பாடுகள் தொடர்ந்தும் நிலவி வந்தன. ஒரு புறம், உக்ரைனிய தேசியவாதிகள், தமது மொழி தனித்துவமானது என்று நிரூபிப்பதற்காக, தங்களது சக்தியை செலவிட்டார்கள். மறு புறம், ரஷ்ய தேசியவாதிகள், உக்ரைன் ஒரு தனியான மொழி என்பதை ஏற்றுக் கொள்ள மறுத்தார்கள். 

மேற்கில் வாழ்ந்தவர்கள், அதி  தீவிர உக்ரைனிய தேசியவாதிகளாகவும், கிழக்கே வாழ்ந்தவர்கள், அதி தீவிர ரஷ்ய தேசியவாதிகளாகவும் இருந்தனர். இப்போதும் அந்த நிலைமையில் பெரிய மாற்றம் எதுவும் ஏற்படவில்லை. ஆனால், மத்திய பிரதேசங்களில், குறிப்பாக தலைநகரான கீவில் வாழ்ந்தவர்கள், மிக இலகுவாக தமது தாய்மொழியை மாற்றிக் கொண்டனர். உக்ரைனிய மொழி பேசும் நாட்டுப்புறங்களில் இருந்து வந்து கீவில் குடியேறியோர், பொருளாதார நலன்களுக்காக தம்மை ரஷ்யர்கள் என்று அழைத்துக் கொண்டனர். ரஷ்யர்களாக மாறிய உக்ரைனியர்களைப் போன்று, உக்ரைனியர்களாக மாறிய ரஷ்யர்களும் இருக்கின்றனர். அவர்கள் வாழும் பிரதேசம், எந்த அரசியல் சக்தியின் மேலாதிக்கத்தின் கீழ் இருக்கின்றது என்பதைப் பொறுத்து, அவர்களது "தாய்மொழி"யும் மாறுபட்டது.     

உக்ரைன், உலகிலேயே மிகப் பெரிய நாடுகளில் ஒன்று. அதனால், பொருளாதார வேறுபாடும் தெளிவாகத் தெரியக் கூடியதாக உள்ளது. வழமையாக, மக்கள் அடர்த்தி நிறைந்த தலைநகர் கீவ், பொருளாதாரத்தில் முன்னனியில் நிற்கிறது. அங்கே ஒருவரின் வருடாந்த தனி நபர் வருமானம்(bnp):7500 யூரோக்கள். உக்ரைனிய மொழி பேசும் மக்கள் வாழும் மேற்குப் பகுதி, பயிர் செய்கைக்கு ஏற்ற வளமான மண்ணைக் கொண்டது. அதனால், பெரும்பாலும் விவசாயப் பொருளாதாரத்தை மட்டுமே நம்பியுள்ளது. ஆயினும், உக்ரைனில், பொருளாதாரத்தில் பின்தங்கிய, வறுமையான பகுதியும் அது தான். அங்கே ஒருவரின் வருடாந்த தனி நபர் வருமானம் சராசரி 1500 யூரோக்கள். 

உக்ரைனில் ரஷ்ய மொழி பேசும் மக்கள் வாழும், தென் கிழக்கு பிராந்தியம், தொழில்துறை வளர்ச்சி கண்ட பகுதியாகும். சுரங்கத் தொழிலும், பல்வேறு தொழிற்சாலைகளும் நிறைந்து காணப் படுகின்றன. அதனால், பொருளாதார வளர்ச்சியும் அதிகம். அங்கே ஒருவரின் வருடாந்த தனிநபர் வருமானம் 3000 யூரோக்கள். ஆகவே, உக்ரைன் மொழி பேசும் மேற்குப் பகுதிக்கும், ரஷ்ய மொழி பேசும் கிழக்குப் பகுதிக்கும் இடையில், பாரிய பொருளாதார ஏற்றத்தாழ்வு இருப்பதைக் காணலாம். உலகம் முழுவதும், தேசியவாத இயக்கங்களின் வளர்ச்சிக்குப் பின்னால், பொருளாதாரக் காரணிகள் உள்ளன. பலர் இதனை கவனத்தில் எடுக்கத் தவறி விடுகின்றனர். 

உக்ரைனின் இனப் பிரச்சினைக்கு தீர்வு என்ன?
அமெரிக்கா, ,அற்றும் மேற்குலக நாடுகளைப் பொறுத்த வரையில், உக்ரைன் ஒற்றையாட்சியின் கீழ் இருக்க வேண்டும் என்று விரும்புகின்றன. சில சோவியத் கால சட்டங்களை தவிர்த்துப் பார்த்தால், உக்ரைன் சோவியத் ஒன்றியத்தில் இருந்து பிரிந்து, சுதந்திர தேசமான காலத்தில் இருந்து, அங்கே ஒற்றையாட்சி முறைமை நிலவுகின்றது. உக்ரைனிய மாகாணங்களுக்கான அதிகாரம், இலங்கையில் உள்ள மாகாண சபை முறையை போன்றது. கீவ் தான் அனைத்தையும் தீர்மானிக்கும் அதிகாரம் வாய்ந்தது. விதிவிலக்காக, கிரீமியா, பிராந்திய முக்கியத்துவம் காரணமாக, தன்னாட்சி அதிகாரம் பெற்றிருந்து. 

கிரீமியா பொது வாக்கெடுப்பு நடந்த பொழுது, மேற்கத்திய ஜனநாயக நாடுகள் அதனை ஏற்றுக் கொள்ள மறுத்தன. ரஷ்ய இராணுவம் நிலை கொண்டிருந்ததால், அது செல்லுபடியாகாது என்று வாதிட்டன. ஆனால், இங்கே தான் மேற்குலகின் இரட்டை வேடம் அம்பலமாகின்றது. கொசோவோ தனி நாடாவதற்கான பொது வாக்கெடுப்பு நடந்த பொழுது, அங்கே நேட்டோ படைகள் நிலை கொண்டிருந்தன. அதற்கு முதலே, செர்பியர்கள், மற்றும் பல சிறுபான்மை இன மக்கள், இனச் சுத்திகரிப்பு செய்து விரட்டப் பட்டிருந்தனர். கொசோவோவில் நடந்த பொது வாக்கெடுப்பை அங்கீகரித்த மேற்குலக நாடுகள், கிரீமியா வாக்கெடுப்பை நிராகரித்தன. மேற்குலகம் இந்த இரட்டை அளவுகோலை எல்லா இடங்களிலும் பிரயோகித்து வந்துள்ளது. உண்மையில், இந்த மேற்குலக நாடுகள், ஜனநாயகத்தை ஆதரிக்கின்றனவா அல்லது எதிர்க்கின்றனவா?

தற்போது நடக்கும் உக்ரைனிய பிரச்சினைக்கு, போரைத் தவிர்த்து, இராஜதந்திர ரீதியான முடிவு காணப்பட வேண்டும் என்றே பலரும் விரும்புவார்கள். "உலக மக்களே! மிகப் பெரிய ஆபத்து வரப் போன்றது... ரஷ்யா உக்ரைன் மீது படையெடுக்கப் போகின்றது..." என்று பயமுறுத்தி, நேட்டோவின் இராணுவ செலவினத்தை அதிகரிக்கும் மேற்குலக நாடுகள், இராஜதந்திர பேச்சுவார்த்தைகள் குறித்து சிறிதளவேனும் அக்கறை காட்டவில்லை. "ரஷ்யா 19 ம் நூற்றாண்டு மனோபாவத்தோடு நடந்து கொள்கிறது. நாம் அதற்கு 21 ம் நூற்றாண்டின் கருவிகளைக் கொண்டு பதிலடி கொடுப்போம்...."(- அமெரிக்க வெளிவிவகார அமைச்சர் ஜோன் கெரி) இது போன்ற வாய்ச் சவடால்களுக்கு மட்டும் குறைவில்லை. 

உக்ரைன் பிரச்சினை தொடர்பான உண்மை நிலவரமோ, மேற்குலகின் பரப்புரைகளுக்கு மாறாக உள்ளது. உக்ரைன் பிரச்சினைக்கு, "21 ம் நூற்றாண்டுத் தீர்வு" ஒன்றை ரஷ்யா முன்மொழிந்தது. அமெரிக்காவும், மேற்கு ஐரோப்பாவும் அதனை பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ள மறுக்கின்றன. அந்த தீர்வு என்ன? உக்ரைன் ஒரு சமஷ்டிக் குடியரசாக மாற வேண்டும் என்று ரஷ்யா கூறி வருகின்றது. 

அதாவது, இன்றுள்ள உக்ரைனிய மாகாணங்கள் ஒவ்வொன்றிலும், சமஷ்டி அமைப்பு கொண்ட மாநில அரசுக்கள் ஸ்தாபிக்கப் பட  வேண்டும். அதற்கான அதிகாரங்களை, கீவில் உள்ள மத்திய அரசு பகிர்ந்தளிக்க வேண்டும். மாநில அரசுகள், கல்வி, பொருளாதாரம், கலாச்சாரம் போன்றவற்றில் முடிவெடுக்கும் அதிகாரங்களை மட்டும் கொண்டிருக்கப் போவதில்லை. அதற்கும் அப்பால், வரி அறவிடவும், வெளிநாட்டுத் தொடர்புகளைப் பேணவும் அதிகாரம் கொண்டிருக்கும். 

சமஷ்டி மாநிலங்களைக் கொண்ட உக்ரைன், மேற்குலக சார்பாகவும் இருக்காது, அதே நேரம் ரஷ்யா சார்பாகவும் இருக்காது. ஏனென்றால், எதிரெதிர் அரசியல் முரண்பாடுகளை கொண்ட மாநில அரசுகள், அந்தளவு இலகுவாக ஒத்துழைக்க மாட்டா. அதனால், உக்ரைன், ஐரோப்பிய ஒன்றியத்தில், அல்லது நேட்டோ இராணுவக் கூட்டமைப்பில் அங்கத்தவராக சேர முடியாது. அதே நேரம், ரஷ்யா தலைமையிலான கூட்டமைப்பிலும் சேர முடியாது. 

உண்மையில் இந்த சமஷ்டித் தீர்வுத் திட்டம், ஜனநாயகத் தன்மை வாய்ந்த அதிகாரப் பரவலாக்கல் மட்டுமல்ல. வல்லரசுப் போட்டிக்குள் சிக்கி சீரழியாமல், உக்ரைன் தனது சுதந்திரத்தை பாதுகாத்து நிமிர்ந்து நிற்க உதவும். ஆனாலும், மேற்குலக நாடுகள் சமஷ்டித் திட்டத்தை பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ள மறுத்து வருகின்றன. உக்ரைனில் தொடர்ந்தும் ஒற்றையாட்சி நிலைத்திருக்க வேண்டும் என்று விரும்புகின்றன. மேற்குலக நாடுகள், "ஜனநாயகம், சுதந்திரம், மனித உரிமைகள், சுயநிர்ணய உரிமை..." என்றெல்லாம் வாய் கிழியப் பேசுவது வெறும் போலி வேஷம். இந்த ஜனநாயக வேடதாரிகளை கண்டு ஏமாந்து போகும், அப்பாவிகள் பலர் இன்றைக்கும் இருப்பது தான் அவர்களது பலம்.


உக்ரைன் தொடர்பான முன்னைய பதிவுகள்:

1 comment:

Unknown said...

varalaaru nigazhvugal ungal ealuthin mulam megavum elimiyana pathivin mulamaga arikeren miikaa nanri