Saturday, May 24, 2014

ஐயோ ஆபத்து! சீனா இலங்கையில் ஊடுருவி விட்டது!


ஐயகோ! சீனா இலங்கையில் கால் வைக்கிறது, கை வைக்கிறது என்று இன்னமும் அலறிக் கொண்டிருப்பவர்களைப் பார்க்க முடிகின்றது. அவர்கள் ஒரு தடவை ஐரோப்பாவுக்கு வந்து பார்க்க வேண்டும் என்று அழைப்பு விடுக்கிறேன். சீனாவின் முழு உடம்பும் ஐரோப்பாவில் படுத்துக் கிடக்கிறது.

உணவுப் பொருட்களை தவிர, வீட்டுத் தளபாடங்கள், வாகனங்கள், மின்னணு சாதனங்கள், ஆடை அணிகலன்கள், இத்தியாதி இத்தியாதி, எல்லாமே Made in China தான். சீனாவுடன் வர்த்தகத் தொடர்பு முறிந்து விட்டால், 90% கடைகளை இழுத்து மூட வேண்டியிருக்கும். ஐரோப்பிய, அமெரிக்க உற்பத்திப் பொருட்களை விலை கொடுத்து வாங்குமளவிற்கு பெரும்பான்மை மக்களிடம் பண வசதி இல்லை.

ஐரோப்பிய முதலாளிகள், தொழிற்சாலைகளை அப்படியே பெயர்த்தெடுத்துக் கொண்டு போய் சீனாவில் போடுகிறார்கள். ஐரோப்பாவில் ஒரு கம்பனி திவாலானால், எவனாவது ஒரு சீன முதலாளி வந்து காப்பாற்ற மாட்டானா என்று ஏங்குகிறார்கள்.

சீனாவுடனான வர்த்தகம் அதிகரித்து வருவதால், ஆரம்ப பாடசாலைகளிலேயே சீன மொழி கற்பிக்கிறார்கள். சீன சுற்றுலாப் பயணிகளையும், மாணவர்களையும் கவர்ந்திழுப்பதற்காக விசா கட்டுப்பாடுகளை தளர்த்தி உள்ளார்கள். லண்டனில் சில ஆடம்பர அங்காடிகளில், சீன மொழி தெரிந்த விற்பனையாளர்களை பணிக்கமர்த்தி உள்ளனர்.

ஐரோப்பிய நிலவரங்களுடன் இலங்கையை ஒப்பிட்டால், அங்கே இப்போது தான் சீனா மெல்ல மெல்ல தொட்டுக் கொண்டிருக்கிறது போலத் தோன்றுகின்றது. அதற்கே இப்படிப் பதறினால், உங்கள் அறியாமை சிலருக்கு ஆதாயமாக மாறி விடும். கண் கெட்ட பின்னர் தான் சூரிய நமஸ்காரம் செய்வேன் என்று அடம்பிடித்தால், அதனால் யாருக்கு நஷ்டம்?

இலங்கையில் "சீனாவின் ஆதிக்கம்" என்பது என்ன? இலங்கையில், இந்தியாவில் அல்லது வேறொரு ஆசிய, ஆப்பிரிக்க நாட்டில் சீனாவின் முதலீடுகள் அதிகரிப்பதை வைத்து அப்படிக் கூறுகின்றீர்களா? இந்த நாடுகளில் இதுவரை காலமும் மேற்கத்திய நாடுகள் தான் ஆதிக்கம் செலுத்தி வந்துள்ளன. அமெரிக்கா, மேற்கு ஐரோப்பா, ஜப்பான் ஆகியவற்றின் ஆதிக்கம் தான் இவ்வளவு காலமும் இருந்தது. இலங்கையிலும் தான். அதை நீங்கள் மறுக்க முடியாது. தற்போது, அவர்களுக்குப் போட்டியாக சீனா வந்துள்ளது.

இலங்கை போன்ற சிறிய நாட்டைப் பொறுத்த வரையில், அங்கு ஏதாவது ஒரு பெரிய நாட்டின் ஆதிக்கம் இருந்து கொண்டிருக்கும். மேற்கத்திய நாடுகளும், இந்தியாவும் செய்யத் தவறிய பெரும் கட்டுமானப் பணிகளில் சீனா முதலிடுகின்றது. "ஆங்கிலேயர்கள் எமக்கு ரோட்டுப் போட்டார்கள், ரயில் பாதை போட்டார்கள்..." என்று, இன்றைக்கும் பலர் சொல்லக் கேட்டிருப்பீர்கள். அது போலத் தான் இதுவும். அன்று ஆங்கிலேயர்கள், இன்று சீனர்கள்.

அனைத்து அந்நிய ஆதிக்க சக்திகளும், தமது நன்மை கருதி தான் நடந்து கொள்கின்றன. அதாவது அவர்களது கம்பனிகளுக்கு புதிய ஒப்பந்தங்கள் தேவை. கட்டுமானப் பணிகளுக்கு, சீன நிறுவனம் ஒன்றை ஒப்பந்தம் செய்ய வேண்டும் என்ற நிபந்தனையுடன், சீன அரசு இலங்கைக்கு கடன் கொடுக்கிறது. அதைத் தான், இவ்வளவு காலமும் ஜப்பான் செய்தது. IMF, உலக வங்கி போன்றன, மேற்கத்திய நிறுவனங்களை ஒப்பந்தம் செய்ய வேண்டும் என்ற நிபந்தனையுடன் கடன் கொடுத்தன.

முதலாளித்துவ உலகில் எல்லாமே இலாபம் கருதித் தான் நடக்கிறது. சீனா மட்டுமல்ல, அமெரிக்கா, பிரிட்டன், ஜப்பான், இந்தியா ஆகிய நாடுகளின் ஆதிக்கத்தால் மக்களுக்கு பெரியளவுக்கு நன்மை கிடைக்க வாய்ப்பில்லை. ஏனென்றால் இந்த நாடுகளின் ஆதிக்கம் முழுவதும், பெரும் முதலாளிகளை வளர்ப்பதில் மட்டுமே குறியாக இருக்கின்றது. அந்நிய ஆதிக்க சக்திகளுடன் ஒப்பந்தம் செய்வதன் மூலம், ஒரு சில உள்ளூர் தரகு முதலாளிகளுக்கு நன்மை கிடைக்க வாய்ப்புண்டு. அவர்களோடு சேர்ந்து, குறிப்பிட்டளவு மேட்டுக் குடியினரும் பயன் பெறுவார்கள்.

சீனா என்ன தான் முயன்றாலும், அதனால் இலங்கையில் ஆழமாக வேரூன்றியுள்ள மேற்கத்திய, இந்திய ஆதிக்கத்தை எதிர்த்துப் போட்டியிட முடியாது. கலாச்சாரத்தை பொறுத்தவரையில், இன்றைக்கும் ஐரோப்பிய, இந்திய ஆதிக்கமே மேலோங்கிக் காணப் படுகின்றது. அதனை சீனாவால் மாற்றியமைக்க முடியாது.

மேட்டுக்குடி இளைஞர்களை உதாரணமாக எடுத்துப் பார்க்கலாம். ஏற்கனவே சில அந்நிய சக்திகள், அவர்கள் மேல் ஆதிக்கம் செலுத்துகின்றன. ஆங்கில மொழி (பிரிட்டிஷ் ஆதிக்கம்) நவ நாகரிகம் (அமெரிக்க ஆதிக்கம்) அரசியல், மதக் கருத்துக்கள் (இந்திய ஆதிக்கம்). இப்படியானவர்கள் தான் இலங்கையில் அதிகமாக உள்ளனர். அவர்கள் மேல் சீனாவின் ஆதிக்கம் செல்லுபடியாகாது. சீன ஆதிக்கம் என்பது ஒரு எல்லை வரையில் தான் செல்லுபடியாகும்.

இன்று சீனாவுக்கு எதிராக போர்க் கொடி தூக்குபவர்களில் எத்தனை பேர், நாளைக்கு இலங்கையில் அமெரிக்கா இராணுவ தளம் அமைத்தால் எதிர்க்கப் போகிறார்கள்?

இலங்கையில் சீன ஆதிக்கத்தை எதிர்ப்பதாக காட்டிக் கொள்பவர்கள் கூறும் நியாயம் இது:

//இலங்கையில் சீனா இராணுவ தளம் அமைக்க முற்படுகிறது. நமக்கு அமெரிக்கா, சீனாவைவிட அந்நிய நாடு. சீனா தக்க சமயத்திற்கு காத்துக்  கொண்டிருக்கிறது.// 

இதுவரை கால வரலாற்றில், சீனா வேறு ஒரு நாட்டில் இராணுவ தளம் அமைத்ததாக எந்த தகவலும் இல்லை. அமெரிக்கா உலகில் அதிக இராணுவ தளங்களை வைத்துள்ளது. இலங்கைக்கு அருகில் உள்ள ஆப்கானிஸ்தானில், பாகிஸ்தானில், டியாகோ கார்சியாவில் அமெரிக்க இராணுவ தளங்கள் உள்ளன. இலங்கையில் அமெரிக்கா இராணுவ தளம் அமைக்காது என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. ஏற்கனவே அமெரிக்க படையினர், இலங்கையில் இராணுவப் பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், "சீனாவை விட, அமெரிக்கா நமக்கு அந்நிய நாடு" அல்ல. இலங்கையில் யாரும் சீனக் கலாச்சரத்தை பின்பற்றுவதில்லை. சீன மொழி படிப்பதில்லை. ஆனால், இலங்கையில் அமெரிக்க ஆதிக்கம், பிரிட்டிஷ் காலனியாதிக்கத்தின் தொடர்ச்சியாக இருந்து வருகின்றது. இலங்கையில் இன்றைக்கும் பெரும்பான்மையானோர் ஆங்கில மொழி படிக்கின்றனர். ஆங்கிலேய அல்லது அமெரிக்க கலாச்சாரம், இளைஞர்கள் மத்தியில் மிக வேகமாக பரவி வருகின்றது. அப்படி இருக்கையில், நாம் எவ்வாறு "அமெரிக்கா எமக்கு அந்நிய நாடு" என்று கூற முடியும்?


இது தொடர்பான முன்னைய பதிவுகள்: 

No comments: