Friday, February 13, 2015

உன்னைப் போல் ஒருவன் : உலகமயமாகும் புலி எதிர்ப்பு சினிமா


சில வருடங்களுக்கு முன்னர் வெளிவந்த, கமல்ஹாசன் நடித்த உன்னைப்போல் ஒருவன் திரைப்படத்தை பலர் பார்த்து இரசித்திருப்பார்கள். கதையின் கரு வழமையான தீவிரவாதிகள் பற்றிய கதை தான். ஆயினும், எதற்காக தீவிரவாதத்தை ஒழித்துக் கட்ட வேண்டும் என்று கமல் அந்தப் படத்தில் ஒரு லெக்சர் அடிப்பார். அதைப் பார்த்து இரசித்த தமிழர்கள், குறிப்பாக புலிகளை ஆதரிக்கும் தமிழ் தேசியவாதிகள், "அது முஸ்லிம் பயங்கரவாதிகளுக்கு மட்டுமே எதிரான படம்" என்று நினைத்தால் ஏமாந்து போவார்கள்.

கமல்ஹாசன் நடித்து வெளியான சர்ச்சைக்குரிய விஸ்வரூபம் படம் வெளியான நேரம், கமல் அதே கதையில் தாலிபானுக்கு பதிலாக புலிகளை வைத்துக் கூட எடுத்திருக்கலாம். விஸ்வரூபம் புலிகளுக்கும் எதிரானது என்று, அந்தத் திரைப்படம் தொடர்பான விமர்சனக் கட்டுரையில் எழுதி இருந்தேன். அன்று விஸ்வரூபம் திரைப்படத்தை பார்த்து மகிழ்ந்த, புலி ஆதரவு தமிழ் தேசியவாதிகளுக்கு அது உவப்பானதாக இருந்திராது. (பார்க்க: விடுதலைப் புலிகளையும் புண்படுத்திய விஸ்வரூபம்  http://kalaiy.blogspot.nl/2013/02/blog-post_16.html ) என்ன செய்வது? உலக யதார்த்தம் அவர்கள் நினைப்பதற்கு மாறாகவே இருக்கின்றது.

உன்னைப் போல் ஒருவன் திரைப்படம், வேறொரு இந்தியப் படத்தின் (A Wednesday) ரீமேக் தான். அதை இன்னொரு தடவை ரீமேக் செய்து, ஆங்கிலத்தில் எடுத்திருக்கிறார்கள். "A Common Man" (http://www.imdb.com/title/tt2104837/) என்ற பெயரில், இலங்கையில் தயாரிக்கப் பட்டு 2013 ம் ஆண்டு வெளியானது.

ஆஸ்கார் விருது பெற்ற அமெரிக்க நடிகர் Ben Kingsley நடித்த அந்தத் திரைப்படம், முழுக்க முழுக்க கொழும்பு நகரில் படமாக்கப் பட்டுள்ளது. படத்தை தயாரித்ததும் இலங்கையை சேர்ந்த நிறுவனம் தான். சிறந்த திரைப்படம், சிறந்த நடிகர், சிறந்த இயக்குனர் ஆகியவற்றுக்கான சர்வதேச விருதுகளைப் பெற்றுள்ளது.

உன்னைப்போல் ஒருவன், இந்தியாவில் குண்டு வைத்த முஸ்லிம் தீவிரவாதிகளைப் பற்றிய கதையை சொல்கிறது. அதற்கு மாறாக, A Common Man தமிழ்த் தீவிரவாதிகள் பற்றிய கதையை சொல்கிறது என்பது மட்டுமே வித்தியாசம். காட்சிக்கு காட்சி, வசனத்திற்கு வசனம், படம் முழுவதும் உன்னைப் போல் ஒருவனை நினைவுபடுத்துகின்றது.

A Common Man படத்தின் தொடக்கத்திலேயே, 1996 ம் ஆண்டு, கொழும்பு நகர மத்தியில் புலிகள் நடத்திய தற்கொலைக் குண்டுத் தாக்குதலான, மத்திய வங்கி குண்டு வெடிப்பை காட்டுகிறார்கள். உன்னைப்போல் ஒருவன் கமல் மாதிரி, "காமன் மேன்" ஆக வரும் பென் கிங்ஸ்லி, படத்தின் இறுதிக் கட்டத்தில், தென்னிலங்கையில் புலிகள் நடத்திய முக்கியமான குண்டுவெடிப்பு சம்பவங்களை பட்டியலிடுவார்.

அமெரிக்க நடிகரான Ben Kingsley யும், பிரிட்டிஷ் நடிகரான Ben Cross உம் பிரதானமான பாத்திரங்களில் நடித்துள்ளார்கள். அவர்களைத் தவிர ஏனையோர் இலங்கை நடிகர்கள். சிறிலங்கா பொலிஸ், சிறிலங்கா இராணுவம் படத் தயாரிப்புக்கு ஒத்துழைப்பு வழங்கியுள்ளன. அமெரிக்க, இலங்கை கூட்டுத் தயாரிப்பு என்று சொல்லப் பட்டாலும், இந்தியக் கலைஞர்களும் படத் தயாரிப்பில் பங்களித்துள்ளார்கள்.

சிறிலங்கா அரசின் புலி எதிர்ப்புக் கருத்துக்களை சர்வதேசியமயப் படுத்தி இருக்கும், A Common Man திரைப்படத்திற்கு இன்று வரையில் யாரும் எதிர்ப்புத் தெரிவிக்காதது ஆச்சரியத்திற்குரியது. சென்னையில் சிறிலங்கா அரசை விமர்சிக்கும் பிரசன்ன விதானகேயின் சிங்களத் திரைப்படம் காண்பிக்கப் பட்ட நேரம், அதை "நுணுக்கமான இனப்படுகொலை" என்று சிலர் உளறிக் கொண்டு திரிந்தனர்.

ஹிந்தி, சிங்கள மொழிகளில் கூட, புலிகளை கொச்சைப் படுத்தும் சினிமா வரக்கூடாது என்று தடுக்கும் போலித் தமிழ் தேசியவாதிகளுக்கு, இந்த ஆங்கிலத் திரைப்படம் வெளியானது தெரியாதா? மெட்ராஸ் கபே, கத்திக்கு எதிராக பொங்கி எழுந்தவர்கள், காமன் மேனை எதிர்க்க முடியாமல் பெட்டிப் பாம்பாக அடங்கிய மாயம் என்ன? அமெரிக்கா சம்பந்தப் பட்டிருப்பதால் எல்லோருக்கும் நடுக்கம் வந்து விட்டது போலும்.

கமலின் உன்னைப்போல் ஒருவன், விஸ்வரூபம் போன்ற முஸ்லிம் தீவிரவாத எதிர்ப்புப் படங்கள், அடிப்படையில் தமிழ்த் தீவிரவாதத்திற்கும் எதிரான அரசியலைத் தான் பேசுகின்றன. அத்தகைய படங்களை வரவேற்று, ஆதரிக்கும் தமிழர்கள் புலி ஆதரவாளர்களாக இருந்தாலும், இந்திய - இலங்கை அரசுக்களின் சூழ்ச்சி வலைக்குள் சிக்கிக் கொள்கின்றனர்.

போலித் தமிழ் தேசியவாதிகளின் மொழியில் சொன்னால், "நுணுக்கமான இனப்படுகொலை" இது தான். புலிகளை அழிக்கப் பட வேண்டிய பயங்கரவாத சக்தியாக சித்தரிக்கும் A Common Man, உலகம் முழுவதும் சினிமா இரசிகர்களின் மனங்களில் நஞ்சூட்டிக் கொண்டிருக்கிறது. உண்மையில் தமிழ் உணர்வாளர்கள் ஒன்று திரண்டு எதிர்க்க வேண்டிய முக்கியமான படம் இது தான்.

இன்றைக்கும் சில இந்து, அல்லது கிறிஸ்தவ அடிப்படைவாத தமிழர்கள், இஸ்லாமியருக்கு எதிரான வெறுப்புணர்வு காரணமாக, "முஸ்லிம் பயங்கரவாதம் அழிக்கப் பட வேண்டும்" என்று வாதாடிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களது முஸ்லிம் வெறுப்பு அரசியல், புலிகளுக்கும் எதிரானது என்ற உண்மையை அவர்கள் உணர்வதில்லை. அது எப்படி சாத்தியமாகும் என்று அறிய விரும்புவோர், உன்னைப்போல் ஒருவன், A Common Man ஆகிய இரண்டு திரைப் படங்களையும் பார்க்க வேண்டும்.



இதனுடன் தொடர்புடைய முன்னைய பதிவுகள்:

No comments: