Friday, March 06, 2015

முன்னாள் போராளி பகீரதியின் கைதும், வன்னியில் மறையாத வர்க்க பேதமும்

பிரான்சில் வதிவிட அனுமதி பெற்ற பகீரதி என்ற பெண், தனது எட்டு வயது குழந்தையுடன் இலங்கையில் தனது ஊருக்கு சென்று திரும்பியவர், கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப் பட்டு தடுத்து வைக்கப் பட்டுள்ளார்.

புலம்பெயர்ந்த நாடுகளில் உள்ள (புலி ஆதரவு) தமிழ் ஊடகங்கள், அவரை "சாதாரண பெண்" என்று குறிப்பிட்டாலும், முன்னொருகாலத்தில் புலிகளின் தளபதியாக இருந்த காரணத்தினாலேயே கைது செய்யப் பட்டுள்ளதாக தெரிய வருகின்றது. அவரது கணவரும் பிரான்சில் ஒரு முக்கியமான புலிகளின் பிரமுகர் தான். இறுதிப் போர் தொடங்குவதற்கு முன்னரே, பிரான்ஸ் சென்ற பகீரதி, இப்போது தான் நாடு திரும்பியுள்ளார்.

இதிலிருந்து சில உண்மைகள் தெரிய வருகின்றன. மகிந்த ஆட்சி மறைந்து, மைத்திரி ஆட்சி வந்தாலும், முன்னாள் புலிகள் விடயத்தில் அரசு இயந்திரம் ஒரே மாதிரித் தான் செயற்படுகின்றது. பெரும்பான்மையானோர் அரசாங்கத்தை (ஜனாதிபதி + மந்திரி சபை) அரசு என்று தவறாகப் புரிந்து கொள்கிறார்கள். ஆட்சியாளர்கள், கட்சிகள் மாறலாம், ஆனால் அதிகாரிகளும், அரசின் கொள்கைகளும் மாறுவதில்லை.

பகீரதி முன்னாள் புலித் தளபதி என்ற விடயம், ஊரில் அவரைத் தெரிந்தவர்களாலேயே காட்டிக் கொடுக்கப் பட்டுள்ளது. அது பகீரதியின் உறவினர்கள் என்று பிரான்சில் வாழும் அரசியல் ஆர்வலர் ஒருவர் கூறுகின்றார்.

இது குறித்து வன்னியை பூர்வீகமாக கொண்ட மூதாட்டி ஒருவருடன் உரையாடும் பொழுது கேட்டேன். "சாப்பாட்டுக்கு வழியில்லாதவர்கள்... தோட்டக் காட்டு (மலையக) சனங்கள் தான் இராணுவத்திற்கு காட்டிக் கொடுப்பவர்கள்... அவர்கள் எப்போதும் அப்படித் தான்..." என்று முன்முடிவுகளுடன் கூறினார். அந்தக் கூற்றில் எள்ளளவும் உண்மையில்லை. இருப்பினும், மலையக கூலித் தொழிலாளர்கள் மீதான, யாழ்ப்பாணத் தமிழ் உயர் சாதியினரின் காழ்ப்புணர்வின் வெளிப்பாடு அப்படித் தான் இருக்கும்.

வன்னியில் புலிகளின் ஆட்சி நடந்த காலத்தில், "சாப்பாட்டுக்கு வழியில்லாததுகள், அரசின் நிவாரணப் பொருட்களை பெற்றுக் கொள்வதற்கு போட்டி போட்டார்கள்..." என்று சொல்லி வந்தனர். இருப்பவனுக்கும், இல்லாதவனுக்கும் இடையிலான வர்க்க வேறுபாட்டை, இதை விடத் தெளிவாக ஒரு சாமானியனால் கூற முடியாது. ஆனால், படித்த மேதாவிகள் மட்டும் "தமிழ் மக்களுக்கு இடையில் வர்க்க வேறுபாடு கிடையாது" என்று முழுப் பூசணிக்காயை சோற்றுக்குள் மறைத்து வருகிறார்கள்.

வயதில் மூத்தவர் என்பதால் அந்த மூதாட்டியுடன் நான் விவாதிக்கவில்லை. இருப்பினம், அவர் உட்பட, யாழ் சைவ- வேளாள கருத்தியல் கொண்ட வன்னியை பூர்வீகமாக கொண்ட நண்பர்கள் சிலர், "சாப்பாட்டுக்கு வழியில்லாத தோட்டக்காட்டு சனங்கள்" பற்றி, பல தடவைகள் என்னிடம் குறை கூறியுள்ளனர்.

அந்த மூதாட்டியுடன் பேசும் பொழுது, அண்மையில் காலச்சுவடு இதழில் மலையகத் தமிழர் பற்றி கருணாகரன் எழுதிய கட்டுரைக்கு எதிர்வினையாக, அ. யேசுராசா எழுதிய கட்டுரை நினைவுக்கு வந்தது. "யாழ்ப்பாணத் தமிழர், மலையகத் தமிழர் முரண்பாடு ஒரு மிகைப் படுத்தல் என்றும், இப்போது எல்லோரும் தமிழ்த் தேசியத்தின் பெயரால் ஒன்று சேர்ந்து விட்டார்கள் என்றும்," அ. யேசுராசா எழுதியிருந்தார்.

அ. யேசுராசா என்னால் மதிக்கப் படும் ஒரு மூத்த எழுத்தாளர். பல வருட கால இலக்கிய அனுபவமும், இடதுசாரி முகாமுடன் பரிச்சயமும் கொண்டவர். அவருக்கு தமிழர்கள் மத்தியில் நிலவும் வர்க்க வேறுபாடு பற்றி எதுவும் தெரியாது என்று நான் நினைக்கவில்லை. ஆனால், தமிழ் தேசியவாதிகள் எல்லோரும் வர்க்க வேறுபாடுகளை மூடி மறைப்பது போன்று தான் அவரும் நடந்து கொள்கிறார். இதுவும் ஒரு வகை "மகிந்த சிந்தனைய" தான். மகிந்த ராஜபக்ச "நாம் எல்லோரும் இலங்கையர்" என்றார். இவர்கள் "நாம் எல்லோரும் தமிழர்கள்" என்கிறார்கள்.

மலையகத்தில் நடந்த இனக் கலவரங்களுக்குப் பின்னர், பெருந்தோட்டத் தொழிலாளர்களான ஆயிரக் கணக்கான தமிழ் அகதிகள் வன்னியில் குடியேற்றப் பட்டனர். இன்று அவர்கள் பல்கிப் பெருகி வன்னி மண்ணின் குடிமக்களாக வாழ்கின்றனர். இரண்டாவது, மூன்றாவது தலைமுறையினர் சுத்தமான யாழ்ப்பாணத் தமிழ் பேசுகின்றனர். ஆயினும். வன்னியில் வாழும் பாரம்பரிய நிலவுடைமை வர்க்கமான வெள்ளாள ஆதிக்க சாதியினருக்கும், மலையக விவசாயக் கூலித் தொழிலாளர்களுக்கும் இடையிலான வர்க்க முரண்பாடு இன்னும் மறையவில்லை.

வன்னியில் வாழும் தமிழ் மக்களுக்கிடையில் இன்னமும் நிலவும் வர்க்க முரண்பாடுகள், சில நேரம் பகை முரண்பாடுகளாக இருப்பதை, எம்முடன் பழகும் பல தமிழர்களுடனான உரையாடலின் மூலம் அறிய முடிகின்றது. தமிழ் தேசியவாதிகள் விதந்துரைப்பது போன்று, ஈழப்போரும், புலிகளின் போராட்டமும் வர்க்க முரண்பாடுகளை அழிக்கவில்லை. மாறாக, தமிழ் தேசிய அரசியலுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளப் பட்டது.

வெளிநாடுகளில் இருந்து பணம் அனுப்பிக் கொண்டிருந்த நிலவுடைமை வர்க்கத்தின் ஆதரவும், போராளிகளாக மனித வளத்தை வழங்கிக் கொண்டிருந்த கூலித் தொழிலாளர் வர்க்கத்தின் ஆதரவும் புலிகளுக்குத் தேவைப் பட்டது. இன்று, ஆயுதப்போராட்டம் தோற்கடிக்கப் பட்டதற்குப் பின்னர், வர்க்க முரண்பாடுகள் பகிரங்கமாக வெளித் தெரிய ஆரம்பிக்கின்றன.

1 comment:

Unknown said...

நானும் யாழ்ப்பாண தமிழன் தான் . அப்படி சொல்லுபவர்கள் இருக்கிறார்கள் தான் இல்லை என்று சொல்லவில்லை.ஆனால் ஒரு சிலர் தான் .முழு இலங்கை தமிழ் மக்களும் இல்லை. முழு இலங்கை தமிழருக்கும் தெரியும் ஒரு இந்தியத் தமிழன் இல்லை என்றால் .இன்று எமது பிரபாகரன் அவர்கள் இல்லை என்பது. அவரின் பெயர் நவம்.